அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் கட்டுமானப் பணிகள் தொடங்கும் போது, தென் மாநிலங்களான கர்நாடகாவும் ஆந்திராவும் ஹனுமனின் பிறந்த இடம் தொடர்பாக மோதலில் ஈடுபட்டுள்ளன. வடக்கு கர்நாடகாவின் ஹம்பிக்கு அருகிலுள்ள கிஷ்கிந்தாவில் உள்ள அஞ்சயநாத்ரி மலையில் ஹனுமன் பிறந்தார் என்று கர்நாடகா கூறுகையில், ஆந்திரா திருமலையின் ஏழு மலைகளில் உள்ள அஞ்சநாத்ரியை ஹனுமன் பிறந்த இடமாகக் கூறுகிறது. இப்போது, ராமாயணத்தில் உள்ள குறிப்புகளின் அடிப்படையில் மூன்றாவதாக ஒரு இடமும் பிறப்பிடமாக காட்டப்பட்டுள்ளது.
ஹனுமன் பிறந்த இடத்துக்கு முதலில் உரிமை கோரியது யார்?
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், ஆந்திராவின் திருமலை வெங்கடேஸ்வரர் கோயில் உள்ளிட்ட கோயில்களை நிர்வகிக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் (டி.டி.டி), வேத அறிஞர்கள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஒரு இஸ்ரோ விஞ்ஞானி ஆகியோரைக் கொண்ட ஒரு நிபுணர் குழுவை அமைத்து, ஏப்ரல் 21ம் தேதிக்குள் ஹனுமனின் உண்மையான பிறப்பிடம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிர்வாக அதிகாரி கே.எஸ்.ஜவஹர் கூறுகையில், அவர்களுடைய உரிமை கோரலை நிரூபிக்க புராணம் தொன்மங்கள், ஜோதிடம் மற்றும் அறிவியல் சான்றுகள் உள்ளது என்று கூறினார். இதனால்தான், தங்களுடைய நிர்வாக அமைப்பு, தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் முரளிதர் சர்மா, எஸ்.வி.வேத பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சன்னிதானம் சர்மா, இஸ்ரோ விஞ்ஞானி ரெமெல்லா மூர்த்தி, மாநில தொல்பொருள் துணை இயக்குநர் விஜய்குமார், பேராசிரியர்கள் ராணி சதாசிவ மூர்த்தி, ஜே.ராமகிருஷ்ணா, சங்கர நாராயணா போன்ற நிபுணர்கள் அடங்கிய 8 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவை அமைத்துள்ளது. இந்த குழுவுக்கு டி.டி.டி எஸ்.வி உயர் வேத ஆய்வுகள் திட்ட இயக்குநர் அகெல்லா விபீஷண சர்மா ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த குழு, ஹனுமனின் பிறந்த இடம் குறித்த அனைத்து ஆதாரங்களையும் அது தொடர்புடைய தகவல்களையும் ஒரு புத்தக வடிவில் கொண்டு வந்து அதை டி.டி.டி.க்கு சமர்ப்பிக்கும் என்று ரெட்டி கூறுகிறார். சிவ புராணம், பிரம்ம புராணம், பிரம்மந்தா புராணம், வராஹ புராணம், மத்ஸ்ய புராணம், வெங்கடாச்சால மகாத்யம் மற்றும் வராஹமிஹிரரின் பிரஹதசமிதா ஆகியவற்றோடு வேதப்பூர்வ சான்றுகள் மூலம் இந்த குழு ஆய்வு செய்ய உள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கருத்தில் அதிருப்தி அடைந்த கர்நாடகா அமைச்சர்கள் ஹம்பிக்கு அருகிலுள்ள அஞ்சயநாத்ரி மலைபற்றி ராமாயணத்தில் ஒரு குறிப்பு இருப்பதாகக் கூறினர். அங்கே ராமரும் லக்ஷ்மணனும் ஹனுமனை சந்தித்த இடம் என்று கூறப்படுகிறது. இந்த மலையில் ஹனுமன் கோயில் உள்ளது. மலை உச்சியில் கல்லில் செதுக்கப்பட்ட சிலையும், அருகில் ராமர், சீதா மற்றும் அஞ்சனா தேவி கோயில்களும் உள்ளன.
ஹனுமனின் பிறப்பிடம் கர்நாடகாவில் இருப்பதாக கர்நாடக வேளாண் அமைச்சரும், கொப்பல் மாவட்ட அமைச்சருமான பி.சி.பாட்டீல் கூறுகிறார். “இப்போது ஹனுமன் ஜென்மஸ்தலம் (கன்னடத்தில் பிறந்த இடம்) என்ற குறிச்சொல்லுடன் இந்த இடத்தை ஒரு புனித யாத்திரை மையமாக உருவாக்குவோம்” என்று அவர் கூறினார்.
உண்மையில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஒரு குழு அமைத்த உடனேயே, கர்நாடக சுற்றுலாத் துறை அஞ்சயநாத்ரி மலையை ஒரு மத சுற்றுலா மையமாக மாற்றும் திட்டத்தைத் தொடங்கியது. கடந்த மாதம், சுற்றுலாத்துறை அமைச்சர் சி.பி.யோகேஸ்வர் அமைச்சர்கள் கே.எஸ்.ஈஸ்வரப்பா, பி.சி.பாட்டீல், கோட்டா சீனிவாஸ் பூஜாரி மற்றும் அரவிந்த் லிம்பவல்லி ஆகியோரை சந்தித்து ரூ.50.18 கோடி வளர்ச்சி திட்டம் குறித்து விவாதித்தார். அடிக்கல் நாட்டுவதற்கு முன் விரிவான திட்ட அறிக்கைக்கு (டிபிஆர்) அமைச்சரவை ஒப்புதலுக்காக துறை காத்திருக்கிறது என்று யோகேஸ்வர் கூறினார். அவரும் பிற அமைச்சர்களும் ஏப்ரல் 16ம் தேதி அந்த இடத்திற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மூன்றாவதாக போட்டியிடும் இடம் எது?
ஹனுமனின் பிறந்த இடத்தைக் குறிக்க மற்றொரு போட்டி இடம் இருக்கிறது. கர்நாடகாவின் சிவமோகா மாவட்டத்தில் உள்ள ராமச்சந்திரபுரா மடத்தின் தலைவரான ராகவேஸ்வர பாரதி, கர்நாடகாவின் கோகர்ணாவின் கட்லே கடற்கரையில் ஹனுமனின் உண்மையான பிறந்த இடம் இருப்பதாகக் கூறுகிறார். வால்மீகி ராமாயணத்தில் ஹனுமன் தான் கோகார்னாவில் பிறந்ததாக சீதையிடம் அவரே கூறுகிறார் என்று ராகவேஸ்வர பாரதி கூறுகிறார். “ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு, கோகர்ணா ஹனுமனின் ஜன்மபூமி என்றும், கிஷ்கிந்தாவில் அஞ்சயநாத்ரி அவரது கர்மபூமி என்றும் சொல்லலாம். வால்மீகி ராமாயணத்தில், ஹனுமனின் பிறந்த இடம் கோகர்ணாவில் உள்ளது என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.” என்று ராகஸ்வேஸ்வர பாரதி கூறினார். மேலும், கோகர்ணாவில் உள்ள கோயிலை மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அந்த இடத்தில் அடுத்த ஆண்டு ராம நவமியில் ஒரு மிகப் பெரிய ஹனுமன் சிலையை நிறுவன் திட்டமிட்டுள்ளதாக ராகவேஸ்வர பாரதி கூறுகிறார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.