சர்வதேச தீவிரவாதி ஹபீஜ் சயீத்திற்கு சிறைத்தண்டனை – தீவிரவாதத்துக்கு முடிவு கிட்டுமா?.

conviction of Hafiz Saeed : ஐ.நா.,வால் சர்வதேச தீவிரவாதி என்று அறிவிக்கப்பட்ட ஹபீஜ் சயீத்திற்கு, பாகிஸ்தான் நீதிமன்றம் ஐந்தரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

By: February 13, 2020, 2:55:32 PM

மும்பை தீவிரவாத தாக்குதல் உள்ளிட்ட இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத நடவடிக்கைகளின் முக்கிய மூளையாக செயல்பட்ட ஐ.நா.,வால் சர்வதேச தீவிரவாதி என்று அறிவிக்கப்பட்ட ஹபீஜ் சயீத்திற்கு, பாகிஸ்தான் நீதிமன்றம் ஐந்தரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

லஷ்கர் இ தொய்பா அமைப்பை தோற்றுவித்தவரும் மற்றும் ஜமாத் உத் தாவா தீவிரவாத அமைப்பின் தலைவருமான ஹபீஜ் சயீத் உள்ளிட்ட தலைவர்கள் மீது தீவிரவாத செயல்களுக்கு தேவையான நிதியுதவியை திரட்டியது தொடர்பான வழக்குகளின் படி, ஐந்தரை ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாடுகள் அளித்த நெருக்கடி, எப்.ஏ.டி.எப். எனப்படும் சட்டவிரோத பணப் பரிமாற்ற கண்காணிப்புக் குழுவின் பரிந்துரை மற்றும் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இருந்து செயல்படும் தீவிரவாத தடுப்பு குழுவின் அறிவுறுத்தல் உள்ளிட்டவைகளின் பேரிலேயே, இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

யார் இந்த ஹபீஜ் சயீத்?

லஷ்கர் இ தொய்பா என்ற இஸ்லாமிய தீவிரவாத அமைப்பை உருவாக்கியவர் ஹபீஜ் சயீத். இவர் சன்னி பிரிவு இஸ்லாமியர் ஆவார். அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைகழகத்தின் சர்வதேச பாதுகாப்பு மற்றும் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஹபீஜ் சயீத் 1990ம் ஆண்டு லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தை துவக்கினார். அல்லாவின் பெயரால் ஜிகாத் நடத்துவது, தனது மதத்தின் பெருமைகளை மற்றவர்களுக்கு எடுத்துரைப்பது மற்றும் இளைஞர்கள் மற்றும் அடுத்த தலைமுறையினருக்கு இஸ்லாமிய கோட்பாடுகளை கற்றுத்தருவதே, இந்த இயக்கத்தின் குறிக்கோளாக இருந்தது. இதுமட்டுமல்லாது, பாகிஸ்தானுடன் இணைந்து, காஷ்மீரை இந்தியாவில் இருந்து பிரிக்கும் வகையிலான நடவடிக்கைகளையும் இந்த இயக்கம் தொடர்ந்து மேற்கொண்டு வந்ததுள்ளது.
2008ம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலின் மூளையாக செயல்பட்டவர் இந்த ஹபீஜ் சயீத். 2014ம் ஆண்டு பிபிசி தொலைக்காட்சிக்கு ஹபீஜ் அளித்த பேட்டியில், இதனை முற்றிலும் மறுத்துள்ளார். இந்தியாவின் தூண்டுதலினாலேயே, தன் பெயர் அதில் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் கூறியிருந்தார். பாகிஸ்தான் மக்களுக்கு நான் யார் என்று தெரியும். அவர்கள் என்னை நேசிக்கிறார்கள். நான் நிரபராதி. என்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளிலிருந்து கடவுள் என்னை காப்பாற்றுவார் என்று ஹபீஜ் சயீத் அந்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.

மும்பை தீவிரவாத தாக்குதல் மட்டுமல்லாது, 2001ம் ஆண்டு நிகழ்ந்து நாடாளுமன்ற துப்பாக்கிச்சூடு தாக்குதல், 2016ம் ஆண்டு காஷ்மீர் மாநிலம் உரியில் உள்ள இந்திய ராணுவ தலைமையகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் உள்ளிட்டவைகளிலும் ஹபீஜ் சயீத்தின் பங்கு அளப்பரியது என்பது குறிப்பிடத்தக்கது.

2012ம் ஆண்டில் இந்தியா, ஹபீஜ் சயீத்தை நாடு கடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தது. ஹபிஜ் சயீத்தின் தலைக்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்குவதாக அமெரிக்கா அறிவித்தது. இந்நிலையில், 2012ம் ஆண்டு தேடப்படும் சர்வதேச தீவிரவாதியாக ஹபீஜ் சயீத்தை, அமெரிக்கா பிரகடனப்படுத்தியது.

ஹபீஜ் சயீத் பலமுறை கைது செய்யப்பட்டுள்ளபோதிலும், தகுந்த ஆதாரங்கள் இல்லாததால் அவர் விடுதலை செய்யப்பட்டு வந்துள்ளார். ஐக்கிய நாடுகள் உத்தரவை மீறி தனது ஜமாத் உத் தாவா அமைப்பிற்கு நிதி திரட்டிய விவகாரம் தொடர்பாக, 2017ம் ஆண்டு ஜனவரி மாதம், பாகிஸ்தானில் ஹபீஜ் சயீத் கைது செய்யப்பட்டார். ஆனால், போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி, நவம்பர் மாதமே அவர் விடுதலை செய்யபட்டார். சமீபத்தில், 2019ம் ஆண்டு ஜூலை மாத்தில், தீவிரவாத இயக்கங்களுக்கு நிதியுதவி செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்டு, லாகூரில் உள்ள கோட் லக்பாத் சிறையில் அடைக்கப்பட்டார்.

 

ஹபீஜ் சயீத்துக்கு எதிரான வழக்கு என்ன?

பாகிஸ்தான் நாட்டின் தீவிரவாத தடுப்பு சட்டம் 1997ன் பிரிவின் படி, ஹபீஜ் சயீத் உள்ளிட்டோர் மீது தீவிரவாத இயக்கங்களுக்கு நிதியுதவி செய்தல், பணமோசடி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பிரிவுகளில், லாகூர், குஜ்ரன்வாலா மற்றும் முல்தான் உள்ளிட்ட பகுதிகளில் வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

ஜமாத் உத் தாவா அமைப்பிற்கு, அல் அன்பால் டிரஸ்ட், தவாத்புல் இர்ஷாத் டிரஸ்ட் மற்றும் முவாஜ் பின் ஜபால் டிரஸ்ட் உள்ளிட்ட சர்வதேச அளவிலான இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடமிருந்து நிதியுதவி பெற்றதாக சயீத் உள்ளிட்டோர்கள் மீது 23 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நிதியுதவி பெறுவதில், ஹபீஜ் சயீத் மற்றவர்கள் போல் அல்லாமல், அவருக்கென்று தனியான அதுவும் பிரத்யேகமான வழிகளை பின்பற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

மத சடங்குகளுக்காக பலியிடும் விலங்குகளின் தோல்களை பெற்று அதனை தோல் பதனிடும் தொழிற்சாலைகளுக்கு விற்பதன் மூலம் கணிசமான தொகையினை ஹபீஜ் சயீத் பெற்று வந்துள்ளார். 2009ம் ஆண்டு மட்டும் இந்த வர்த்தகத்தின் மூலம், 1.2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வருவாய் பெற்றிருப்பது பார்ப்பவர்களை மிரளச்செய்துள்ளது.

லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜமாத் உத் தாவா அமைப்புகள் நிதியுதவி பெற, பாகிஸ்தான் அரசு, ஐஎஸ்ஐ அமைப்பு பேரூதவி செய்து வருகிறது. இந்த அமைப்புகள், தங்கள் அலுவலகங்களை, வங்கதேசம், நேபாளம், மாலத்தீவுகள், வளைகுடா நாடுகள் உள்ளிட்டவைகளில் நிர்வகித்து வருவதாக வந்துள்ள தகவல் சர்வதேச நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹபீஜ் சயீத், கடந்த 2019ம் ஆண்டு ஜூலை மாதம் லாகூரில் இருந்து குஜ்ரன்வாலா செல்லும் வழியில், பாகிஸ்தான் தீவிரவாத தடுப்பு படையினரால் கைது செய்யப்பட்டார். இந்த கைது நடவடிக்கைக்கு சில நாட்களுக்கு முன்புதான், அமெரிக்காவில் அதிபர் டிரம்பை – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இடையேயான சந்திப்பின்போது, தீவிரவாதத்தை ஒடுக்குவதில், பாகிஸ்தான் அக்கறை காட்டவில்லை என்று டிரம்ப் குற்றம் சாட்டியிருந்தார்.

தீவிரவாத அமைப்புகளுக்கு தொடர்ந்து பாகிஸ்தான் ஆதரவாக இருந்துவரும் நிலையில், எப்.ஏ.டி.எப். எனப்படும் சட்டவிரோத பணப் பரிமாற்ற கண்காணிப்புக் குழுவின் எச்சரிக்கையின் பேரில், அது தனிமைப்படுத்தப்பட்டது. இதன்மூலம், சர்வதேச நாடுகளிடையே பாகிஸ்தான் பெற்றுவந்த நிதியுதவிகள் நிறுத்தப்பட்டன. இதனைத்தொடர்ந்தே, ஹபீஜ் சயீத் மீதான நடவடிக்கைககளை பாகிஸ்தான் முடுக்கிவிட்டது.

சர்வதேச தீவிரவாதி ஹபீஜ் சயீத்திற்கு பாகிஸ்தான் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளதன் மூலம், தீவிரவாத நடவடிக்கைகள் குறையும் என்று நம்புவோமாக…

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

Web Title:Hafiz saeed hafiz saeed convicted lashkar e taiba jamat ud dawa

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X