Advertisment

மத்திய அரசு வெளியிட்ட ஆரோக்யா சேது வழிகாட்டுதல்கள் கூறுவது என்ன?

இருப்பினும், தனிப்பட்டோர் தகவல் தொகுப்புப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தான் இதுபோன்ற செயலியை மக்களிடம்  கட்டாயப்படுத்த வேண்டும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
மத்திய அரசு வெளியிட்ட ஆரோக்யா சேது வழிகாட்டுதல்கள் கூறுவது என்ன?

aarogya setu,aarogya setu guidelines

aarogya setu app Guidelines :  மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கடந்த திங்களன்று, ஆரோக்யா சேது செயலிக்கான தகவல் தொகுப்பு பகிர்வு  குறித்த நெறிமுறையை வெளியிட்டது. செயலியில் பெறப்படும் தகவல்களை அரசு அமைப்புகள் மற்றும் மூன்றாம் தரப்பினருடன் பகிர்ந்து கொள்வதற்கான வழிகாட்டுதல்கள் இதில் கூறப்பட்டன. இதற்கு முன்னதாக, செயலியில் கூறப்பட்ட  தனியுரிமைக் கொள்கையே பொது மக்களின் பாதுக்காப்பு கவசமாக அமைந்திருந்தது.

Advertisment

கோவிட் 19 நோயால் பாதிக்கப்பட்டவரைக் கண்டறிந்து, அவர்களிடமிருந்து பிறருக்கு வைரஸ் தொற்றி விடாமல் இருக்க உதவும் வகையிலான ஆரோக்கிய சேது என்ற செயலியை மத்திய அரசு ஒரு முக்கிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அறிமுகப்படுத்தியது.

தாங்கள் எந்த அளவிற்கு கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்படலாம் என்பதை குடிமக்கள் அறிந்துகொள்ள உதவும் வகையிலான, இந்த ஆரோக்கிய சேது என்ற அலைபேசி செயலி, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டது.

தனியுரிமை பாதுகாப்பு மற்றும் செயல்திறன் குறித்து பல வல்லுநர்கள் வெளிப்படுத்திய கவலைகளுக்கு மத்தியில்  இந்த செயலாக்க ஆணை ( Executive order) வெளியிடப் பட்டுள்ளது . இருப்பினும், தனிப்பட்டோர் தகவல் தொகுப்புப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தான் இதுபோன்ற செயலியை மக்களிடம்  கட்டாயப்படுத்த வேண்டும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். திரு. பி.என். ஸ்ரீகிருஷ்ணா தலைமையிலான  நிபுணர்கள் குழு தனிப்பட்டோர் தகவல் தொகுப்புப் பாதுகாப்பு வரைவு மசோதாவை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. இந்த மசோதா இன்னும் இந்திய பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வில்லை.

ஆரோக்யா சேது: அரசாங்கம் ஏன் இந்த வழிகாட்டுதல்களை வெளியிட்டது?

தொழில்நுட்ப மற்றும் தரவு மேலாண்மை தொடர்பான அதிகாரம் பெற்ற குழுவின் தலைவரான ஐ.டி செயலாளர் அஜய் பிரகாஷ் சாவ்னி (கோவிட் -19 பெருந்தொற்றின் பல்வேறு அம்சங்களைக் கையாள்வதற்காக உள்துறை அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட பல அதிகாரம் பெற்ற குழுக்களில் ஒன்று) வெளியிட்டுள்ள செயலாக்க ஆணையில், "கோவிட்-19 நோய் தொற்றை நிவர்த்தி செய்வதற்கு தேவையான சுகாதார கொள்கையை வகுக்கவும், செயல்படுத்தவும் தனிப்பட்டோர் தகவல் தொகுப்பு அவசரமாக தேவைப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது. இங்கே, தனிநபர்கள் என்றால் பாதிக்கப்பட்ட நபர்கள், (அ)  தொற்றால் பாதிக்கப்படக்கூடிய நபர்கள் (அ) பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பு கொண்டவர்கள் என்று பொருள்.

இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக, ஆரோக்கிய செயலியில் இருந்து சேகரிக்கப்பட்ட தரவுகள் பொருத்தமான வழியில் பகிரப்படுவதை உறுதிசெய்ய, அரசாங்கம் இந்த வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. "சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் உட்பட்ட பிற மத்திய அமைச்சகமும், மாநில / யூனியன் பிரதேச அரசுகளும் சமூக விலகல் உட்பட நோய் தடுப்பு வழிமுறைகள் குறித்து பல்வேறு ஆலோசனைகள் வெளியிட்டு வருகின்றன. அவை திறம்பட செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காகவும், இந்திய அரசின் பல்வேறு அமைச்சகத்திற்கு இடையேயும், பல்வேறு மாநில / யூனியன் பிரதேச அரசு நிர்வாகங்களுக்கு இடையேயும்   திறமையான தகவல் தொகுப்புப் பகிர்வை உறுதி செய்ய வேண்டிய அவசியம் உள்ளது, ”என்று ஆணையில் கூறப்பட்டுள்ளது.

ஆரோக்யா சேது செயலியில் எதுபோன்ற  தரவுகளை சேகரித்து,பகிர்ந்து கொள்ளலாம்?

ஆரோக்யா சேது செயலியின் மூலம் சேகரிக்கப்பட்ட தனிப்பட்டோர் தகவல்,  - மக்கள்தொகை தகவல், தொடர்பு தகவல், சுய மதிப்பீட்டு தகவல், இருப்பிட தகவல் என நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதனை மொத்தமாக ரெஸ்பான்ஸ் தகவல் என்று அழைக்கப்படுகிறது.

மக்கள்தொகை தகவல் தொகுப்பின் கீழ் தனிப்பட்டோரின்  பெயர், மொபைல் எண், வயது, பாலினம், தொழில் மற்றும் பயண வரலாறு போன்ற தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன . தொடர்புத் தகவல் தொகுப்பின் கீழ், தொடர்பில் இருந்தவர்களில் யாரேனும், கோவிட் 19 இருப்பதாக உறுதி செய்யப்பட்டிருந்தார்களா என்பதை அறிந்து கொள்ள உதவும் தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. ப்ளூடூத் மற்றும் இடங்களை அடிப்படையாகக் கொண்ட சமூக கிராஃப் மூலம் டிராக் செய்யப்படும் தகவல்கள் மூலம், நோய் உள்ளது என்று உறுதி செய்யப்பட்ட நபருடன் நாம் தொடர்பில் இருந்திருக்கிறோமா என்பது இதன் மூலம் தெரியவரும்.  சுய மதிப்பீட்டுத் தகவல் தொகுப்பின் கீழ்,செயலிக்குள் நிர்வகிக்கப்படும்  கேள்விகளுக்கு  தரும் தகவல்கள் சேகரிக்கப்படுகிறது. இருப்பிடத் தகவல் தொகுப்பின் கீழ்,  அட்சரேகை மற்றும் தீர்க்கரேகைகள் மூலம் தனிப்பட்ட ஒருவரின் புவியியல் நிலை தகவல்கள் சேகரிக்கப்படுகிறது.

இந்த ஆரோக்யா சேதுவில் இருந்து பெரும் தகவலை எந்த அமைப்புகள் அணுக முடியும்?

செயலியை உருவாக்கிய தேசிய தகவலியல் மையம் (என்ஐசி) தனிப்பட்டோர் தகவல் தொகுப்பை, "ஒரு பொருத்தமான சுகாதார கொள்கையை நேரடியாக வகுக்க (அ) செயல்படுத்த கீழ்கண்டவிகளுக்கு பகிர்வது அவசியம்” என்று நெறிமுறையில் கூறப்பட்டுள்ளது.

தகவல் தொகுப்பு பகிரப்படும் அமைப்புகள்: இந்திய சுகாதார அமைச்சகம், மாநில / யூனியன் பிரேதேசம/ உள்ளூர் அமைப்பிலான சுகாதாரத் துறைகள், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், மாநில பேரழிவு மேலாண்மை அதிகாரிகள், மத்திய மற்றும் மாநில அரசுகளின் பிற அமைச்சகங்கள்,  மத்திய, மாநில மற்றும் உள்ளூர் அமைப்பில் இயங்கும் பிற பொது சுகாதார நிறுவனங்கள் தேசிய தகவலியல் மையத்திடம் தகவல் தொகுப்பை பெறலாம்.

எந்தவொரு மூன்றாம் தரப்பினருடனும் தகவல் பகிர்வதற்கான நெறிமுறையும் இந்த செயலாக்க ஆணையில் கூறப்பட்டுள்ளது.

உதாரணமாக,  

பொருத்தமான சுகாதார கொள்கையை நேரடியாக வகுக்க (அ) செயல்படுத்த கண்டிப்பாக தேவைப்படும் பட்சத்தில் மட்டும் தகவல் பகிரப்பட வேண்டும்.

ஆராய்ச்சி நோக்கங்களுக்காக, ரெஸ்பான்ஸ்  தகவலை இந்திய பல்கலைக்கழகங்கள் (அ) ஆராய்ச்சி மையங்கள் மற்றும் இந்தியாவில் பதிவுசெய்யப்பட்ட எந்தவொரு ஆராய்ச்சி நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். பல்கலைக்கழகங்களுக்கும், ஆராய்ச்சி மையங்களும் தாங்கள் பெரும் தகவலை பிற நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ள இந்த வழிக்கட்டுதல்கள் அதிகாரமளிக்கின்றது.

ஆரோக்யா சேது: பாதுகாப்பு அம்சங்கள் என்னென்ன ?

பகிரப்படும் தகவல் தொகுப்பு அனைத்தும் அடையாளம் காணப்படாத வடிவத்தில் இருக்க வேண்டும் என்று நெறிமுறை கூறுகிறது. இதன் பொருள், மக்கள்தொகை தகவல் தொகுப்பைத தவிர, பிற தொகுப்புகள் தனிப்பட்ட நபரை  அடையாளம் காண முடியாதைவையாக இருக்க வேண்டும்.  பெறக்கூடிய தகவல்கள் அனைத்திற்கும் ரேண்டம் அடையாள எண்கள் ஒதுக்கப்பட வேண்டும்.

தகவல்  தொகுப்பை பெற்ற எந்தவொரு  அமைப்பும்,   180 நாட்களுக்கு மேல்  அந்த தகவல்களை  தக்க வைத்துக் கொள்ளக்கூடாது என்று நெறிமுறையில் கூறப்பட்டுள்ளது . நெறிமுறை மீறப்பட்டால்  பேரழிவு மேலாண்மை சட்டம், 2005-ன் கீழ் அபராதங்கள் விதிக்கப்படும். ஆறு மாதங்களுக்குப் பிறகு, இந்த நெறிமுறைகள் அதிகாரம் பெற்ற குழுவால்  மறுபரிசீலனை செய்யப் படவேண்டும். ஆறு மாதங்களுக்குப் பிறகு, இந்த நெறிமுறைகள் நீட்டிக்கவில்லை என்றால், இந்த நெறிமுறைகள் தானாக செயலிழந்து போகும்.

ஆரோக்யா சேது குறித்து எழுப்பப்படும் கவலைகள் என்ன?

அனைவருக்கும் செயலியை கட்டாயமாக்குவதற்கான அரசாங்கத்தின் முடிவை ஆதரிக்க தனிப்பட்டோர் தகவல் தொகுப்புப் பாதுகாப்பு சட்டத்தின் அவசியத்தை சட்ட வல்லுநர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆதார் வழியில் அரசாங்கம் செல்கிறது என்று குற்றம் சாட்டும் எழுப்பப்படுகிறது. "குறிப்பாக செயலியில் பல தனியுரிமை பாதுகாப்புகள் மீறப்படுவதால் செயலாக்க ஆணையின் மூலமாக  இதைச் செய்ய முடியாது, ”என்று SFLC.in அமைப்பின் சட்ட இயக்குனர் பிரசாந்த் சுகாதன் தெரிவித்தார்.

மூன்றாம் தரப்பினருடன் தகவல் பகிரப்படுவது மிகப்பெரிய கவலையாக உள்ளது என்று சுகாதன் மேலும் தெரிவித்தார். யார் யாரிடம் தகவல் பகிரப்படும் என்று பட்டியலை அரசு வெளியிட்டிருக்க வேண்டும். இது, தகவல் தொகுப்பை  தவறாகப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும். மேலும், தகவல் தொகுப்பை  தனி நபரோடு அடையாளம் காணாத செயல்முறை (de-identification)  மேலும் விரிவாக இருந்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

உண்மையில், கிடைக்கும் தகவலை மீண்டும் தனி நபரோடு அடையாளம் காணும் செயல்முறையை ( de-identification) தடுக்க நெறிமுறை முயல்கிறது. “அடையாளம் காணப்படாத தகவல் தொகுப்பை பெரும் எந்தவொரு பல்கலைக்கழகமும் (அ) ஆராய்ச்சி நிறுவனமும், அத்தகைய தகவலை எந்த வகையிலும் தனி நபரோடு அடையாளம் காண கூடாது. அவ்வாறு செய்தால், இந்த நெறிமுறையின் கீழ் அவர்களுக்கு வழங்கப்படும் எந்தவொரு உரிமைகளும் நிறுத்தப்படும், மேலும்நடைமுறையில் இருக்கும் காலத்திற்கு பொருந்தக்கூடிய சட்டங்களின் கீழ் அபராதம் விதிக்கப்படும் ,”என்று நெறிமுறையில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Corona Virus Corona
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment