அக்டோபர் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரியின் (ஜிஎஸ்டி) மொத்த வருவாய் வசூல் (செப்டம்பரில் விற்பனை) ஆண்டுக்கு ஆண்டு 23.7 சதவீதம் உயர்ந்து ரூ.1,30,127 கோடியாக உள்ளது. ஜூலை 2017 இல் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து ஜிஎஸ்டியின் கீழ் இரண்டாவது அதிக வருவாய் சேகரிப்பு இதுவாகும், இந்த உயர்வு பொருளாதார நடவடிக்கைகளின் வளர்ச்சி மற்றும் ஏய்ப்பைத் தடுக்க வரி அதிகாரிகளால் எடுக்கப்பட்ட பல இணக்க நடவடிக்கைகளின் பின்னணியில் வருகிறது.
ஆண்டு இறுதி விற்பனைகளில், இந்த ஆண்டு ஏப்ரலில் வசூலான ஜிஎஸ்டி ரூ.1,41,384 கோடி தான், இதுவரையிலான மறைமுக வரி விதிப்புகளில் அதிகபட்சமாக உள்ளது.
வெவ்வேறு ஜிஎஸ்டி கூறுகளின் வசூல் எப்படி?
அக்டோபரில் மொத்த ஜிஎஸ்டி வருவாயில் வசூலான ரூ.1,30,127 கோடியில், மத்திய ஜிஎஸ்டி ரூ.23,861 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ.30,421 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.67,361 கோடி (பொருட்களின் இறக்குமதியில் வசூலான ரூ.32,998 கோடி உட்பட) மற்றும் செஸ் வரி ரூ. 8,484 கோடி (பொருட்களின் இறக்குமதி மூலம் வசூலிக்கப்பட்ட ரூ. 699 கோடி உட்பட).
மத்திய ஜிஎஸ்டிக்கு ரூ.27,310 கோடியும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியிலிருந்து மாநில ஜிஎஸ்டிக்கு ரூ.22,394 கோடியும் வழக்கமான தீர்வாக அரசாங்கம் செட்டில் செய்துள்ளது. அக்டோபர் மாதத்தில் வழக்கமான தீர்வுகளுக்குப் பிறகு மத்திய மற்றும் மாநிலங்களின் மொத்த வருவாய் சிஜிஎஸ்டிக்கு ரூ.51,171 கோடியும், எஸ்ஜிஎஸ்டிக்கு ரூ.52,815 கோடியும் ஆகும்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜிஎஸ்டி அமல்படுத்தியதில் இருந்து அக்டோபர் 2021 க்கான ஜிஎஸ்டி வசூல் இரண்டாவது அதிகபட்சமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 2021 இன் மொத்த ஜிஎஸ்டி வருவாய் 1,30,127 கோடி ரூபாய். அக்டோபர் 2021ன் வருவாய்… கடந்த ஆண்டு இதே மாதத்தில் கிடைத்த ஜிஎஸ்டி வருவாயை விட 24% அதிகமாகும் &, '2019-20 ஐ விட 36% அதிகம்."
இந்த போக்கு எதைக் குறிக்கிறது?
தற்போதைய காலண்டர் ஆண்டில் ஜிஎஸ்டி வசூல்களின் போக்குகளை விளக்கப்படம் 1 காட்டுகிறது. 2019-20 தொற்றுநோய்க்கு முந்தைய காலத்தில் 24-சதவீத வளர்ச்சி மற்றும் 36-சதவீத வளர்ச்சியுடன் ஜிஎஸ்டி வருவாய்கள் வேகம் எடுத்துள்ளன. இந்த வசூல் வளர்ச்சியானது "பொருளாதார மீட்சியின் போக்கிற்கு மிகவும் ஒத்துப்போகிறது" என்று நிதி அமைச்சகம் கூறியது.
“அக்டோபருக்கான ஜிஎஸ்டி வருவாய் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து இரண்டாவது மிக உயர்ந்ததாக உள்ளது, இது ஆண்டு இறுதி வருவாயுடன் தொடர்புடைய ஏப்ரல் 2021 க்கு அடுத்தப்படியாக இரண்டாவது இடத்தில் உள்ளது. இது பொருளாதார மீட்சியின் போக்கோடு மிகவும் ஒத்துப்போகிறது. இரண்டாவது அலையிலிருந்து ஒவ்வொரு மாதமும் உருவாக்கப்பட்ட இ-வே பில்களின் போக்கிலிருந்தும் இது தெளிவாகிறது. செமிகண்டக்டர்கள் விநியோகத்தில் ஏற்பட்ட இடையூறு காரணமாக கார்கள் மற்றும் பிற பொருட்களின் விற்பனை பாதிக்கப்படாமல் இருந்திருந்தால் வருவாய் இன்னும் அதிகமாக இருந்திருக்கும்,” என்று நிதி அமைச்சகம் கூறியது.
நிதியமைச்சகத்தால் வெளியிடப்பட்ட தரவுகள் முந்தைய மாதங்களுடன் ஒப்பிடுகையில் சரியான நேரத்தில் வரி செலுத்துதல் அதிகரித்து வருவதாகக் காட்டுகிறது (விளக்கப்படம் 2).
தாக்கல் செய்யப்பட்ட மொத்த ரிட்டன்களில், ஒவ்வொரு மாதமும் தாக்கல் செய்யப்பட்ட தற்போதைய காலகட்டத்திற்கான ரிட்டர்ன்களின் பங்கு அதிகரித்துள்ளது. கொரோனா காரணமாக வழங்கப்பட்ட காலக்கெடு நீட்டிப்பு காரணமாக வரி செலுத்துவோர் கடந்த மாதங்களில் வருமானத்தை தாக்கல் செய்ததால் ஜூலையில் 1.5 கோடி வருமான வரி தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதிக இணக்கத்தை (வரி செலுத்துவதை) உறுதிப்படுத்த என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன?
மாநில மற்றும் மத்திய வரி அதிகாரிகள், எஸ்எம்எஸ் மூலம் தாக்கல் செய்யவில்லை, காலாண்டு வருமானம் மாதாந்திர கட்டணம் (QRMP) முறையை செயல்படுத்துதல் மற்றும் வருமானத்தை தானாக நிரப்புதல் போன்ற இணக்க நடவடிக்கைகள் வரி செலுத்துவதை எளிதாக்க எடுக்கப்பட்டுள்ளன என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. வருமானத்தை தாக்கல் செய்யாததற்காக இ-வே பில்களைத் தடுக்கவும், தொடர்ச்சியாக 6 ரிட்டர்ன்களைத் தாக்கல் செய்யத் தவறிய வரி செலுத்துவோர்களின் பதிவு முறையை கணினி அடிப்படையிலான இடைநிறுத்தம் மற்றும் ரிட்டர்ன் செலுத்தத் தவறியவர்களுக்கு கடன் வழங்குவதைத் தடுக்கவும் வரி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அந்தந்த பிராந்தியங்களில் சேகரிக்கப்பட்ட ஜிஎஸ்டி வருவாயில், மகாராஷ்டிரா அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வருவாயில் 23 சதவீத வளர்ச்சியையும், தமிழ்நாடு 11 சதவீதத்தையும், குஜராத் 25 சதவீதத்தையும், கர்நாடகா 18 சதவீதத்தையும் பெற்றுள்ளன.
பண்டிகைக் காலம் காரணமாக வரும் மாதங்களிலும் இந்த உயர்வு தொடரும் என வரி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். EY இந்தியாவின் வரி கூட்டாளர் அபிஷேக் ஜெயின் கூறுகையில், “வலுவான ஜிஎஸ்டி வசூல் மிகவும் ஊக்கமளிக்கிறது மற்றும் பொருளாதார மீட்சிக்கான தெளிவான அறிகுறியாகும். தற்போது பண்டிகை காலங்கள் நடைபெறுவதால், வரும் மாதங்களில் இதே போன்ற அல்லது அதிக ஜிஎஸ்டி வசூலை எதிர்பார்க்கலாம் என்றார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.