Advertisment

இந்தி ஆட்சி மொழி நகர்வுகளும், தடுத்து நிறுத்திய போராட்டங்களும்!

இந்தி வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் பேசப்படும் மொழியாக இருந்ததால், அது நாட்டின் தேசிய மொழிவழி ஒருங்கிணைப்புக்கு பாதுகாப்பான விருப்பமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்தி பேசாத நாட்டின் பெரும் பகுதியினர் இந்த யோசனையில் மகிழ்ச்சியடையவில்லை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Hindi Diwas, Hindi Diwas news, Hindi Diwas explained, Hind official language, Hindi official language India, Constituent Assembly of India, Indian Express

இந்தி வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் பேசப்படும் மொழியாக இருந்ததால், அது நாட்டின் தேசிய மொழிவழி ஒருங்கிணைப்புக்கு பாதுகாப்பான விருப்பமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்தி பேசாத நாட்டின் பெரும் பகுதியினர் இந்த யோசனையில் மகிழ்ச்சியடையவில்லை.

Advertisment

இந்தியை சுதந்திர இந்தியாவின் அலுவல் மொழியாக மாற்றுவதற்கான தேர்வ என்பது பல்வேறு மொழிகள், எழுத்துகள் மற்றும் பேச்சுவழக்குகளைக் கொண்ட நாட்டில் ஒருங்கிணைக்கும் சக்தியைக் கண்டறிய வேண்டியதன் அவசியத்தில் வேரூன்றியுள்ளது.

இந்தி திவஸ் என்கிற இந்தி மொழி தினம் கொண்டாட்டம் செப்டம்பர் 14, 1949 அன்று இந்திய அரசியலமைப்புச் சபை இந்தியை மத்திய அரசின் அதிகாரப்பூர்வ மொழியாக்க முடிவெடுத்த நாளை நினைவுகூருகிறது. அதே நேரத்தில் ஆங்கிலம் 15 ஆண்டுகளுக்கு இணை மொழி அந்தஸ்தை வைத்திருக்கும் என்று கூறியது.

முன்ஷி-அய்யங்கார் ஃபார்முலா என்று அழைக்கப்படும் இந்த முறை வரைவுக் குழு உறுப்பினர்களான கே.எம். முன்ஷி மற்றும் என். கோபாலசுவாமி அய்யங்கார் ஆகியோரின் பெயரால் அழைக்கப்படுகிறது. இந்த குழு இந்தி மொழியை முதன்மையாக பேசும் மாநிலங்கள் மற்றும் ஆங்கிலத்திற்கு அரசியலமைப்பு அந்தஸ்து வேண்டும் என்று விரும்பிய தென்னிந்தியாவில் இருந்து வந்த பிரதிநிதிகளின் கோரிக்கைகளை கணக்கில் எடுத்துக்கொண்டது.

இந்தி மொழி ஆதிக்கம் பற்றிய விவாதம் புதிதல்ல. 1800-களின் நடுப்பகுதியில் இருந்து, இந்திய துணைக்கண்டத்தின் சில பகுதிகளில் உருதுவுடன் முரண்பட்டது. இன்று நாம் அதை 'ஹிந்தி பெல்ட்' என்றும் இந்தி மொழி பேசும் பகுதிகள் என்று அழைக்கிறோம்.

இந்தி - உருது இடையே போட்டி

வரலாற்றாசிரியர் சுமித் சர்க்கார், ‘நவீன இந்தியா: 1885-1947’ (1989) என்ற தனது புகழ்பெற்ற புத்தகத்தில், “உருது வட இந்தியாவின் பெரும்பகுதியில், இஸ்லாமியர்களுக்கு இந்துக்களுக்கும் இடையே ஒரு கண்ணியமான கலாச்சார மொழியாக இருந்தது” என்று குறிப்பிட்டார். 1881-90-க்கு இடைப்பட்ட காலத்தில் இந்தியை விட இரண்டு மடங்கு உருது புத்தகங்கள் ஐக்கிய மாகாணங்களில் வெளியிடப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். பத்திரிகைகளிலும் இதே நிலைதான் இருந்தது. இந்தியில் வெளியான 8002 செய்தித்தாள்களுடன் ஒப்பிடுகையில் 16,256 உருது செய்தித்தாள்கள் புழக்கத்தில் இருந்தன என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி இந்திய துணைக்கண்டத்தில் காலடி எடுத்து வைத்தவுடன் நிலைமை மாறத் தொடங்கியது. 1800-களின் நடுப்பகுதியில், கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவில் தனது நிலையை உறுதிப்படுத்தத் தொடங்கியபோது, நாட்டின் பெரும் பகுதிகள் முகலாய ஆட்சியின் கீழ் இருந்தன. பாரசீக மொழி அதிகாரப்பூர்வ நீதிமன்ற மொழியாக இருந்தது. 1830-களில், கிழக்கிந்தியக் கம்பெனியின் நிர்வாகத்தின் உயர் மட்டங்களில் பாரசீக மொழிக்கு பதிலாக ஆங்கிலத்தை மாற்றியது. உள்ளூர் வட்டார மொழிகள் கீழ் மட்டங்களில் பயன்பாட்டில் இருந்தது. வட இந்தியாவில் உள்ளூர் மக்களிடையே உருது மொழியின் தற்போதைய பிரபலத்தின் அடிப்படையில், அரசாங்க சேவையின் கீழ் மட்டங்களில் அது ஒரு புதிய ஆதிக்கத்தை எதிகொண்டது.

19-ம் நூற்றாண்டின் மத்தியில் வட இந்தியாவில் ஏற்பட்ட சமூக-அரசியல் மாற்றங்கள், இந்தி மற்றும் உருது ஆகிய இரு மொழிகளின் பிளவுகளுடன் அரசாங்கக் கல்வி முறையின் விரைவான விரிவாக்கத்துடன் சேர்ந்து கொண்டது. இரண்டு மொழிகளும் குறிப்பிட்ட சமூகத்திற்கு பிரத்தியேகமானவை அல்ல என்றாலும், பிராமணர், ராஜ்புத் மற்றும் பனியா சாதிகளை சேர்ந்தவர்கள் இந்தி பள்ளிகளுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருந்தது என்றும், பாரசீக மற்றும் உருது பள்ளிகள் முஸ்லீம்கள் மற்றும் காயஸ்தர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்ததாகவும் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. இதன் விளைவாக, பிந்தைய சமூகங்கள் அரசாங்க சேவைகளில் பணியமர்த்துவதை எளிதாக அடைந்தனர்.

அரசாங்கத்தில் ஒரு வேலையைப் பெறுவதற்கான ஆசை, இந்தி மொழியின் பல ஆதரவாளர்களை அதன் தகுதிகளை உச்சரிக்கத் தூண்டியது. அது துணைக்கண்டத்தின் பூர்வீக குடிகளின் மொழி என்பதும், முகலாய ஆட்சியின் போக்கில் அது அடக்கப்பட்டது என்பது உட்பட பேசப்பட்டது. இந்தி இலக்கியத்தின் தந்தை என்று அழைக்கப்படும் பரதேந்து ஹரிஷ்சந்திரா மற்றும் அகில பாரதிய இந்து பரிஷத்தை நிறுவிய பண்டிட் மதன் மோகன் மாளவியா போன்றவர்கள் இந்தியை பிரபலப்படுத்துவதற்கான இயக்கத்தின் முக்கிய நபர்களாக இருந்தனர். நகரி பிரச்சாரினி சபா பனாரஸ், அலகாபாத்தில் இந்தி சாகித்ய சம்மேளனம் மற்றும் ராஷ்ட்ர பாஷா பிரச்சார சமிதி போன்ற அமைப்புகள் வட இந்தியாவின் பெரும் பகுதிகளில் இந்தி மொழியை மேலும் மேம்படுத்தும் நோக்கத்துடன் வளர்ந்தன.

இறுதியாக 1900-ம் ஆண்டில், வடமேற்கு மாகாணங்களின் அரசாங்கம் மற்றும் அவத் மாகாண அரசாங்கம் தேவநாகரி மற்றும் உருது எழுத்துக்களுக்கு சம அந்தஸ்து வழங்கியது தங்கள் மொழி அழிந்துபோகும் அபாயத்தில் இருப்பதாக நம்பிய அப்பகுதி முஸ்லிம்களுக்கு ஏமாற்றம் அளித்தது.

இந்திய துணைக்கண்டத்தின் பிரிவினையில் உச்சக்கட்டத்தை அடைந்த இந்து-முஸ்லிம் மோதலுகான விதைகள் 19-ம் நூற்றாண்டின் இந்தி-உருது விவாதத்தில் இருந்தது என்று பலர் வாதிடுகின்றனர். பாக்கிஸ்தான் தனது அதிகாரப்பூர்வ மொழியாக உருதுவைத் தேர்ந்தெடுத்ததும், இந்தியா இந்தியைத் தேர்ந்தெடுத்தது.

1947-க்குப் பின் இந்தி மொழி பற்றிய விவாதம்

இந்தியை சுதந்திர இந்தியாவின் அலுவல் மொழியாக மாற்றுவதற்கான தேர்வு, பல்வேறு மொழிகள், எழுத்துகள் மற்றும் பேச்சுவழக்குகளைக் கொண்ட நாட்டில் ஒருங்கிணைக்கும் சக்தியைக் கண்டறிய வேண்டியதன் அவசியத்தில் வேரூன்றி இருந்தது.

இந்தி வட இந்தியாவின் பெரும் பகுதிகளில் பேசப்படும் மொழியாக இருந்ததால், அது நாட்டின் தேசிய மொழிவழி ஒருங்கிணைப்புக்கு பாதுகாப்பான விருப்பமாக கருதப்பட்டது. இருப்பினும், இந்தி பேசாத நாட்டின் பெரும் பகுதியினர் இந்த யோசனையில் மகிழ்ச்சியடையவில்லை.

செப்டம்பர் 12, 14, 1949-க்கு இடையில், இந்திய அரசியல் நிர்ணய சபை இந்தியாவின் மொழிகளின் நிலை குறித்து விவாதித்தது. விவாதிக்கப்பட்ட பிரச்சினைகளில், அலுவலக மொழி என்பதற்குப் பதிலாக, தேசிய மொழி என்ற சொல்லைப் பயன்படுத்துவது; இந்தி vs பெங்காலி, தெலுங்கு, சமஸ்கிருதம் அல்லது ஹிந்துஸ்தானி போன்ற மொழிகள்; தேவநாகரி வரிவடிவம் vs ரோமன் வரிவடிவம்; உயர் நீதித்துறை மற்றும் நாடாளுமன்றத்தில் பயன்படுத்தப்படும் மொழி; சர்வதேச எண்கள் vs தேவநாகரி வரிவடிவத்தில் உள்ளவை என்று எதிர்நிலைகள் நிலவியது.

மத்திய மாகாணங்கள் மற்றும் பேரார் மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய இந்தி எழுத்தாளர் சேத் கோவிந்த் தாஸ், ஒரே மொழி மற்றும் ஒரே வரிவடிவம் என்று வாதிட்டார். மேலும், இந்தி மொழியை ஆங்கிலத்துக்கு பதிலாக விரைவில் மாற்ற வேண்டும் என்று பரிந்துரைத்தார்.

மறுபுறம் மேற்கு வங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நஜிருதீன் அகமது வாதிடுகையில், “அனைத்து இந்திய மொழியும் அறிவியல், கணிதம், இலக்கியம், சரித்திரம், தத்துவம், அரசியல் போன்ற பல்வேறு விஷயங்களில் கருத்துக்களை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக உருவாகும் வரை ஆங்கிலம் பயன்படுத்தப்படும். ஆங்கிலம், அனைத்து நோக்கங்களுக்காகவும் அதிகாரப்பூர்வ மொழியாக தொடர வேண்டும்.” என்று கூறினார்.

கோயம்புத்தூரை பிரதிநிதித்துவப்படுதிய டி.ஏ. ராமலிங்கம் செட்டியார் நாடாளுமன்றத்தில், மொழிப் பிரச்சினை தென்நாட்டிற்கு வாழ்வா சாவா பிரச்னை என்று குறிப்பிட்டார். தென்னிந்திய மாநிலங்களுக்கு ஆங்கிலம் போலவே இந்தியும் அந்நிய மொழி என்பதை அவர் சுட்டிக்காட்டினார். “தெற்கில் உள்ள மக்களுக்கும் இந்த நாட்டிற்கும் ஏதாவது தொடர்பு இருப்பதாக உணரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், …தெற்கு திருப்தி அடையும் என்று நான் நினைக்கவில்லை. …அது எதற்கு இட்டுச் செல்லும் என்று தற்போது கூறுவது எளிதல்ல” என்று அவர் கூறினார்.

அப்போது பிரதமர் ஜவஹர்லால் நேரு, ஆங்கிலம் தேசத்திற்கு நிறைய நன்மை செய்திருந்தாலும், எந்த நாடும் அந்நிய மொழியின் அடிப்படையில் வெற்றிபெற முடியாது என்று சுட்டிக்காட்டினார். இந்துஸ்தானிக்கு காந்தியின் ஆதரவை அவர் நினைவு கூர்ந்தார். அது இந்தியாவின் ஒருங்கிணைந்த கலாச்சாரத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாக அவர் நம்பினார். இருப்பினும், இந்தியாவின் பெரும் பகுதியினரின் விருப்பத்திற்கு எதிராக இந்தி திணிக்கப்படுவதற்கு எதிராகவும் அவர் எச்சரித்தார். இது, தவறான அணுகுமுறை மட்டுமல்ல… ஆபத்தான அணுகுமுறையும் எந்த மொழியையும் எதிர்க்கும் மக்களையோ அல்லது குழுவையோ நீங்கள் கட்டாயப்படுத்த முடியாது என்று நேரு கூறினார்.

இறுதியாக ஒரு சமரசம் எட்டப்பட்டது. அதில் இந்தியுடன் ஆங்கிலமும் 15 ஆண்டுகளுக்கு இந்தியாவின் அலுவல் மொழியாக மாற்றப்பட்டது. 15 ஆண்டுகள் முடிவில், அதிகாரப்பூர்வ நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் ஒரே மொழியாக ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தி மொழி இருக்கும்.

இந்தி அரசியலமைப்பின் 351-வது பிரிவு, இந்தி மொழியை அனைத்து விஷயங்களிலும் வெளிப்படுத்தும் வழிமுறையாக செயல்படும் வகையில் அதை மேம்படுத்தவும் பரவலாக்கவும் கேட்டுக் கொண்டது.

இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் முதல் இந்தி தினம் வரை

அந்த 15 ஆண்டு காலம் முடிவடைந்தபோது, இந்தி பேசாத இந்தியாவின் பெரும்பகுதிகளில், குறிப்பாக தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு அச்சத்தில் போராட்டங்கள் வெடித்தன. 1965 ஜனவரியில் மதுரையில் தொடங்கிய கலவரம், விரைவில் சென்னைக்கும் பரவியது. போராட்டத்தின் விளைவாக, அலுவல் மொழிச் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியது. அதில், இந்தியுடன் ஆங்கிலம் தொடர்ந்து அதிகாரப்பூர்வ மொழியாக நிலைநிறுத்தப்படும் என்று கூறியது.

அடுத்தடுத்த ஆண்டுகளில், இந்தி மொழியை இந்தியாவின் ஒருங்கிணைக்கும் மொழியாகப் பிரச்சாரம் செய்ய அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டது, அவற்றில் இந்தி திவஸ் என்கிற இந்தி மொழி தினம் கொண்டாட்டமும் ஒன்று.

இந்தி மொழி பேசுபவர்களின் என்ணிக்கை

2011 மொழிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்திய அரசியலமைப்பின் 8வது அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள 22 மொழிகள் உட்பட 121 தாய்மொழிகள் உள்ளன.

52.8 கோடி தனிநபர்கள் அல்லது 43.6% மக்கள் இந்தி மொழியைத் தங்கள் தாய் மொழி என்று தெரிவித்துள்ளனர். இதற்கு அடுத்து, அதிகபட்சமாக பெங்காலியை தாய்மொழியாக 9.7 கோடி (8%) மக்கள் தெரிவித்துள்ளனர். இது இந்தி பேசுபவர்களின் எண்ணிக்கையில் ஐந்தில் ஒரு பங்கிற்கும் குறைவு.

இந்தி தெரிந்தவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, இந்த எண்ணிக்கை நாட்டின் பாதிக்கு மேல் உள்ளது. ஏறக்குறைய 13.9 கோடி (11% க்கும் அதிகமானோர்) ஹிந்தியை இரண்டாவது மொழியாக அறிவித்துள்ளனர். இது நாட்டின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 55% இந்தி தாய்மொழி அல்லது இரண்டாவது மொழியாக உள்ளது.

இந்தி பல தசாப்தங்களாக இந்தியாவின் பெரும் அளவு மக்களின் தாய்மொழியாக இருந்து வருகிறது. ஒவ்வொரு அடுத்தடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பிலும் மக்கள்தொகையில் அதன் பங்கு அதிகரித்து வருகிறது.

1971-ல், 37% இந்தியர்கள் இந்தி மொழியைத் தங்கள் தாய் மொழியாக அறிவித்தனர். இது அடுத்த நான்கு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் 38.7%, 39.2%, 41% மற்றும் 43.6% ஆக உயர்ந்துள்ளது.

1971 மற்றும் 2011 க்கு இடையில், தங்கள் தாய்மொழியை இந்தி மொழியாக அறிவித்த தனிநபர்களின் எண்ணிக்கை 2.6 மடங்கு அதிகரித்து 20.2 கோடியிலிருந்து 52.8 கோடியாக உயர்ந்துள்ளது. பஞ்சாபி, மைதிலி, பெங்காலி, குஜராத்தி மற்றும் கன்னடம் ஆகியவற்றில் இந்த எண்ணிக்கை இருமடங்காகவும், மராத்தியில் கிட்டத்தட்ட இரு மடங்காகவும் அதிகரித்தது.

இந்தியாவில் ஆங்கிலத்தின் அந்தஸ்து

இந்தி மொழியுடன் ஆங்கிலம் மத்திய அரசின் இரண்டு அதிகாரப்பூர்வ அலுவல் மொழிகளில் ஒன்று. ஆனால், அது 8வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளில் இல்லை. இது 99 திட்டமிடப்படாத மொழிகளில் ஒன்று. தாய்மொழியைப் பொறுத்தவரை, 2011-ல் இந்தியாவில் ஆங்கிலம் பேசுபவர்களின் எண்ணிக்கை 2.6 லட்சம் மட்டுமே என்று தெரியவந்துள்ளது.

2011- மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இரண்டாவது மொழியாக இந்தி மொழி பேசுபவர்கள் 13.9 கோடி என்ற எண்ணிக்கைக்கு அடுத்தபடியாக ஆங்கிலத்தில் 8.3 கோடி பேர் பேசுகிறார்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

India Hindi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment