நாடு முழுவதும் கோவிட் -19 தொற்றுநோய் அதிகரித்துள்ளது. கொரோனா பாதித்தாலும் பல உயிர் பிழைத்துள்ளனர். ஆனால் நோய்த்தொற்று தீர்க்கப்பட்ட பின்னரும் பலவிதமான சுகாதார பிரச்சினைகளை தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். லேசான பாதிப்புகள் இருந்தவர்களுக்கு கூட இந்த பிரச்சனைகள் இருக்கின்றன.
கோவிட் -19 இன் பாதிப்புகள் பற்றி நீண்ட காலம் விரிவான ஆய்வில், செயின்ட் லூயிஸில் உள்ள வாஷிங்டன் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசின் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள், கோவிட் -19 தொற்று ஏற்பட்டு உயிர் பிழைத்தவர்கள் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்க தேவையில்லாத அளவு பாதிக்கப்பட்டவர்கள் உட்பட, வைரஸ்.கண்டறியப்பட்ட ஆறு மாதங்களில் இறப்பு ஏற்படும் அபாயம் அதிகரித்து இருப்பதாக கூறியுள்ளனர்.
கோவிட் -19 உடன் தொடர்புடைய ஏராளமான நோய்களை ஆராய்ச்சியாளர்கள் பட்டியலிட்டுள்ளனர். கோவிட் -19 இன் நீண்டகால சிக்கல்கள் குறித்து ஒரு பெரிய கண்ணோட்டத்தை அவர்கள் வழங்குகிறார்கள். மேலும் இந்த நோய் வரும் ஆண்டுகளில் உலக மக்கள் தொகையில் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தையும் வெளிப்படுத்துகிறார்கள். அமெரிக்க தரவுத்தளத்தில் 87,000 க்கும் மேற்பட்ட கோவிட் -19 நோயாளிகள் மற்றும் கிட்டத்தட்ட 5 மில்லியன் கட்டுப்பாட்டு நோயாளிகளை உள்ளடக்கிய இந்த ஆய்வு, நேச்சர் இதழில் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது.
ஆரம்ப தொற்றுநோயிலிருந்து தப்பிய பின்னர் (நோயின் முதல் 30 நாட்களுக்கு பின்), கோவிட் -19 பாதித்து உயிர் பிழைத்தவர்கள், பொது மக்களுடன் ஒப்பிடும்போது அடுத்த ஆறு மாதங்களில் கிட்டத்தட்ட 60% இறப்பு அபாயத்தைக் கொண்டுள்ளனர் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆறு மாத காலப்பகுதியில், அனைத்து கோவிட் -19 பாதித்து உயிர் பிழைத்தவர்களிடையே அதிகப்படியான இறப்புகள் 1,000 நோயாளிகளுக்கு எட்டு பேர் என மதிப்பிடப்பட்டுள்ளது. கோவிட் -19 உடன் மருத்துவமனையில் சேர்க்கப்படும் அளவுக்கு நோய்வாய்ப்பட்ட நோயாளிகளிலும், நோயின் முதல் 30 நாட்களுக்கு அப்பால் உயிர் பிழைத்தவர்களிலும், அடுத்த ஆறு மாதங்களில் 1,000 நோயாளிகளுக்கு அதிகப்படியாக 29 இறப்புகள் நிகழ்ந்துள்ளன.
ஆரம்பத்தில் வைரஸ் சுவாச உறுப்புகளை பாதித்தபோதிலும், நீண்ட நாள் கோவிட் -19 வைரஸ் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பு அமைப்பையும் பாதிக்கும் என்பதை ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். கோவிட் -19 உடன் தொடர்புடைய நோய்களின் 379 நோயறிதல்கள்,பரிந்துரைக்கப்பட்ட 380 மருந்துகள் மற்றும் 62 ஆய்வக சோதனைகள் ஆகியவற்றை ஆராய்ச்சியாளர்கள் மதிப்பீடு செய்தனர். அதில், புதிதாக கண்டறியப்பட்டது என்னவெனில், முக்கிய சுகாதார பிரச்சினைகள் கோவிட் -19 நோயாளிகளுக்கு குறைந்தது ஆறு மாதங்களுக்கும் மேலாக நீடித்தது. மேலும், உடலின் ஒழுங்குமுறை அமைப்பு மற்றும் கிட்டத்தட்ட ஒவ்வொரு உறுப்புகளையும் தொற்று பாதித்துள்ளது என்பதாகும்.
சுவாச அமைப்பு: தொடர்ச்சியான இருமல், மூச்சுத் திணறல் மற்றும் இரத்தத்தில் குறைந்த ஆக்ஸிஜன் அளவு.
நரம்பு மண்டலம்: பக்கவாதம், தலைவலி, நினைவக பிரச்சினைகள் மற்றும் சுவை மற்றும் வாசனை உணர்வுகளில் பிரச்சினைகள்.
மன ஆரோக்கியம்: கவலை, மனச்சோர்வு, தூக்க பிரச்சினைகள்.
வளர்சிதை மாற்றம்: நீரிழிவு நோயின் ஆரம்பம், உடல் பருமன் மற்றும் அதிக கொழுப்பு.
இதய அமைப்பு: கடுமையான கரோனரி நோய், இதய செயலிழப்பு, இதயத் துடிப்பு மற்றும் ஒழுங்கற்ற இதய தாளங்கள்.
இரைப்பை குடல் அமைப்பு: மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு மற்றும் அமில ரிஃப்ளக்ஸ்.
சிறுநீரகம்: கடுமையான சிறுநீரக காயம் மற்றும் நாள்பட்ட சிறுநீரக நோய், இதன் காரணமாக கடுமையான சந்தர்ப்பங்களில், டயாலிசிஸ் தேவைப்படும்.
உறைதல் கட்டுப்பாடு: கால்கள் மற்றும் நுரையீரலில் இரத்த உறைவு.
தோல்: சொறி மற்றும் முடி உதிர்தல்.
தசைக்கூட்டு அமைப்பு: மூட்டு வலி மற்றும் தசை பலவீனம்.
பொது ஆரோக்கியம்: உடல்நலக்குறைவு, சோர்வு மற்றும் இரத்த சோகை.
தொற்று பாதித்து உயிர் பிழைத்தவர்கள் மேற்கண்ட பிரச்சனைகள் அனைத்திலும் பாதிக்கப்படவில்லை என்றாலும், பலருக்கு உடல்நலம் மற்றும் வாழ்க்கைத் தரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil