14 வயதிற்கு மேற்பட்டவர்கள் மருத்துவ சிகிச்சை அல்லது ஹார்மோன் சிகிச்சை இல்லாமல் பாலினத்தை சட்டப்பூர்வமாக மாற்ற அனுமதிக்கும் மசோதாவின் முதல் வரைவுக்கு செவ்வாயன்று ஸ்பெயின் அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது என்று அதன் சமத்துவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த மசோதா இப்போது ஒரு பொது விசாரணைக்குச் செல்லும், பின்னர் தேசிய அமைச்சரவையில் இரண்டாவது வரைவுக்கு வரும். இந்த மசோதாவை சட்டமாக மாற்ற, அதை ஸ்பெயின் நாடாளுமன்றத்தின் கீழ் சபை அங்கீகரிக்க வேண்டும்.
இப்போதுவரை ஸ்பெயினில், யாராவது தங்கள் பாலினத்தை அதிகாரப்பூர்வ பதிவுகளில் மாற்ற விரும்பினால், அங்குள்ள சட்டத்தின்படி முதலில் இரண்டு வருட ஹார்மோன் சிகிச்சை மற்றும் உளவியல் மதிப்பீடு தேவைப்படுகிறது. இப்போது முன்மொழியப்பட்டுள்ள இந்த சட்டம் 14 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இந்த தேவைகளை நீக்கும். இருப்பினும், 14 முதல் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு பெற்றோரின் ஒப்புதல் தேவைப்படும்.
பாலின சுய அடையாளம் என்றால் என்ன?
சுய அடையாளம், அல்லது ‘சுய-ஐடி’ என்பது ஒரு நபர் எந்தவொரு மருத்துவ பரிசோதனைகளையும் எதிர்கொள்ளாமலும் தங்களுக்கு விருப்பமான பாலினத்தை வெறுமனே அறிவிப்பதன் மூலம் சட்டப்பூர்வமாக அடையாளம் காண அனுமதிக்கப்பட வேண்டும். மூன்றாம் பாலின மக்களுக்கு எதிரான பாரபட்சம் பரவலாக இருப்பதால், இந்தியா உட்பட உலகெங்கிலும் உள்ள மூன்றாம் பாலின உரிமைக் குழுக்களின் நீண்டகால கோரிக்கையாக இது உள்ளது.
ஐரோப்பாவில், இந்த பிரச்சினை தாராளவாத-பழமைவாத வழிகளில் மட்டுமல்ல, எல்ஜிபிடி சமூகத்திலும் பிளவுபட்டுள்ளது என்று தி எகனாமிஸ்ட் தெரிவித்துள்ளது. ஒருவரின் விரும்பிய பாலினத்தை அறிவிப்பதற்கான தற்போதைய செயல்முறைகள் நீண்ட, விலை உயர்ந்த மற்றும் இழிவானவை என்று சிலர் நம்புகின்றனர். சில பெண்ணிய மற்றும் ஓரின சேர்க்கை உரிமைகள் குழுக்கள் அத்தகைய சட்டம் பெண்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று கூறுகின்றன. மேலும் ஓரின சேர்க்கை இளைஞர்களை ஹார்மோன்கள் மற்றும் அறுவை சிகிச்சை மூலம் அவர்கள் மூன்றாம் பாலினத்தவர் ஆக்க ஊக்குவிக்கப்படலாம் என்று கவலை தெரிவிக்கின்றனர்.
பாலியல் என்பது தேர்வு செய்யக்கூடிய ஒன்றல்ல என்று நம்பும் பெண்ணிய அமைப்புகள், சுய அடையாளத்தை அனுமதிப்பது பெண்களுக்கு எதிரான பாகுபாட்டைத் தடுக்கும் அனைத்து சட்டங்களையும் ஆபத்தில் ஆழ்த்தக்கூடும் என்று வலியுறுத்தியுள்ளன. அதற்கு பதிலாக சட்டமியற்றுபவர்களை அவர்கள் பாலின ஊதிய இடைவெளி போன்ற பிரச்சனைகளில் கவனம் செலுத்த வலியுறுத்துகின்றன.
முன்மொழியப்பட்ட சட்டத்திற்கு எதிராக பெண்ணியக் குழுக்கள் எதிர்ப்புத் தெரிவிக்கும் ஸ்பெயினில் கூட, ஜனாதிபதி பெட்ரோ சான்செஸ் “பெண்களின் உரிமைகளையும் பாதிக்கப்படும் மூன்றாம் பாலின குழுக்களையும் சமநிலையில், பாதுகாக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
சுய அடையாள ஐடி எங்கெல்லாம் சட்டபூர்வமானது?
வக்கீல் குழு ILGA (சர்வதேச லெஸ்பியன், கே, இருபால், டிரான்ஸ் மற்றும் இன்டர்செக்ஸ் அசோசியேஷன்) படி, டென்மார்க், போர்ச்சுகல், நார்வே, மால்டா, அர்ஜென்டினா, அயர்லாந்து, லக்சம்பர்க், கிரீஸ், கோஸ்டாரிகா, மெக்சிகோ (மெக்ஸிகோ நகரத்தில் மட்டுமே), பிரேசில், கொலம்பியா, ஈக்வடார் மற்றும் உருகுவே உள்ளிட்ட 15 நாடுகள் சுய அடையாளத்தை அங்கீகரிக்கின்றன.
டென்மார்க்கில், பாலின மாற்றத்தை முறைப்படுத்த சட்டத்திற்கு ஆறு மாத பிரதிபலிப்பு காலம் தேவைப்படுகிறது. போர்ச்சுகலில், ஒருவரின் பாலினத்தை இரண்டாவது முறையாக மாற்ற நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டும்.
இத்தாலி சுய அடையாளத்தை அனுமதிக்காது. இதேபோல் ஜெர்மனியும் அனுமதிக்கவில்லை. கடந்த மாதம் ஜெர்மனியில் ஒரு மசோதா வாக்கெடுப்புக்கு உள்ளனாது. 14 வயதிலிருந்தே பாலின மறுசீரமைப்பு அறுவை சிகிச்சையை பெற்றோரின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் செய்வதை சட்டப்பூர்வமாக்கியது, அத்துடன் அவர்களின் இயல்பான பாலினத்தின் அடிப்படையில் ஒருவரை மூன்றாம் பாலினத்தவர் என்று குறிப்பதற்கு 2,500 யூரோ அபராதத்தையும் அறிமுகப்படுத்தியது. ஹங்கேரியில், புதிதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டம் ஓரினச்சேர்க்கை மற்றும் பாலின மாற்றம் குறித்த அனைத்து உள்ளடக்கங்களையும் பள்ளி பாடத்திட்டங்கள் மற்றும் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலிருந்து திறம்பட தடைசெய்கிறது.
இந்தியாவில் ஒருவர் விரும்பிய பாலினத்தை அறிவிப்பதற்கான செயல்முறை என்ன?
இந்தியாவில், திருநங்கைகளின் உரிமைகள் என்பது திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 2019 மற்றும் திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) விதிகள், 2020 ஆகியவற்றால் நிர்வகிக்கப்படுகின்றன. இந்த விதிகளின் கீழ், பாலினத்தை அறிவிக்க மாவட்ட நீதிபதியிடம் ஒரு விண்ணப்பம் அளிக்க வேண்டும். பெற்றோர்களும் தங்கள் குழந்தை சார்பாக ஒரு விண்ணப்பத்தை அளிக்கலாம்.
மிகவும் விமர்சிக்கப்பட்ட முந்தைய விதிமுறைகளின் வரைவு திருநங்கைகள் விரும்பிய பாலினத்தை அறிவிப்பதற்காக மருத்துவ பரிசோதனைக்கு செல்ல வேண்டும். ஆனால், இறுதி விதிமுறைகளில் இந்த தேவை தவிர்க்கப்பட்டது. அதில் மாவட்ட நீதிபதி, விண்ணப்பதாரரின் விவரங்களின் சரியான தன்மைக்கு உட்பட்டு, எந்தவொரு மருத்துவ அல்லது உடல் பரிசோதனையும் இல்லாமல், எந்தவொரு நபரின் பாலின அடையாளத்தையும் அறிவிக்கும் சமர்ப்பிக்கப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் விண்ணப்பத்தை செயல்படுத்துவார். அதன்பிறகு, விண்ணப்பத்தின் சான்றாக விண்ணப்பதாரருக்கு ஒரு அடையாள எண் வழங்கப்படும்.
விதிகளின்படி, திருநங்கைகளுக்கு அவர்களின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாப்பதற்காக நலதிட்ட வாரியங்களை அமைக்கவும், மத்திய அரசால் வடிவமைக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் நலதிட்ட நடவடிக்கைகளை அணுகவும் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.