நாட்டில் 15 வயது முதல் 18 வயதுடையோருக்கு ஜனவரி 3 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்படவுள்ளது. நேற்று, சிறார்களுக்கு தடுப்பூசி அளிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது. அதில், சிறார்களுக்கு செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசி வகை குறித்தும், முன்பதிவு செய்வது குறித்தும் விளக்கப்பட்டிருந்தது.
15-18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு எந்த தடுப்பூசி போடப்படும்?
15-18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கோவாக்சின் மட்டுமே செலுத்தப்படும் என சுகாதார அமைச்சக வழிகாட்டுதல்களில் குறிப்பிட்டுள்ளன.
எல்லா சிறார்களும் தகுதியானவர்களா?
2007 ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்னர் பிறந்துள்ள சிறார்கள் மட்டுமே தகுதியானவர்கள்
தடுப்பூசிக்கு முன்பதிவு செய்வது எப்படி?
co-Win தளத்தில் ஏற்கனவே உள்ள கணக்கு மூலம் ஆன்லைனில் பதிவு செய்துகொள்ளலாம். அதே போல், தனிப்பட்ட மொபைல் எண் மூலம் புதிய கணக்கை உருவாக்கி பதிவு செய்யலாம். ஆனால், இந்த விருப்பம் தற்போது தடுப்பூசிக்கு தகுதியான குடிமக்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.
எனவே, ஜனவரி 1 முதல் சிறார்கள் தங்கள் பெற்றோரின் தற்போதைய Co-WIN கணக்குகளைப் பயன்படுத்தி தடுப்பூசி இடங்களை முன்பதிவு செய்துகொள்ளலாம்.
சிறார்கள் தடுப்பூசி முன்பதிவு செய்ய வேறு வழி உள்ளதா?
வழிகாட்டு நெறிமுறைபடி, குழந்தைகள் நேரடியாக தடுப்பூசி செலுத்தும் இடத்திலும் முன்பதிவு செய்து கொள்ளலாம். அதாவது, சிறார்கள் நேரடியாக தடுப்பூசி செலுத்தும் இடத்திற்கு சென்று முன்பதிவு செய்து தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.
தடுப்பூசி சிறார்களுக்கு இலவசம்?
அனைவருக்கும் அரசு தடுப்பூசி மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்துவது இலவசம் தான். ஆனால், தனியார் மருத்துவமனை செல்லும் பட்சத்தில் தடுப்பூசிக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil