தங்கத்தின் இறக்குமதி கடந்த 2 மாதங்களில் அதிகரித்துள்ளது. மறுபுறம் இறக்குமதியை குறைக்கவும், நடப்பு கணக்கு பற்றாக்குறையை கட்டுப்படுத்தவும் அரசு வரியை 7.5 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதம் ஆக உயர்த்தியுள்ளது.
இதற்கிடையில் பணவீக்கம் மற்றும் நிச்சயமற்ற சந்தை நிலவரங்கள் காரணமாக மக்கள் தங்கத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். இந்த நிலையில் அமெரிக்கா உள்ளிட்ட பிற வளர்ந்த நாடுகளில் வட்டி உயர்வு காரணமாகவும், டாலரின் மதிப்பு வலுவடைந்துவருவதாலும் தங்கத்தின் விலை வீழ்ச்சி கண்டுள்ளது.
இதனால் நம் கண்முன்னே தங்கத்தில் முதலீடு செய்யலாமா என்ற கேள்வியெழுவது இயல்பானது. இந்த எதிர்மறை சந்தை நிலவரங்கள் நீண்ட கால தங்க முதலீட்டை பாதிக்காது என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேலும் நடப்பு ஆண்டில் 5.8 பில்லியன் டாலர் மதிப்பிலான தங்கத்தை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. இது கடந்தாண்டில் 5.77 பில்லியன் ஆக இருந்தது. உலகளாவிய நிச்சயமற்ற தன்மை மற்றும் பணவீக்கம் நாணயத்தின் ஏற்ற இறக்க தன்மை காரணமாக முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்.
மேலும் தங்கம் தனது மதிப்பை நீண்ட காலத்துக்கு தக்க வைத்துக் கொள்ளும். இதனாலும், முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்ய ஈர்க்கப்படுகின்றனர்.
தங்கமும் காலத்துக்கு காலம் நேர்மறையான வருவாயை உருவாக்கிவருகிறது. தங்கம் விலைமதிப்பற்ற உலோகம் என்பதை பொருளாதார வல்லுநர்களும் மறுப்பதில்லை.
இதற்கிடையில் சர்வதேச அளவில் பணவீக்கம், ரஷ்ய-உக்ரைன் போர், பங்குச் சந்தையில் எதிர்மறையான வர்த்தகம் என முதலீட்டாளர்களுக்கு சாதகற்ற சூழல் நிலவிவரும் நிலையிலும் தங்கம் நேர்மறையான விற்பனையிலேயே காணப்படுகிறது. இந்தத் ஸ்திரத்தன்மையும் தங்கத்தின் மீது கவனம் செலுத்த ஒரு காரணமாகிறது.
தங்கம் விலை கண்ணோட்டம்
இந்தியாவில் தங்கத்தின் விலை அதிகரித்து காணப்பட்டாலும், சர்வதேச அளவில் சநிவடைந்துள்ளது. கடந்த 3 மாதங்களில் மட்டும் 12 சதவீதம் அளவிற்கு குறைந்துள்ளது. தற்போது ஒரு அவுன்ஸ் 1720 டாலராக உள்ளது. இதற்கிடையில் புதன்கிழமை (ஜூலை 13) அமெரிக்காவில் ஜூன் மாத நுகர்வோர் பணவீக்க தரவுகள் வெளியாகின. இதில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் பணவீக்கம் 91 சதவீதம் ஆக அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
மறுபுறம் அமெரிக்காவின் வட்டி விகிதங்களும் அதிகரித்துவருகிறது. மேலும் மற்ற நாடுகளின் பணத்தை காட்டிலும் டாலரின் மதிப்பும் உயர்ந்துவருகிறது. இது குறுகிய கால முதலீட்டாளர்களுக்கு ஏற்றதாக இருக்காது.
இது குறித்து ஜியோஜித் ஃபைனான்சியல் சர்வீஸ் கமாடிட்டி தலைவர் ஹரீஷ் வி நாயர் கூறுகையில், ‘அமெரிக்க பணவீக்கம் அதிகரிப்பு மற்றும் வட்டி விகிதங்கள் அதிகரிப்பு காரணமாக தங்கம் சிறிது எதிர்மறையை சந்தித்துவருகிறது.
எனவே முதலீட்டாளர்களின் விருப்ப பொருளாக தற்போது டாலர் உருவெடுத்துள்ளது. ஆகையால் வரும் நாள்களில் தங்கத்தின் விலை குறைய வாய்ப்புள்ளது” என்றார்.
கோடக் செக்யூரிட்டி கமாடிட்டி ரிசர்ச் (ஆய்வு) தலைவர் ரவீந்திர நாத் கூறுகையில், “அமெரிக்க டாலரில் மதிப்பு திருத்தம் வரும் வகையில், இந்த எதிர்மறை தொடர வாய்ப்புள்ளது” என்றார்.
நடப்பாண்டில் தங்கத்தின் செயல்பாடு
பங்குச் சந்தை முதலீட்டை காட்டிலும் தங்கத்தில் முதலீடு முதலீட்டாளர்களை ஏமாற்றவில்லை. நிகழாண்டின் ஜனவரி-ஜூன் வரையும் தங்கம் ஏறுமுகமாகவே இருந்தது. 2022 ஜனவரி 1ஆம் தேதி தங்கம் கிராமுக்க ரூ.4985 ஆக இருந்தது. தற்போது கிராம் ரூ.4917 ஆக உள்ளது. ஆனால் கடந்த 6 மாதங்களில் சென்செக்ஸ் 10.41 சதவீதம், அதாவது 6100 புள்ளிகள் சரிந்துள்ளது. இந்தக் காலக்கட்டத்தில் முதலீட்டாளர்களுக்கு தங்கம் கைகொடுத்துள்ளது.
நீங்கள் என்ன செய்ய வேண்டும்
தங்கம் வரும் காலங்களில் ஒரு வருடம் அல்லது அதற்கு மேலும் பலவீனமாக இருக்க வாய்ப்புள்ளது. ஆகையால் முதலீட்டாளர்கள் நீண்ட காலத்துக்கு தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேலும் தங்கப் பத்திரத்தில் முதலீடுக்கு முறையாக செல்ல வேண்டும் என ஹரீஷ் வி நாயர் கூறினார். தங்கத்தை பொருளாக வாங்காவிட்டாலும் தங்கப் பத்திரத்தில் முதலீடு செய்யலாம். ஆரம்ப கால முதலீடுக்கே 2.5 சதவீதம் நிரந்தர வட்டி கிடைக்கிறது.
இந்த தங்கப் பத்திரங்கள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், வெளிநாட்டு வங்கிகள் மற்றும் அனுமதிக்கப்பட்ட அஞ்சல் அலுவலகங்களில் விற்கப்படுகின்றன. பொருளாதார நிபுணர்களும், ஒட்டுமொத்த முதலீட்டில் தங்கம் 5-10 சதவீதம் உருவாக்க வேண்டும் எனக் கூறுகின்றனர்.