கர்நாடகாவில் இருந்து ஹக்கி பிக்கி பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 181-க்கும் மேற்பட்டோர் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள சூடானில் சிக்கித் தவிக்கின்றனர். அவர்களை மீட்க அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஹக்கி பிக்கி பழங்குடிகள் யார்? பலர் தொலைதூர சூடானுக்கு ஏன் பயணம் செய்தனர்?
ஹக்கி பிக்கி பழங்குடிகள் யார்?
ஹக்கி பிக்கி என்பவர்கள் மேற்கு மற்றும் தென்னிந்தியாவில் உள்ள பல மாநிலங்களில், குறிப்பாக வனப்பகுதிகளுக்கு அருகில் வாழும் ஒரு பழங்குடி மக்கள். ஹக்கி பிக்கி என்பதற்கு கன்னடத்தில் ஹக்கி என்றால் ‘பறவை’, பிக்கி என்றால் ‘பிடிப்பவர்கள்’ என்று பொருள். இவர்கள் ஒரு அரை நாடோடி பழங்குடி மக்கள், பாரம்பரியமாக பறவை பிடிப்பவர்கள், வேட்டையாடுபவர்கள் ஆவர்.
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, கர்நாடகாவில் ஹக்கி பிக்கி மக்கள் தொகை 11,892 பேர். அவர்கள் பெரும்பாலும் தாவங்கேரே, மைசூரு, கோலார், ஹாசன் மற்றும் சிவமோகா மாவட்டங்களில் வாழ்கின்றனர். வெவ்வேறு பிராந்தியங்களில், அவர்கள் வடக்கு கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள மெல்-ஷிகாரி போன்ற வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறார்கள்.
பழங்குடியினர் குறித்து ஆய்வு நடத்திய சாமராஜநகர் பல்கலைக்கழக துணைவேந்தரும், மானுடவியலாளருமான எம்.ஆர்.கங்காதர் கூறுகையில், “வாழ்வாதாரம் தேடி ஹக்கி பிக்கி மக்கள் குழு குழுவாக இடம் பெயர்கின்றனர். அவர்கள் குஜராத்தியா, பன்வார், கலிவாலா மற்றும் மேவாரஸ் என நான்கு குலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். பாரம்பரிய இந்து சமுதாயத்தில் இந்த குலங்களை சாதிகளுடன் ஒப்பிடலாம். அந்த காலங்களில், குலங்கள் மத்தியில் ஒரு படிநிலை இருந்தது, குஜராத்தியாவை மேலேயும், மேவாரஸ் கீழேயும் இருந்தது. காடுதான் ஹக்கி பிக்கி மக்களின் முக்கிய இயற்கை ஆதாரம்” என்று கூறினார்.
ஹக்கி பிக்கி பழங்குடியினர் எங்கே வசிக்கிறார்கள்?
ஹக்கி பிக்கி மக்கள் உண்மையில் குஜராத் மற்றும் ராஜஸ்தானின் எல்லையோர மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்று நம்பப்படுகிறது. கங்காதர் கருத்துப்படி, அவர்கள் வேட்டையைத் தேடி தெற்கு நோக்கி வந்தனர். கர்நாடகாவிற்கு, அவர்கள் ஆந்திரப் பிரதேசம் வழியாக வந்ததாகத் தெரிகிறது. ஏனென்றால், ஹைதராபாத்திற்கு அருகிலுள்ள ஜலபல்லி என்ற இடத்தை அவர்களின் மூதாதையர் வீடு என்று அவர்கள் நினைவில் வைத்திருக்கிறார்கள். அங்கு அவர்களின் முன்னோர்கள் கணிசமான காலம் வாழ்ந்தனர். அவர்கள் இப்போது தென்னிந்தியா முழுவதும் பரவி உள்ளனர்” என்றார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, பெண்கள் ராஜஸ்தானில் பொதுவான காக்ரா (பாவாடை) அணிந்தனர். ஆனால், இப்போது அவர்கள் புடவைகளையும் பிற ஆடைகளையும் அணிகிறார்கள்.
அவர்களின் பாரம்பரிய வேலைகள் என்ன, இப்போது அவர்கள் என்ன செய்கிறார்கள்?
பாரம்பரியமாக, ஹக்கி பிக்கி மக்கள் காடுகளில் வாழ்ந்து, வருடத்திற்கு ஒன்பது மாதங்கள் நாடோடி வாழ்க்கை நடத்தி, மூன்று நாட்களுக்கு நிரந்தர முகாம்களுக்குத் திரும்புபவர்கள். மைசூரு மாவட்டத்தில் உள்ள ஹக்கி பிக்கி கிராமமான பக்ஷிராஜபுராவில் உள்ள உள்ளூர்வாசிகளை இந்தியன் எக்ஸ்பிரஸ் பார்வையிட்டது. ஆரம்பத்தில், ஹக்கி பிக்கி பழங்குடியின பெண்கள் கிராமங்களில் பிச்சை எடுப்பார்கள், ஆண்கள் வேட்டையாடுவார்கள் என்று கூறினார்கள். ஆனால் வனவிலங்கு பாதுகாப்பு சட்டங்கள் கடுமையாக்கப்பட்டதால், கர்நாடகாவில் உள்ள ஹக்கி பிக்கிகள் உள்ளூர் கோயில் கண்காட்சிகளில் மசாலா, மூலிகை எண்ணெய்கள் மற்றும் பிளாஸ்டிக் பூக்களை விற்கத் தொடங்கினர்.
பழங்குடியினருக்காகச் செயல்படும் கர்நாடக ஆதிவாசி புடகட்டு ஹக்கி பிக்கி ஜனங்கா என்ற அமைப்பின் மாநிலத் தலைவர் பி எஸ் நஞ்சுண்ட சுவாமி, 1950-களில் ஹக்கி பிக்கி மக்கள் காடுகளில் இருந்து கிராமங்களுக்குச் சென்றதாகக் கூறினார். “முன்பெல்லாம் நாங்கள் பிழைப்புக்காக விலங்குகளைக் கொன்றோம். ஆனால், எங்கள் சமூகத்தைச் சேர்ந்த சிலர் மீது வனவிலங்கு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். எனவே, மூலிகை எண்ணெய்கள் மற்றும் பிற பொருட்களை கிராமங்கள் மற்றும் நகரங்களில் விற்பனை செய்வதற்கு மாறினோம்.” என்று கூறினார்.
மூலிகை எண்ணெய் வணிகம் தொடங்கிய பழங்குடி பழங்குடி மக்கள், இப்போது தங்கள் தயாரிப்புகளை விற்க உலகம் முழுவதும் பல இடங்களுக்குச் செல்கிறார்கள்.
நஞ்சுண்ட சுவாமி கருத்துப்படி, தமிழ்நாட்டில் உள்ள ஹக்கி பிக்கி மக்கள் சுமார் 20-25 ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் பிற இடங்களுக்குச் சென்று சில கற்களை விற்பனை செய்தனர். இந்த செயல்பாட்டில் ஆப்பிரிக்க கண்டத்தில் ஆயுர்வேத பொருட்களுக்கு அதிக தேவை இருப்பதைக் கண்டறிந்தார்கள். அவர்கள் தங்கள் தயாரிப்புகளை ஆப்பிரிக்காவில் விற்கத் தொடங்கினர். கர்நாடக ஹக்கி பிக்கி மக்கள் அவர்களைப் பின்தொடர்ந்தனர். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் கடந்த 20 ஆண்டுகளாக ஆப்பிரிக்க நாடுகளுக்குச் சென்று வருகின்றனர்.
ஹக்கி பிக்கிகளின் கல்வி நிலை இன்னும் குறைவாகவே உள்ளது. உதாரணமாக, 2,000 பேர் கொண்ட பக்ஷிராஜபுர மக்கள்தொகையில், எட்டு பேர் மட்டுமே பட்டப்படிப்பு அளவிலான படிப்புகளை முடித்துள்ளனர். ஒருவர் போலீஸ் கான்ஸ்டபிளாக பணிபுரிகிறார்.
ஹக்கி பிக்கி மக்களின் சடங்குகள் மற்றும் பழக்கவழக்கங்கள் என்ன?
கர்நாடகாவில் உள்ள ஹக்கி பிக்கி மக்கள் இந்து மரபுகளைப் பின்பற்றி அனைத்து இந்து பண்டிகைகளையும் கொண்டாடுகின்றனர். அவர்கள் அசைவம் சாப்பிடுபவர்கள். ஒரு குடும்பத்தில் மூத்த மகன் தன் தலைமுடியை வெட்டக்கூடாது. அதனால்ம் அவனை எளிதில் அடையாளம் காண முடியும்.
பழங்குடியினர் மாமன் மகள், அத்தை மகளை திருமணம் செய்துகொள்வதை விரும்புகிறார்கள். உள்ளூர்வாசிகளின் கருத்துப்படி, வழக்கமான திருமண வயது பெண்களுக்கு 18 மற்றும் ஆண்களுக்கு 22 ஆகும். மணமகன் மணப்பெண்ணின் குடும்பத்திற்கு வரதட்சணை கொடுக்கும் சமூகம் தாம்பத்தியம் ஆகும். பக்ஷிராஜபுரத்தை சேர்ந்த டி எவராஜ் (28), இவர் தனது மனைவிக்கு திருமணம் செய்ய வரதட்சணையாக தனது மாமியாரிடம் ரூ.50,000 கொடுத்ததாக கூறினார். தனிக்குடித்தனம் என்பது வழக்கமாக உள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளில் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள்?
பக்ஷிராஜபுர வாசிகள், வறுமையில் இருந்து விரைவாக தப்பிக்க ஆப்பிரிக்க நாடுகள் ஒரு வாய்ப்பை வழங்குவதாகக் கூறினர்.
“ஆப்பிரிக்க கண்டத்தில் எங்கள் தயாரிப்புகளுக்கு தேவை உள்ளது. ஒரு நபர் ரூ.5 லட்சத்தை மூலப் பொருட்களில் (செம்பருத்திப் பொடி, எண்ணெய், நெல்லிக்காய், ஆயுர்வேதச் செடிகள் போன்றவை) முதலீடு செய்தால், ஆப்பிரிக்க நாடுகளில் 3-6 மாதங்களில் இரட்டிப்பாகவோ அல்லது மும்மடங்காகவோ சம்பாதிக்க வாய்ப்பு உள்ளது. ஆனால், இந்தியாவில் அப்படிப்பட்ட சந்தையும் வியாபாரமும் இல்லை. நாங்கள் ஆன்லைனில் விற்கிறோம். பேஸ்புக் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தயாரிப்புகளை விளம்பரப்படுத்துகிறோம்” என்று ஹக்கி பிக்கி சமூக உறுப்பினர் அனில் குமார் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“