Good governance index : முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாளான டிசம்பர் 25ம் தேதியை, பிரதமர் மோடியின் உத்தரவின் பேரில், நல்லாட்சி தினமாக 2014ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனடிப்படையில், நாட்டில் சிறந்த நிர்வாகம் நடைபெறும் மாநிலங்களின் பட்டியலை மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங், புதன்கிழமை வெளியிட்டார்.
மத்திய அரசு வெளியிட்டுள்ள, நாட்டிலேயே மிகச் சிறந்த நிர்வாகம் உள்ள மாநிலங்கள் பட்டியலில், தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. அதற்கடுத்த இடங்களில், மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் உள்ளன.
நல்ல நிர்வாகத்திறன் பட்டியல், அறிவியல்பூர்வமாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், நிர்வாகத்தின் பல்வேறு படிநிலைகள் குறித்து ஆராய்ந்து இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
திறமையான நிர்வாகத்தில் தமிழகத்திற்கு முதலிடம்: மத்திய அரசுத் துறை ஆய்வுப் பட்டியல்
மாநிலங்களின் சிறந்த நிர்வாகத்திறன் என்பது யாதெனில், வளர்ச்சி திட்டங்கள் குறித்து திட்டமிடுவது மற்றும் அதுகுறித்த திறமையான செயல்முறை ஆகும். மக்களின் நலன்கருதிய திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்தல், இயற்கை வளங்களின் பயன்பாடுகளை ஒழுங்குபடுத்துதல், முன்மாதிரி மேம்பாட்டு திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்தல், விதிகள், விதிமுறைகள் உருவாக்குதல், இலக்கை அடைய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் சிறந்த நிர்வாகத்திறன் பட்டியல் உருவாக்கப்படுகிறது.
மத்திய பணியாளர் நலத்துறை சார்பில், மிகச் சிறந்த மாநிலங்களுக்கான தரவரிசை தயாரிக்கப்பட்டு உள்ளது. மாநிலங்கள்மற்றும் யூனியன் பிரதேசங்கள், மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.மிகப் பெரிய மாநிலங்கள், வடகிழக்கு மற்றும் மலைப் பிரதேசங்கள், யூனியன் பிரதேசங்கள் என, மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளன.ஒவ்வொரு பிரிவுக்கும், தனித்தனியாக மதிப்பீடுகள் வழங்கப்பட்டன. பல்வேறு துறைகளில், மாநிலங்களின் செயல்பாடுகள் குறித்தும் பட்டியலிடப் பட்டுள்ளன.
சிறந்த நிர்வாகத்திறன் பட்டியலின் நோக்கமாக கருதப்படுவது யாதெனில், மாநிலத்தின் நிர்வாகத்திறன் மேம்படுத்தப்பவதோடு மட்டுமல்லாது, வளர்ச்சி சார்ந்த திட்டங்களுக்கு நிர்வாகம் சிறந்த முறையில் செயல்பட்டு குறித்த இலக்கை குறித்த நேரத்தில் எட்ட வழிவகை செய்வதே ஆகும். என்று அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
மாநிலங்களின் செயல்திறனை அளவிடுதல்
வேளாண்மை, வர்த்தகம் மற்றும் தொழில்கள், மனிதவள மேம்பாடு, பொது சுகாதாரம், பொது கட்டமைப்பு மற்றும் வசதிகள், பொருளாதார நிர்வாகம், சமூக நலம் மற்றும் மேம்பாடு, நீதி மற்றும் பொது பாதுகாப்பு, சுற்றுப்புற சூழ்நிலை, மக்களின் நலன் தொடர்பான நிர்வாக திட்டங்கள் உள்ளிட்ட 10 துறைகளின் மாநிலங்களில் நிர்வாகத்திறன் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
இந்த 10 துறைகளிலும் வெவ்வேறு அளவுகோல்களில் அமைந்த 50க்கும் மேற்பட்ட காரணிகளின் அடிப்படையில் வளர்ச்சி, மேம்பாடு உள்ளிட்டவை கணக்கிடப்படுகிறது. இதன்மூலம் மாநிலங்களின் செயல்திறன் கணக்கிடப்படுகிறது.
வேளாண்மை மற்றும் அதுதொடர்பான துறைகளில், வளர்ச்சி 0.4 சதவீதம், தானியங்கள் உற்பத்தி 0.1 சதவீதம், தோட்டக்கலை உற்பத்தி பொருட்கள், பால் சார்ந்த பொருட்கள் உற்பத்தி 0.1 சதவீதம் என்ற அளவில் உள்ளது.
நீதித்துறை மற்றும் பொது பாதுகாப்பு விவகாரத்தில், குற்றங்களின் எண்ணிக்கை, பாதுகாப்பு பணியில் உள்ள போலீசாரின் எண்ணிக்கை, அதில் பெண் போலீசாரின் சதவீதம் உள்ளிட்டவைகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
சிறந்த நிர்வாகத்திறன் பட்டியலில், தமிழகம் 5.62 சதவீத புள்ளிகளுடன் முதலிடத்திலும், மகாராஷ்டிரா ( 5.4), கர்நாடகா (5.1) மற்றும் சட்டீஸ்கர் ( 5.05) அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.
வடகிழக்கு மாநிலங்களை பொறுத்தவரையில், இமாச்சல பிரதேசம் 5.22 புள்ளிகளுடன் முதலிடத்திலும், உத்தர்காண்ட் ( 4.87), திரிபுரா (4.5) மற்றும் மிசோராம் (4.41) புள்ளிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
சுற்றுப்புற சூழல் அடிப்படையிலான பட்டியலில், மேற்குவங்கம் முதலிடத்திலும், அதற்கடுத்த இடங்களில் கேரளா, தமிழகம் மற்றும் பீகார் மாநிலங்கள் உள்ளன.
பொருளாதார நிர்வாகம் அடிப்படையிலான பட்டியலில், கர்நாடகா முதலிடத்திலும், அதனைத்தொடர்ந்து மகாராஷ்டிரா, தெலுங்கானா, குஜராத் மற்றும் தமிழகம் உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.