அறிவியல் உள்ளிட்ட ஆராய்ச்சி படிப்புகளில் பெண்களின் பங்கு சொற்ப அளவிலேயே உள்ளது. யுனெஸ்கோ அமைப்பு வெளியிட்டுள்ள தகவலிவன்படி, 2018ம் ஆண்டில் அறிவயில் உள்ளிட்ட ஆராய்ச்சி படிப்புகளில் பெண்களின் பங்கு 28.8 சதவீதமாக உள்ளது. இந்தியாவை பொறுத்தவரை, 13.9 சதவீதமாகவே உள்ளது.
அறிவியல் உள்ளிட்ட ஆராய்ச்சி படிப்புகளில் பெண்களும் ஆண்களுக்கு நிகராக சம அளவில் பங்கெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக ஐக்கிய நாடுகள் சபை, ஆண்டுதோறும் பிப்ரவரி 11ம் தேதி அறிவியலில் பெண்கள் பங்கு குறித்த சர்வதேச தினமாக கொண்டாடி வருகிறது. தலைசிறந்த அறிவியல் அறிஞர்கள், கணித மேதைகளை கணக்கெடுத்து பார்த்தால், அவர்களிலும் பெண்கள் அதிகளவில் இருப்பர். ஆனால், அறிவியல் உயர் படிப்புகளில், ஆண்களே அதிகளவில் பங்கெடுக்கின்றனர். இதில் பெண்களின் பங்கு மிகக்குறைந்த அளவே உள்ளது.
ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சாதனையாளர்கள்
1901ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், இயற்பியல், வேதியியல் மற்றும் மருத்துவம் பிரிவுகளில் 616 பேருக்கு 334 நோபல் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. இவர்களில் 19 பேர் மட்டுமே பெண்கள் ஆவர்.
இரட்டை நோபல் பரிசு வென்ற மேரி கியூரி உள்ளிட்ட 3 பெண்களே, இதுவரை இயற்பியில் பிரிவில் நோபல் பரிசு வென்றுள்ளனர்.
5 பெண்கள், வேதியியலில் நோபல் பரிசு வென்றுள்ளனர்.
மருத்துவம் பிரிவில், 12 பெண்கள் நோபல் பரிசு வென்றுள்ளனர்.
2019ம் ஆண்டில், கணித மேதைகளின் ஆஸ்கார் விருதாக கருதப்படும் அபேல் விருதை, அமெரிக்காவை சேர்ந்த காரென் உலென்பேக் வென்றார். இதன்மூலம் இந்த விருதை பெறும் முதல் பெண் என்ற பெருமையை பெற்றார். ஆனால், இந்த விருதை இதுவரை 36 ஆண் கணிதமேதைகள் பெற்றிருக்கின்றனர்.
கணித மேதைகளுக்கு வழங்கப்படும் மற்றொரு உயரிய விருதான தி பீல்ட்ஸ் விருது, ஈரானை சேர்ந்த காலஞ்சென்ற மர்யம் மிர்ஷாகஹானிக்கு வழங்கப்பட்டது. 1936ம் ஆண்டிலிருந்து இதுவரை 59 ஆண் கணித மேதைகள் இந்த விருதை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.