தி இந்தியன் எக்ஸ்பிரஸ்-ஸில் பிப்ரவரி 23-ம் தேதி வெளியான செய்தியில், இந்திய புவியியல் ஆய்வு மையம் (ஜி.எஸ்.ஐ) உத்தரபிரதேசத்தின் சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள ஒரு இடத்திலிருந்து எடுக்கக்கூடிய தங்கத்தின் அளவை மதிப்பீடு செய்துள்ளது.
அங்கே கிடைக்கும் 52,806.25 டன் தாது ஆதாரங்களை பிரித்தெடுத்தால் ஒரு டன்னுக்கு 3.03 கிராம் தங்கம் என மொத்தம் 160 கிலோ தங்கம் கிடைக்கும் என்று கூறப்பட்டது. அப்பகுதியில் மொத்தம் 3,350 டன் தங்கம் கிடைக்கும் என்று செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, இந்திய புவியியல் ஆய்வு மையம் வெளிட்ட அறிக்கையில், அங்கே 160 கிலோ தங்கம் இருப்பதாக மதிப்பிட்டு தெளிவுபடுத்தியது.
இந்த இடம் சோன்பத்ரா மாவட்டத்தின் தலைமையகமான ரோபெர்ஸ்ட்கஞ்ச்சில் இருந்து 70 கி.மீ தொலைவிலும், ஜார்க்கண்டிலிருந்து 10 கி.மீ தூரத்திலும் மஹுலி என்ற கிராமத்திற்கு அருகில் உள்ளது. இந்த நிலம் முக்கியமான வனப்பகுதியாகும். இங்கே பெரும்பாலும் பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் வசிக்கின்றனர். பூமிக்கு கீழே தங்கம் இருப்பது பற்றிய கதைகள் தலைமுறை தலைமுறைகளாக சொல்லப்பட்டுவருவதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். அது சோன்பஹரி என்ற பெயராக உருவாகி அங்கே மலை இருக்கிறது என்று மதிப்பிடப்பட்டது.
இந்த இடம் உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட் பகுதிகளை உள்ளடக்கிய மகாகோசலப் பிராந்தியத்தின் ஒரு பகுதியாகும். இது கனிம வளம் கொண்டதாக அறியப்படுகிறது என்று ஜிஎஸ்ஐ லக்னோ இயக்குனர் கன்ஷ்யம் திவாரி தெரிவித்தார். "இது நாம் புதுப்பித்துக்கொண்டிருக்கும் புவியியல் வரைபடத்தின் மூலம் எங்களுக்குத் தெரிந்த ஒன்று. அதனால்தான், இந்த முழு மகாகோசலப் பிராந்தியம் எப்போதும் எங்களுக்கு ஆர்வமாக உள்ளது. நாங்கள் இங்குள்ள பாறைகளைப் ஆய்வு செய்து வருகிறோம். மேலும், கனிம இருப்புக்களைத் தேடுகிறோம். சரியாக என்ன இருக்கிறது என்று ஜி.எஸ்.ஐ. துல்லியமாக ஆய்வு செய்கிறது.” என்று அவர் கூறினார்.
தாது மற்றும் அதன் கனிம உள்ளடக்கம் பற்றி ஜி.எஸ்.ஐ எவ்வளவு காலமாக அறிந்திருக்கிறது?
ஜி.எஸ்.ஐ வடக்கு மண்டலம் 1998-99 மற்றும் 1999-2000 ஆகிய ஆண்டுகளில் ஆய்வுகளை மேற்கொண்டதாக ஜி.எஸ்.ஐ இயக்குநர் ஜெனரல் எம்.ஸ்ரீதர் தெரிவித்தார். இருப்பினும், சோன்பத்ராவில் தங்கத்திற்கான முக்கிய ஆதாரங்களை பரிந்துரைப்பதற்கு போதிய ஆய்வு முடிவுகள் ஊக்கமளிக்கவில்லை. “ஒரு டன் தங்கத்திற்கு 3.03 கிராம் கொண்ட 52,806.25 டன் தாது ஆதாரம் இருப்பதாக நாங்கள் கண்டறிந்தோம். 52,000 டன்களுக்கு மேலான தாதுவில் இருந்து 160 கிலோ தங்கம் அல்லது அதற்கும் குறைவாகப் பிரித்தெடுப்பதற்கு நிறைய செலவாகும் என்பதை நாங்கள் அறிந்திருப்பதால் இந்தத் தகவல் எங்களுக்கு குறிப்பிடத்தக்கதாக இல்லை” என்று ஜிஎஸ்ஐ மத்திய தலைமையகத்தின் இயக்குநர் மற்றும் செய்தித்தொடபாளர் ஆஷிஷ் குமார் நாத் கூறினார்.
ஜி.எஸ்.ஐ ஒரு அறிக்கையைத் தொகுத்தது, ஆனால் அதை அப்போது மாநில அரசுக்கு அனுப்பவில்லை. 2015 ஆம் ஆண்டில் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (அபிவிருத்தி மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இது 2019 ஆம் ஆண்டில் அறிக்கையை சமர்ப்பித்தது. “இது எங்களுடைய எல்லா அறிக்கைகளையும் மாநில அரசுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஒரு விதி இருந்தது. இதுபோன்ற ஆயிரக்கணக்கான அறிக்கைகள் எங்களிடம் இருந்ததால், இந்த குறிப்பிட்ட அறிக்கையை கடந்த ஆண்டு உத்தரப்பிரதேச அரசுக்கு அனுப்பப்பட்டது” என்று ஜி.எஸ்.ஐ மத்திய தலைமையகத்தின் இயக்குநரும் செய்தித்தொடர்பாளருமான ஆஷிஷ் குமார் நாத் கூறினார்.
ஜி.எஸ்.ஐ இத்தகைய மதிப்பீடுகளுக்கு எப்படி வந்தது?
பாறைகளைப் பற்றி ஆய்வு செய்தல், தரையை துளையிடுதல் ஆகிய இரண்டு அடிப்படை செயல்முறைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. ஒருவேளை தங்கம் இருந்தால், இந்த பாறைகளின் ஆய்வக பகுப்பாய்வு ஒரு குறிப்பிட்ட கனிமத்தைக் கொண்டிருப்பதற்கான வாய்ப்பைக் குறிப்பிடும்” என்று ஜிஎஸ்ஐ லக்னோ இயக்குனர் திவாரி கூறினார்.
மற்றொன்று பாறைகளின் வயது, இது ரேடியோமெட்ரிக் டேட்டிங் செயல்முறைகளால் தீர்மானிக்கப்படுகிறது. இத்தகைய உலோகங்கள் மற்றும் தாதுக்கள் இருப்பதற்கான அதிக வாய்ப்புகளுக்கு, பாறைகள் குறைந்தது 700 மில்லியன் ஆண்டுகள் பழமையானதாக இருக்க வேண்டும் என சில விதிவிலக்குகளையும் திவாரி கூறினார். “சோன்பத்ராவில் உள்ள பாறைகள் மகாகோசலப் பிராந்தியத்திலும், 2,500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய புரோட்டரோசோயிக் காலத்திலிருந்து உள்ளன” என்று திவாரி கூறினார்.
ஜி.எஸ்.ஐ 1998 மற்றும் 2000 ஆண்டுகளுக்கு இடையில் சுமார் 30 இடங்களில் தரையைத் துளைத்தது. அது இறுதியில் அப்பகுதியின் முப்பரிமாண படத்தை வழங்குகிறது. இது வளத்தின் தரத்தையும் கிடைக்கக்கூடிய அளவையும் தீர்மானிக்க அவசியம்.
தாதுவிலிருந்து தங்கத்தைப் பிரித்தெடுப்பது பயனுடையதா?
ஜி.எஸ்.ஐ தாதுவை பிரித்தெடுத்தலின் நம்பகத்தன்மையின் அடிப்படையில் வகைகளாக பிரித்து அதன் அடர்த்தியிலிருந்து தீர்மானிக்கிறது. சோன்பத்ராவில் காணப்படும் தங்கத் தாது “பொருளாதார” பிரிவில் உள்ளது. அதாவது பிரித்தெடுக்கப்பட்ட தங்கத்தின் விலையை விட பிரித்தெடுத்தல் செலவு குறைவாகும். பிரித்தெடுக்கும் செலவு தங்கத்தின் தரத்தைப் பொறுத்தது; அதிக தங்க செறிவு, பிரித்தெடுப்பதற்கு எளிதாக இருக்கும் என்று திவாரி கூறினார்.
அதே நேரத்தில், ஜி.எஸ்.ஐ அதிகாரிகள் கண்டுபிடிப்புகள் இரண்டு தசாப்தங்கள் பழமையானவை என்றும் அங்கே தங்கம் தற்போது 160 கிலோ மட்டுமே இருக்கிறது என்றும் சுட்டிக்காட்டினர். ஜி.எஸ்.ஐ இயக்குனர் மற்றும் செய்தித் தொடர்பாளர் நாத் அவர்களிடம் இதுபோன்ற ஆயிரக்கணக்கான கண்டுபிடிப்புகள் இருப்பதாகவும், இந்த குறிப்பிட்ட அறிக்கைக்கு ஒருபோதும் முன்னுரிமை அளிக்கவில்லை என்றும் கூறினார்.
இந்த தாதுக்கு என்ன ஆனது?
ஜி.எஸ்.ஐ ஒரு மதிப்பீட்டைக் கொடுத்தவுடன், மாநில அரசு ஏலத்தை நடத்தி வெற்றியாளர் பிரித்தெடுப்பதை மேற்கொள்வார். இ-ஏலத்திற்கு முன்னர், மாநில சுரங்கத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினர், காஸ்ரா வரைபடங்ள் மற்றும் வருவாய்த்துறை ஆவணங்களில் இருந்து ஜி.எஸ்.ஐ.யின் புவியியல் வரைபடங்களை மிகைப்படுத்துவதன் மூலம், அந்த பகுதியில் ஒரு சர்வே நடத்தவும், தாதுக்கள் அடங்கிய நிலத்தை அடையாளம் காணவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
சோன்பத்ராவின் பல்வேறு பகுதிகளில் ஆண்டலுசைட், பொட்டாஷ் மற்றும் இரும்புத் தாது போன்ற பிற தாதுக்களின் இருப்பு மதிப்பிடப்பட்டுள்ளதாக மாவட்ட மேஜிஸ்ட்ரேட் (டி.எம்) எஸ்.ராஜலிங்கம் தெரிவித்தார். முதற்கட்ட கணக்கெடுப்பில் யுரேனியம் படிவம் இருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக அவர் கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.