டெக்ஸாஸ் மாகாணத்தில் மே 24 அன்று 19 பள்ளி குழந்தைகள் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், அமெரிக்காவில் குழந்தைகள், இளைஞர்கள் மீது துப்பாக்கி வன்முறை தாக்குதல் நடத்தப்படுவது அதிகரித்துள்ளதை வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அமெரிக்காவில் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) சமீபத்தில் வெளியிட்ட தரவுகளின்படி, 0-19 வயதுக்குட்பட்டவர்கள் இறப்பதற்கு துப்பாக்கி தாக்குதல் முக்கிய காரணியாக இருக்கிறது. அதேசமயம், 2020இல், இந்த வயதினரின் மரணத்திற்கு முக்கிய காரணியாக வாகன விபத்து இருந்ததாக குறிப்பிட்டுள்ளது.
இறப்புகள் ஏற்படும் விதங்கள்
மே 19 அன்று நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் வெளியிடப்பட்ட தரவை பார்க்கையில், 0-19 வயதுக்குட்பட்டவர்களிடையே துப்பாக்கியால் ஏற்படும் இறப்புகள் ஒரு லட்சம் மக்கள்தொகையில் 5.5 ஐ தாண்டியுள்ளது. ஆனால், 2020ல் வாகன விபத்துகளால் ஏற்படும் இறப்புகள் ஒரு லட்சத்திற்கு 5 பேர் என்கிற விகிதத்திலே உள்ளது. 2020 ஆம் ஆண்டில் துப்பாக்கியால் ஏற்பட்ட 45,222 இறப்புகளில், 4,357 குழந்தைகள் ஆவர்.
2010 ஆம் ஆண்டு முதல் இளைஞர்களிடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சூடு மரணங்களில் கிட்டத்தட்ட 60% கொலைகள் ஆகும். 2019 மற்றும் 2020 க்கு இடையில், இந்த வயதினரிடையே துப்பாக்கி இறப்புகளின் விகிதம் 13.5% உயர்ந்துள்ளது. குறிப்பாக, கொலை காரணமாக ஏற்பட்ட துப்பாக்கி இறப்பு 33.4% அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
துப்பாக்கி வன்முறை, வாகன விபத்துக்கு அடுத்தப்படியாக, இறப்புக்கான மூன்றாவது முக்கிய காரணம் போதைப்பொருள் மற்றும் விஷம் ஆகும். இதற்கு 0-19 வயதினரில் 2019 முதல் 2020 வரை உயிரிழப்போரின் எண்ணிக்கை 83.6% அதிகரித்துள்ளது.
தொற்றுகாலத்தில் அதிகரிப்பு
தொற்றுநோயின் ஆரம்பகாலத்தில் குழந்தைகள், இளம் பருவத்தினரிடையே ஏற்படும் இறப்பு பெரும்பாலும் துப்பாக்கி தாக்குதல் காயம் அல்லது பொதைப்பொருளில் நச்சுத்தன்மை ஆகியவை இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.அதே சமயம், 2020 இல் 100,000 குழந்தைகள், இளம் பருவத்தினரில் 0.2 சதவீத இறப்புகள் கொரோனாவால் ஏற்பட்டது.
2014 இல் துப்பாக்கி இறப்பு விகிதங்கள் அதிகரிக்கத் தொடங்கிய போதிலும், கொரோனாவால் ஏற்பட்ட மன அழுத்தமும், வாழ்க்கை நிலைமை மோசமடைந்தலும் இந்த கலாச்சாரத்தை அதிகரிக்க வழிவகுத்தது. தொற்றுநோய்களின் போது கடந்த தசாப்தங்களில் துப்பாக்கி இறப்புகளைக் குறைப்பதற்கான தடுப்பு முயற்சிகள் இல்லாத சூழலில் துப்பாக்கி வன்முறை கலாச்சாரம் அதிகரிப்பு ஏற்பட்டது.
கோவிட்-19 தொற்றுநோய்களின் போது துப்பாக்கி வன்முறை அதிகரித்துள்ளது என்பதற்கான பிற ஆதாரங்களுடன் புதிய தரவு ஒத்துப்போனாலும், அதிகரிப்புக்கான காரணங்கள் தெளிவாக இல்லை. அதிகரித்து வரும் துப்பாக்கி தொடர்பான இறப்பு ஒரு நீண்ட கால போக்கை பிரதிபலிக்கிறது. இது துப்பாக்கியால் இளைஞர்களிடையே ஏற்படும் இறப்புகளை தடுப்பதில் தொடர்ந்து தவறி வருகிறோம் என்பதைக் காட்டுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil