Advertisment

'சிலோன் டீ’ வரலாறும் சிறிமா-சாஸ்திரி உடன்படிக்கையின் 55 வருடங்களும்!

இன்றும் கூட தேவையை பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் பொருளாதாரத்தில் மேம்பட்டவர்களாக மலையகத் தமிழர்கள் இல்லை!

author-image
Nithya Pandian
புதுப்பிக்கப்பட்டது
New Update
History of Ceylon tea, Indian Tamils, Sirima - Shastri pact

History of Ceylon tea, Indian Tamils, Sirima - Shastri pact

History of Ceylon tea, Indian Tamils, Sirima - Shastri pact : 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தென்னிந்தியா முழுவதும் நில உடமை தொடர்பான சட்டங்களில்  மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது. ராயத்துவரி அமலாக்கப்பட்டது. இங்கிலாந்தின் வளர்ச்சிக்காகவும், ஐரோப்பிய சந்தைகளுக்காகவும் நம்முடைய நிலங்கள் அவர்களுக்கான மூலப்பொருட்களை உற்பத்தி செய்தது.  ஐரோப்பிய சந்தைகளில் பெரிதும் ஆதிக்கம் செலுத்த துவங்கிய பிரிட்டிஷ் தங்களின் காலனி நாடுகளில் அமைக்கப்பட்டிருக்கும் தோட்டங்களில் வேலைக்காக ஆட்களை சேர்க்கும் முடிவுக்கு வந்தது.

Advertisment

மேலும் படிக்க : பஞ்சமி நிலச் சட்டம் 1892 : நூற்றாண்டுகளாக தொடரும் நிலத்திற்கான உரிமை போராட்டம்

History of Ceylon tea, Indian Tamils, Sirima - Shastri pact ஆரம்ப காலங்களில் இலங்கை தேயிலைத் தோட்டங்களில் வேலை பார்க்கும் பெண்கள்

சந்தைகள் விரிவடையும் போது உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு நிறைய நிலங்களும், அதற்கேற்ற உழைப்பும் ஆங்கிலேயர்களுக்கு தேவைப்பட்டது. உணவுக்கு வழியில்லாத சூழலாலும், சொந்த நிலமற்ற கையறு நிலையிலும் லட்சக்கணக்கான மக்கள் திண்டாடிக் கொண்டிருந்தனர்.   மக்களின் சூழ்நிலையை ஆங்கிலேயர்கள் நன்றாக பயன்படுத்திக் கொண்டனர். “வெளிநாடுகளில் வேலை, மூன்று நேரமும் உணவுக்கு உத்திரவாதம், திரும்பி வரும் போது பெரும் பணக்காரனாக வரலாம்” என்று மூளைச்சலவை செய்வதற்காகவே ஆங்கிலேயர்கள் இடைத்தரகர்களை தேர்வு செய்து அனுப்பினர்.

இலங்கையின் தேயிலைக்காடுகள், பர்மா, மலேசியாவின் ரப்பர்த்தோட்டங்கள், கயானாவின் காஃபித் தோட்டங்கள் என தமிழர்கள் அடிமைகளாக வெளிநாடுகளுக்கு சென்றனர். 24 மணி நேரமும் அவர்களின் வாழ்க்கை மேற்பார்வையிடப்பட்டது. தப்பித்து செல்லும் சூழல் வெளிநாடுகளில் கற்பனைக்கு எட்டாத வகையில் இருந்தது. தென்னிந்திய பஞ்சத்திற்கு முன்பும் இலங்கையில் தமிழர்கள் ஏற்றுமதி, இறக்குமதி, காட்டுவேலைகள், மேம்பாட்டு  பணிகளுக்கு சென்றதால், அங்கு குடும்பங்களாக மீண்டும் செல்வதில் அவர்களுக்கு பிரச்சனை ஏதும் இருக்கவில்லை.

இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் பண்ணை அடிமைகளில் இருந்து பதவி உயர்வு பெற்று தோட்ட அடிமைகளாக பணி செய்யத் துவங்கினர். இன்றும் கூட அவர்களின் தேவையை பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் பொருளாதாரத்தில் மேம்பட்டவர்களாக அம்மக்கள் இல்லை என்று கூறுகிறார் கண்டியை சேர்ந்த புவனேஷ். இணையதளம் ஒன்றின் ஆசிரியராக செயல்பட்டு வருகிறார்.

ஈழத்தமிழர்கள் இந்திய தமிழர்கள்

ஈழத்தமிழர்கள் இலங்கையின் யாழ்பாணத்தை சேர்ந்த அந்நாட்டின் பூர்வ குடிகள். அவர்களுக்கும் மலையில் வாழும் மலையகத் தமிழர்களுக்கும் யாதொரு தொடர்பும் கிடையாது. மலையகத் தமிழர்கள் இன்றளவும் இந்திய வம்சாவளி தமிழர்கள் என்றே அடையாளம் காணப்படுகிறார்கள். "தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பலருக்கும் இந்த வித்தியாசங்கள் புரிவதில்லை. ஈழப்பிரச்சனைகள் கூட பெரும்பாலும் அரசியல் நோக்கத்துக்காகவும், வெறுப்பரசியலை ஊக்குவிக்கவும் தான் பயன்பட்டது. மக்களின் உணர்ச்சிகளை தூண்டிவிட மலையக மக்களின் பிரச்சனைகளைக் காட்டிலும் ஈழத்து பிரச்சனை வீரியமாக இருக்கும் என்று அவர்கள் யோசித்திருக்க கூடும்" என மட்டக்களப்பை சேர்ந்த ரக்‌ஷனா நம்மிடம் அறிவித்தார்.

இதற்கான தேடலை நீங்கள் தான் தொடர வேண்டும் என திரிகோணமலையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் முரளிதரன் அறிவிக்கிறார்.

இலங்கையும் காஃபி விவசாயமும்

ஆரம்பத்தில் இலங்கையின் கண்டி, அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் 1820 - 1880 காலங்களில்  காஃபி பயிரட்டப்பட்டது. காஃபிக்கு முழுக்காடுகளையும் அழிக்க வேண்டியதில்லை. அடியில் இருக்கும் புதர்களை மட்டும் அழித்து 1849 வரையான 29 ஆண்டுகளில் 65 ஆயிரம் ஏக்கரில் காஃபி பயிரடப்பட்டது. காஃபியின் தேவை அதிகரிக்க அதற்காக அழிக்கப்படும் எண்ணிக்கையும், அந்த பணியில் அமர்த்தப்படுவதற்காக தொழிலாளர்களின் எண்ணிக்கையும் அதிகம் தேவைப்பட்டது. 1868 ஆண்டின் முடிவில் இலங்கையில் சுமார் 2,75,000 ஏக்கர் அளவில் காஃபி பயிரிடப்பட்டது.

இலங்கையில் குடியேறிய தமிழர்கள்

தென்னிந்தியாவில் இருந்து இலங்கை சென்ற மக்களில் பலர் மன்னார் துறைமுகத்தில் இறங்கி கண்டி மலைக்காடுகள் வரை நடந்தே சென்றுள்ளனர். கண்டி, வத்தேகம, மடுல்கல, இரங்கல, கலகா, ஹேவாஎட்ட, கம்பொல, மாத்தளை, பேராதெனிய, பள்ளேகல ஆகிய இடங்களில் மக்கள் குடியேறினர். காஃபி பயிர்களின் உற்பத்தி அதிகரிக்க மக்கள் நாவலப்பிட்டி, கினிகஸ்த்தென்ன, கொத்மல, தலவாகெல, நுவரெலியா, அட்டன், ஊவா மாகாணங்களில் பின்னர் குடியேறினர். இந்த குடியேற்றங்கள் 1830 முதல் 1840 வரை நடைபெற்றது. தமிழகத்தில் இருந்து வந்த மக்கள் காடுகளை காஃபி தோட்டங்களாக மாற்றினார்கள். அதற்கு அவர்கள் கொடுத்த உழைப்பு மிகவும் அளப்பரியது. ஆனாலும் காஃபி பயிர்களில் நோய் தொற்றுகள் உருவாக காஃபி பயிரிடுதல் முடிவுக்கு வந்தது.

History of Ceylon tea, Indian Tamils, Sirima - Shastri pact Express photo : Nithya Pandian

சிலோன் டீ வரலாறு

இலங்கைக்கு முன்பே இந்தியாவின் அசாம் பகுதியில் தேயிலைகள் பயிரிடப்பட்டு, வெற்றிகரமாக வளர்க்கப்பட்டது. காஃபியின் சாம்ராஜ்ஜியம் முடிவடைய தேயிலை அந்த இடத்தை பிடித்துக் கொண்டது. அடிக்காட்டினை அழிப்பது மட்டும் தற்போது வேலையில்லை. மொத்த காட்டினையும் அழித்து, தேயிலை பயிருக்கான நிலம் உருவாக்கப்பட்டது. தேயிலைத் தோட்டங்களில் மக்கள் வாழ லேன்களை அமைப்பது, பறிக்கப்பட்ட தேயிலையை தொழிற்சாலைக்கு எடுத்துச் செல்ல சாலைகளை அமைப்பது,  தேயிலையை தூளாக மாற்ற கருவிகளை இயக்குவது, உற்பத்தி செய்யப்பட்ட தேயிலைத்தூளை சந்தைப்படுத்துவது, துறைமுகங்களுக்கு அனுப்பவது என அனைத்தையும் மக்கள் செய்தனர்.

History of Ceylon tea, Indian Tamils, Sirima - Shastri pact கோத்தகிரி குயின் சோலா தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட தேயிலை... Express Photo by Nithya Pandian

1860-ம் ஆண்டு கண்டியின் நூல் கந்துலாவின் லிப்டன் தேயிலைக்காட்டில் ஜேம்ஸ் டெய்லர்  என்பவரால் இலங்கையின் புகழ்பெற்ற 'சிலோன் டீ’ முதன்முறையாக உற்பத்தி செய்யப்பட்டது.  இலங்கையில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட தேயிலைக்கு உலக அளவில் நல்ல வரவேற்பு இருந்தது. சிலோன் டீ என்ற பெயர் நிலைத்துவிட்டது. இலங்கை பொருளாதாரத்தில் பெரும் மாற்றத்தை சிலோன் டீ உருவாக்கியது என்றால் அது மிகையாகாது. 1914ம் ஆண்டில் இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலையின் மதிப்பு ரூ. 90 மில்லியன் ஆகும். அடுத்த ஆண்டில் ரூ. 122 மில்லியன் என்ற அபரீதமான இலக்கை  அவர்களின் பொருளாதாரம் எட்டியது.  இலங்கையின் மக்கள் தொகையில் இவர்கள் வெறும் 5%-த்தினர் மட்டுமே. ஆனால் இவர்களால் இலங்கை பொருளாதாரத்தில் 100 கோடி டாலர்கள் வருமானத்தை பெற்றுத்தரும் முக்கிய அங்கமாக செயல்படுகிறார்கள். 

மக்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வெளியேற்றப்படுவார்கள் என்ற நிலை  இன்று இல்லை. அவர்கள் அனைவரும் குடியுரிமை பெற்றவர்கள்.  ஆனாலும் அவர்களுக்கு சொந்தமாக நிலமோ வீடுகளோ கிடையாது. தோட்ட நிர்வாகத்தின் கீழ் தான் அனைத்தும் வருகிறது. தோட்டம் கைமாற்றப்படும்போதோ அல்லது விற்கப்படும்போதோ அம்மக்களது நிலங்கள் பறிமுதல் செய்யப்படக்கூடிய வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே நாவலப்பிட்டியில் தோட்டமொன்றில் இந்த நிலை ஏற்பட்டுள்ளது” என்று முரளிதரன் கூறினார். “அவர்களுக்கான சம்பளம் போதுமானதாக இல்லை” இல்லை என்கிறார் புவனேஷ்.

இலங்கை குடியுரிமைச் சட்டமும் அதன் பின்னணியும்

1948 நவம்பர் 15ம் தேதி இலங்கைக் குடியுரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.  மலையகத் தமிழர்களை இந்தியாவுக்கே திருப்பி அனுப்ப வேண்டுமென்பது முக்கிய அம்சமாகும்.  1948 ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் தேதிக்கு முன் இலங்கையில் பிறந்திருப்பதுடன் அவருக்கு முந்தைய இரண்டு தலைமுறையினரும் இலங்கையில் பிறந்திருந்தால் மட்டுமே அவரால் இலங்கை குடியுரிமை பெற இயலும்.

அதற்கான காரணங்களாக பார்க்கப்பட்டது தமிழர்களின்  எண்ணிக்கை. அவர்கள் தேர்வு செய்யும் பாராளுமன்ற உறுப்பினர்கள். அவர்களின் வாக்கு வங்கிகள், பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை மாற்றி அமைக்கும் சக்தியாக இருந்தது. வேறொரு நாட்டைச் சேர்ந்தவர்கள் இது போன்ற அதிகாரத்தை மாற்றும் காரணியாக இருப்பதை சிங்கள அரசு விரும்பவில்லை. இந்திய வம்சாவளித் தமிழர்களை மீண்டும் தாயகம் அனுப்ப இந்தியாவுடன் 1951, 1953, 1954 ஆண்டுகளில் பேச்சுவார்த்தை நடத்தியது ஆனாலும் முடிவு எட்டப்படவில்லை. புதிதாக லால் பகதூர் சாஸ்திரி இந்தியாவிலும், சிறிமாவோ பண்டாரநாயக்கே இலங்கையிலும் ஆட்சி அமைத்த போது அக்டோபர் 30, 1964ம் ஆண்டு ஒரு ஒப்பந்தம் செய்து  கொண்டனர். அந்த ஒப்பந்தத்தின் படி மலையகத்தில் வசித்த 10 லட்சம் தமிழர்களை நாடற்றவர்கள் என்று அறிவித்தது இலங்கை அரசு. அந்நாட்டில் அவர்கள் குடியுரிமை அற்றவர்களாகவும் வாக்குரிமை அற்றவர்களாகும் நடத்தப்பட்டனர். அவர்களுக்கான அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டன.

History of Ceylon tea, Indian Tamils, Sirima - Shastri pact Express Photo by Nithya Pandian

ஒப்பந்தத்தின் படி 5 லட்சத்தி 25 ஆயிரம் இந்திய வம்சாவளித் தமிழர்களை இந்தியாவும், 3 லட்சம் தமிழர்களை இலங்கை அரசும் ஏற்றுக் கொள்ள வேண்டும். மீதம் இருக்கும் 1.5 லட்சம் நபர்கள் குறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை. நான்கு தமிழர்கள் தாயகம் திரும்பினால் ஒரு தமிழருக்கு இலங்கை குடியுரிமை வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது.  இந்த ஒப்பந்தம் கையெழுத்தான 20 ஆண்டுகளில் 4,45,519 நபர்கள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். மீதம் இருப்பவர்களுக்கு குடியுரிமை வழங்குவதில் மிகவும் காலம்  தாழ்த்தியது இலங்கை அரசு. 1984ம் ஆண்டு உள்நாட்டுப் போர் மிகவும் தீவிரமடைய ராமேஸ்வரம் - தலைமன்னார் பகுதியில் கப்பல் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. ஒப்பந்தத்தின் படி வெளியேற வேண்டிய தமிழர்கள் பலரும் நாடற்றவர்களாக இலங்கையில் வாழ்ந்து வந்தனர். பின்னர் குடியுரிமை சட்டத்தில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டது. தனித்தமிழ் ஈழம் அமைப்பதற்கான போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த போது மலையக தமிழர்களும் அந்த போராட்டத்தில் இணைந்து விடுவதை தடுக்க அவர்களின் வாழ்வாதாரத்திற்கு முக்கியத்துவம் அளித்து அனைவருக்கும் குடியுரிமை வழங்க முடிவு செய்தது இலங்கை அரசு.  1988ம் ஆண்டு நாடற்றோர் என்ற பதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. 

ஆனால் சில காலக்கட்டத்தில் மலையக தமிழர்களுக்கு ஈழத்தமிழர்களால் பிரச்சனை ஏற்பட்டது என்பதை நினைவுபடுத்துகிறார் புவனேஷ்.

தமிழகத்திற்கு திரும்பி வந்தவர்கள்

1966ம் ஆண்டு முதல் 1984 ஆண்டுகள்  வரை 4,45,519 நபர்கள் தாயகம் திரும்பினார்கள். தேயிலைத் தோட்டங்களில் 2445 குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டன. ரப்பர் தோட்டங்களில் 225 குடும்பங்களும், சிங்கோனா வளர்ப்பிற்காக 125 குடும்பங்களும் தங்க வைக்கப்பட்டதாக அரசு அறிவிக்கிறது.

பெரம்பலூரின் துரைமங்கலம், வெங்கலம், கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதியில் இருந்து தங்க வைக்கப்பட்டனர். திருச்சியின் துவாக்குடி தென்மலை, திருச்சி நகரம், கரூரின் வெள்ளாளப்பட்டி, பெரியார் நகர், மணப்பாறையின் வேம்பனூர் காலனி, துறையூரின் சிறு நத்தம், முசிறி, ஜெயங்குண்டம், நாமக்கல் போன்ற பகுதியில் குடியேறினர். ஏற்காட்டின் கிளிப்டன் தோட்டம், ஆதியார் தோட்டம், சோமசுந்தரம் தோட்டம், கிரே தோட்டம் , நீலகிரி கூடலூரில் நெல்லியாளம் டீ எஸ்டேட், சேரங்கோடு தேயிலைத் தோட்டம், சின்கோனா சேரங்கோடு, பந்தலூர், தேவாலா, நந்தட்டி, உதகையின் பார்சன் வேலி, சுனோ டவுன், தலையட்டு மந்து மற்றும் கோத்தகிரியின் பல்வேறு டீ எஸ்டேட்களில் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர்.

இன்றைய மலையக தமிழர்கள் நிலை

அரசியலில் மலையகத் தமிழர்களின் பங்கீடு குறித்து முரளிதரனிடம் கேள்வி எழுப்பிய போது  “நாட்டின் ஏனைய பகுதிகளின் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைவிட மேலதிகமாக  பல பிரச்சினைகளை இம்மக்கள் எதிர்கொள்கிறார்கள்.  முழுநாட்டுக்குமாக உருவாக்கப்படும் திட்டங்கள், நிர்வாகக்கட்டமைப்புக்கள், கொள்கைகளுள் இவர்கள் உள்வாங்கப்படாத காரணத்தால் இவர்கள் இது போன்ற பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.  தேசிய தொழிலாளர் கொள்கைக்குள்/ சட்டங்களுக்குள் மலையகத் தோட்டத்தொழிலாளர் உள்வாங்கப்படுவதில்லை. இதேபோன்று கல்விக்கொள்கை, காணிக்கொள்கை, சுகாதார/மருத்துவத்துறையிலும் நிகழ்கிறது. இவை அனைத்தும் தோட்ட நிர்வாகத்தின் கீழ் வருகிறது. மருத்தவர் நியமனம் கூட இவ்வாறு தான். இதனால் மாகாணசபை, உள்ளூராட்சி சபை போன்ற நிர்வாகக் கட்டமைப்புக்களால் தோட்டப்புறத்தில் வாழும் மக்களுக்கு எதுவும் நேரடியாக செய்ய முடிவதில்லை. ஒரே நாட்டுக்குள் தோட்ட நிவாகத்தின் கீழான தனியான மக்களாக இவர்கள் வாழவைக்கப்பட்டிருக்கிறார்கள்” என்று அம்மக்களின் நிலை குறித்து விவரித்தார்.

வேறு நாடுகளில் வாழும் தமிழர்கள் இந்தியா திருப்பி அனுப்பப்பட்ட போது அவர்கள் சந்தித்த பிரச்சனைகளை விவரிக்க இயலாது. நம்பி வந்த நாடு திரும்பப் போக  கட்டளையிடும் போது நிலைமை மோசமாவதோடு எதிர்காலமும் கேள்விக்குறியாக்கப்படுகிறது. தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம்பெறாத 19 லட்சம் மக்களின் நிலை என்ன ஆகும் என்பதை எதிர்காலம் தான் நமக்கு காட்டும்.

Sri Lanka Nilgiris
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment