TB in India , TB patient, health disruptions due to Coronavirus causes 95k addition TB Deaths in India
சுகாதார சேவைகளில் கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்திய இடையூறு காரணமாக உலகளவில் காசநோயின் பாதிப்புகள் அதிகரிக்கக் கூடும் என்று சமீபத்தில் வெளியான புதிய கணித / உருவகப்படுத்துதல் மாதிரிகள் தெரிவிகின்றன. அடுத்த ஐந்து ஆண்டுகளில், இந்தியாவில் மட்டும் 95,000க்கும் அதிகமான கூடுதல் காசநோய் இறப்புகள் ஏற்படுத்தும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வு European Respiratory Journal எனும் இதழில் வெளியிடப்பட்டது.
Advertisment
அடுத்த ஐந்து ஆண்டுகளில் சீனா, இந்தியா, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் காசநோய் பாதிப்புகளும், இறப்புகளும் கூடுதலாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
Advertisment
Advertisements
கொரோனா பெருந்தொற்றை போலவே, காசநோய் ஏற்படுத்தும் மைக்கோபாக்டீரியாக்கள் நீர்த்துளிகள் மூலம் மற்றவருக்கு பரவுகின்றது. எனவே, தற்போது நாம் கடைபிடிக்கும் சமூக விலகல் நெறிமுறை, முகக்கவச உரை போன்றவை காசநோய்கள் பாதிப்பைக் குறைக்கும் என்ற வாதத்தையும் ஆய்வாளர்கள் முன்வைக்கின்றனர்.எனினும், இதுபோன்ற காரணிகளை கணக்கில் எடுத்துக் கொண்ட பிறகும், 110,000 க்கும் மேற்பட்ட கூடுதல் காசநோய் இறப்புகள் ஏற்படக்கூடும் என்று ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. (இந்தியாவில் 95,000, தென்னாப்பிரிக்காவில் 13,000 மற்றும் சீனாவில் 6,000). மிக மோசமான சூழ்நிலையில், இந்த எண்ணிக்கை 200,000 வரை அதிகரிக்ககூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
சமீபத்திய நாட்களில் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் சீனா, இந்தியா, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில், காசநோயைக் கண்டறிந்து சிகிச்சை பெறும் நபர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து வருவதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். உலகளாவிய காசநோய் பாதிப்புகளில் சுமார் 40% இந்த மூன்று நாடுகளில் கண்டறியப்படுகிறது. பலவகையான மக்கள், புலம் பெயர் தொழிலாளர்கள் இடம் பெயர்தல், சமூக இடைவெளி மற்றும் பொது முடக்கத்தின் விளைவு, பல மாதங்களுக்கு மேலாக காசநோய் சிகிச்சையில் ஏற்பட்ட இடையூறு போன்ற காரணிகளை வைத்து கூடுதல் காசநோய் இறப்புகளை ஆய்வாளர்கள் மதிப்பிட்டனர்.
லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் & டிராபிகல் மெடிசின், லான்காஸ்டர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் மெய்நிகர் நிகழ்ச்சி மூலம் 2020ஆம் ஆண்டுக்கான வருடாந்திரக் காசநோய் அறிக்கையை நேற்று வெளியிட்டார். 2025ஆம் ஆண்டுக்குள் காசநோயை ஒழிப்பதற்கு, காசநோய் சிகிச்சை சேவைகளை விரிவுபடுத்துவது மற்றும் சுகாதாரத் துறையைத் தாண்டி காசநோய்க்கு எதிரிகளாக உள்ள மற்ற துறைகளையும் ஒருங்கிணைத்து செயல்பட வேண்டியது அவசியமாக உள்ளது. இந்த அனைத்து முயற்சிகளும் குறிப்பிடத்தக்க பலன்களை அளித்து வருகின்றன என்று அமைச்சர் தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil