ஹரியானா அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் மற்றும் ஜமாத் இ இஸ்லாமி போன்ற அமைப்புகளில் சேர, அதன் நடவடிக்கைகளில் பங்கேற்ற விதிக்கப்பட்டிருந்த தடையை 54 ஆண்டுகளுக்குப் பிறகு அம்மாநில அரசு நீக்கியுள்ளது.
இந்திரா காந்தி பிரதமராக இருந்த சமயத்தில், நவம்பர் 30, 1966 அன்று ஹரியானா சிவில் சர்வீஸ்(அரசு ஊழியர்களின் நடத்தை) விதிகள் படி, அரசு ஊழியர்கள் கட்சி அல்லது அமைப்புகளில் சேர தடை விதிக்கப்பட்டது. பின்னர், 1975இல் அந்த தடை நீக்கப்பட்டு, 1980இல் மீண்டும் அமலுக்கு வந்தது.
1966, 1980இன் தடை அறிக்கை என்ன சொல்கிறது
உள் துறை அமைச்சகம் நவம்பர் 30, 1966 அன்று வெளியிட்ட அறிக்கையின்படி, மத்திய சிவில் சர்வீஸ்(அரசு ஊழியர்களின் நடத்தை) 1964 விதிகள்படி, அரசு ஊழியர்கள் எவ்வித அரசியல் கட்சிகளிலோ அல்லது அமைப்புகளிலோ உறுப்பினராக இருக்கக்கூடாது. அவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்திருக்கக்கூடாது. கூட்டங்களில் பங்கேற்க கூடாது. இதை மீறி, கட்சி அல்லது அமைப்புடன் தொடர்பு வைத்திருக்கும் பட்சத்தில், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறுகிறது.
பின்னர், 1975இல் அந்த தடை நீக்கப்பட்டு, 1980இல் மீண்டும் அமலுக்கு வந்தது. 1980 இல் வெளியிட்ட அறிக்கையில், “நாட்டின் தற்போதைய சூழ்நிலையில், மதச்சார்பற்ற நிலையை உறுதி செய்ய வேண்டும். அதில், அரசு ஊழியர்களின் பங்கு முக்கியமாகும். பிரிவுவாத உணர்வுகள் மற்றும் சார்புகளை ஒழிக்க வேண்டியதன் அவசியத்தைக் கூறுகிறது. அதன்படி, அரசாங்கம் மற்றும் அதன் அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்புகள் எந்தவொரு பிரிவு வாத அமைப்புக்கு ஆதரவளிக்கூடாது. இதனை மீறுவது கடுமையான ஒழுக்கமற்ற செயலாகக் கருதப்பட வேண்டும் என்றும், தவறு செய்த ஊழியர்களுக்கு எதிராகப் பொருத்தமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் நிதித் துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஹரியானா அரசின் புதிய உத்தரவு என்ன?
ஹரியானா அரசு தலைமை செயலர் விஜய் வர்தன், அனைத்து துறைத் தலைவர்களுக்கும் எழுதியுள்ள கடிதத்தில், ” ஹரியானா சிவில் சர்வீசஸ் (அரசு ஊழியர்களின் நடத்தை) 2016 விதிகளின்படி, அரசு ஊழியர்கள் அனைவரும் அரசியல் கூட்டங்கள் மற்றும் தேர்தல்களில் பங்கேற்பது, ஆர்எஸ்எஸ், ஜமாத் இ இஸ்லாமி போன்ற அமைப்புகளில் சேருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 1967,1970,1980 ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட அரசாணைகள் தற்போதைய காலத்திற்குப் பொருத்தமற்றதாக இருப்பதால், அவை திரும்ப பெறப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஹரியானா அரசு அதிகாரி தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசுகையில், “அரசு ஊழியர்கள் அமைப்புகள் மற்றும் தேர்தலில் பங்கேற்க விதிக்கப்பட்ட தடையானது , 1975 ஆம் ஆண்டிலே நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பல மாநிலங்களும்
அந்த தடையை நீக்கினர். இருப்பினும், மக்களிடம் முழுமையாக அதனைக் கொண்டு சேர்க்கை முடியவில்லை. தற்போது, அவை மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளன. ஆர்எஸ்எஸ் அல்லது ஜமாத்-இ-இஸ்லாமி இந்திய தேர்தல் ஆணையத்தில் பட்டியலிடப்பட்ட அரசியல் அமைப்புகள் அல்ல. ஹரியானா அரசாங்கம் தற்போது உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தல்களை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. எந்த அரசு ஊழியரும் இந்த அமைப்புகளுடன் சேர தடை இல்லை” என்றார்.
மற்ற எந்தெந்த மாநிலங்களிலேல்லாம் தடை?
ஜம்மு காஷ்மீரில், அரசு ஊழியர்கள் இத்தகையை அமைப்புகளில் தொடர்பு வைத்துள்ளார்கள் என்று தெரிந்தால், உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளது. உள்துறை அமைச்சகத்தின் பிப்ரவரி 28, 2019 அறிவிப்பின் படி ,ஜமாத்-இ-இஸ்லாம் அமைப்புக்கு ஐந்து ஆண்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை விதிக்கப்பட்ட அமைப்புடன் அரசு ஊழியர் தொடர்பில் இருந்தால், உடனடியாக பணி நீக்கம் செய்திட அதிகாரம் உள்ளது
ராஜஸ்தானில் ஆர்எஸ்எஸ், ஜமாத்-இ-இஸ்லாமி உள்பட 17 அமைப்புகளின் உறுப்பினராக அரசு அதிகாரிகள் இருந்திட தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சமூக ஊடகங்களில் இந்த அமைப்புகளுக்கு ஆதரவாக ஏதேனும் பதிவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படவும் அதிகாரம் உள்ளது.
அதே சமயம், பல மாநிலங்களில் இந்த தடை நீக்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் முதலமைச்சராக சிவ்ராஜ் சிங் 2006இல் பதவியேற்றதும், ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேர்வதற்கான தடையை நீக்கினார். 2015இல், சத்தீஸ்கர் அரசாங்கம், ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேர அரசு ஊழியர்களுக்கு அனுமதி வழங்கியது. அதே போல, இமாச்சலில் முன்பு ஆட்சி புரிந்த பாஜக அரசு, இந்த தடையை 2008இல் நீக்கியது.
காங்கிரஸ் விமர்சனம்
ஹரியானா அரசின் இந்த உத்தரவிற்குக் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ், முதலமைச்சர் கத்தார் அரசாங்கம், பாஜக-ஆர்எஸ்எஸ் பள்ளியை நடத்தி வருகிறது என விமர்சித்துள்ளது.
இதுகுறித்து பேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, ” அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் மற்றும் ஜமாத் இ இஸ்லாமி போன்ற அமைப்புகளில் சேர விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கிட, 2016 விதியை ஹரியானா அரசு சுட்டிக்காட்டுகிறது. ஆனால், மேற்கூறிய விதிகளின் உட்பிரிவு 8 இல், எந்தவொரு அரசு ஊழியரும் எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்பு கொள்ளவோ அல்லது இயக்கத்தை நாடவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர் வாக்களிக்க முடியும் என்றாலும், கட்சிக்காகப் பிரச்சாரம் செய்திடவோ அதிகாரத்தைப் பயன்படுத்தவோ தடை விதிக்கிறது.
மறுபுறம், உட்பிரிவு 9, இந்திய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு அல்லது பொது ஒழுங்குக்குத் தீங்கு விளைவிக்கும் எந்தவொரு சங்கத்திலும் அரசு ஊழியர்கள் சேர முடியாது என்று குறிப்பிடுகிறது. ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் அரசாங்கத்தை நடத்துகிறாரா அல்லது பாஜக ஆர்எஸ்எஸ் பள்ளியை நடத்துகிறதா என கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil