கொரோனா பேரிடரால் நெருக்கடிக்குள்ளான குடும்ப நிதி சேமிப்பு மற்றும் வைப்புத்தொகை!

கொரோனாவிற்கு பிறகு பாலிசி தேவை அதிகரித்துள்ளதால் காப்பீட்டுத்துறை குறிப்பிடத்தக்க மாற்றத்தை அடைந்துள்ளது.

economic growth

கடந்த வாரம், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) குடும்ப நிதி சேமிப்பு குறித்த மதிப்பீட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. கொரோனாவால் நாட்டில் உள்ள லட்சக்கணக்கான குடும்பங்களின் வங்கி சேமிப்பு, ஓய்வூதிய பணம், ஆயுள் காப்பீட்டு நிதி போன்ற சொத்துக்கள் குறைந்துள்ளது. பொருளாதாரத்தின் மொத்த சேமிப்பில் 60% பங்களிக்கும் சுமார் 20 கோடி குடும்பங்களின் கடன் அதிகரித்துள்ளதாகவும், நிதி சேமிப்பு 2020 ஜூன் முதல் டிசம்பர் வரை 45% சரிவை கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப நிதி சேமிப்பு என்பது மக்கள் தமது சேமிப்புக் கணக்குகள், காப்பீடு பத்திரங்கள், மியூச்சுவல் ஃபண்ட்கள் போன்றவற்றில் மொத்தமாக சேமிக்கும் தொகையைக் குறிப்பதாகும். இந்த வீட்டு நிதி சேமிப்பு ஆனது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) கணிசமான பங்கைக் கொண்டது.

நிதி சேமிப்பு

தொற்றுநோய் முதன்முதலில் தாக்கியபோது, ​​வீட்டு நிதி சேமிப்பு 2020-21 முதல் காலாண்டில் உயர்ந்தது, ஆனால் அடுத்த இரண்டு காலாண்டுகளில் தொடர்ச்சியான சீரற்ற நிலையை கண்டது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் நாட்டின் ஜி.டி.பி-யில் 21 சதவிகிதமாக இருந்த வீட்டு நிதி சேமிப்பு, செப்டம்பர் காலாண்டில் 10.4 சதவிகிதமாகக் குறைந்தது. அது டிசம்பர் காலாண்டில் 8.2 சதவிகிதமாகக் குறைந்துள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் காலாண்டில் ரூ.8,15,886 கோடியாக இருந்த வீட்டு நிதி சேமிப்பு செப்டம்பர் காலாண்டில் ரூ.4,91,906 கோடியாகவும், டிசம்பர் காலாண்டில் ரூ. 4,44,583 கோடியாகவும் குறைந்துள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது

வீட்டு வைப்பு

ஒட்டுமொத்த வங்கி வைப்புத்தொகை அதிகரித்து வரும் நிலையில், அதில் குடும்பங்களின் பங்கு குறைந்து வருகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குடும்ப (வங்கிகளில்) வைப்பு விகிதம் 2020-21 டிசம்பர் காலாண்டில் 3.0% ஆக குறைந்துள்ளது. இது முந்தைய காலாண்டில் 7.7%ஆக இருந்தது என ஆர்பிஐ தெரிவித்துள்ளது. மொத்த எண்ணிக்கையில், வீட்டு வைப்பு செப்டம்பர் மாதத்தில் ரூ 3,67,264 கோடியிலிருந்து டிசம்பரில் 1,73,042 கோடியாக குறைந்தது. வங்கி ஆய்வாளர்கள் கூறுகையில், குடும்பங்கள் தங்களது அவசர தேவைகளை பூர்த்தி செய்வதற்காக வங்கியில் இருந்து பணத்தை திரும்ப பெறுவது வைப்பு தொகை குறைவுக்கு காரணமாக இருக்கலாம் என கூறுகின்றனர். ஜனவரி-மார்ச் மாதங்களில் ரூ.4,55,464 ஆக இருந்த டெபாசிட்டுகள் ஏப்ரல்-ஜூன் 2020ல் ரூ.1,25,848 கோடியாக குறைந்துள்ளது. கொரோனா அதிகரிக்கும்போது குடும்பங்களின் வைப்பு குறைகிறது. இந்த நிலைமை சரியாகும்போது ஓரளவு அதிகரித்தாலும், மீண்டும் தொற்று அதிகரிக்கும்போது வைப்பு குறைகிறது.

பணம் இருப்பு

கொரோனா தொற்று அதிகரிக்கும்போது குடும்பங்களின் பணம் இருப்பு ஏற்ற இறக்கங்களை காண்கிறது. 2020 ஜூன் காலாண்டில் ரொக்க இருப்பு அதிகபட்சமாக ரூ.2,06,889 கோடியாக இருந்தது. இது செப்டம்பரில் ரூ .17,225 கோடியாகக் குறைந்து, டிசம்பர் மாதத்தில் நோய்த்தொற்று குறைந்தபோது ஓரளவிற்கு மீண்டு ரூ .91,456 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அரசு கடுமையான ஊரடங்கை அறிவித்த பின்னர் மார்ச் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் பொதுமக்களிடையே பணம் இருப்பு ரூ. 3.07 லட்சம் கோடியாக அதிகரித்தது. அதாவது 2020 ஜூன் 19 ஆம் தேதியுடன் முடிவடைந்த பதினைந்து நாட்களில் 22.55 லட்சம் கோடி ரூபாயிலிருந்து 25.62 லட்சம் கோடி ரூபாய் வரை அதிகரித்தது. இப்போது, ​​ரிசர்வ் வங்கியின் சமீபத்திய புள்ளி விவரங்களின்படி, பொதுமக்களிடம் பணம் இருப்பு அதிகபட்சமாக ரூ. 28.78 லட்சம் கோடியாக உள்ளது. பிப்ரவரி 2021க்கு பிறகு பொதுமக்களிடம் பண இருப்பு உயர்ந்து வருகிறது. பணம் இருப்பு அதிகரிப்பது மக்கள் இன்னும் கடுமையான ஊரடங்கு நடவடிக்கைகளை எதிர்பார்த்த பணத்தை சேமிக்க தொடங்கியுள்ளதை காட்டுவதாக வங்கியாளர்கள் கூறுகின்றனர்.

ஆயுள் காப்பீட்டு நிதி

கொரோனாவிற்கு பிறகு பாலிசி தேவை அதிகரித்துள்ளதால் காப்பீட்டுத்துறை குறிப்பிடத்தக்க மாற்றத்தை அடைந்துள்ளது. ஆயுள் காப்பீட்டாளர்களின் புதிய வணிக பிரீமியம் வருமானம் 2020 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 27.9% குறைந்துள்ளது. இருப்பினும், 2020-21 முழு நிதியாண்டில், பிரீமியம் வருமானம் மீண்டு 7.49% உயர்ந்துள்ளது. வீடுகளின் ஆயுள் காப்பீட்டு நிதி மார்ச் நிதியாண்டின் காலாண்டில் ரூ .33,549 கோடியாக சரிந்தது. இருப்பினும், கொரோனா தொற்று மற்றும் இறப்புகள் அதிகரித்ததால், ஜூன் காலாண்டில் 1,23,324 கோடி ரூபாயாகவும், செப்டம்பர் காலாண்டில் 1,42,422 கோடி ரூபாயாகவும், டிசம்பர் 2012 காலாண்டில் 1,56,320 கோடி ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. காப்பீட்டுத் தொழில் கடந்த நிதியாண்டில் 9% வளர்ச்சி அடைந்தது. நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-மே காலகட்டத்தில் இது 17% வளர்ந்துள்ளது.

ஈக்விட்டி ஹோல்டிங்ஸ்

ஏப்ரல் 2020 தொடக்கத்தில் சென்செக்ஸ் 28,265 ஆக இருந்த நிலையில் இப்போது 52,000 க்கு மேல் உயர்ந்துள்ளதால் பங்குச் சந்தைகள் படிப்படியாக முன்னேறியுள்ளன. மார்ச் மாத சரிவு மற்றும் ஏப்ரல் 2020 தொடக்கத்தில், சந்தைகள் மீண்டன, ஆனால் ஈக்விட்டி மீதான வீடுகளின் முதலீடு குறைந்தது. ஈக்விட்டி ஹோல்டிங்ஸ் ஜூன் காலாண்டில் ரூ .18,599 கோடியாக உயர்ந்தது, ஆனால் செப்டம்பரில் ரூ.8,291 கோடியாகவும், டிசம்பரில் ரூ.5,307 கோடியாகவும் குறைந்தது. எஸ்பிஐ அறிக்கையின்படி, மொத்த வீட்டு நிதி சேமிப்பிலிருந்து பங்குகள் மற்றும் கடன் படத்திரங்களில், சேமிப்பின் பங்கு 2020 நிதியாண்டில் 3.4% ஆக இருந்தது, இது 2021 நிதியாண்டில் 4.8-5% ஆக அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது.குடும்பங்களின் பரஸ்பர நிதி இருப்பு மார்ச் 2020 காலாண்டில் ரூ .51,926 கோடியாக சுருங்கியது, ஆனால் பின்னர் மேம்பட்டது, இது 2020 ஜூன் மாதத்தில் ரூ .66,195 கோடி, செப்டம்பரில் ரூ .11,909 கோடி மற்றும் டிசம்பரில் ரூ .65,312 கோடி வளர்ச்சியைக் காட்டுகிறது.

(=) சிறு சேமிப்பு

2021 நிதியாண்டின் முன்று காலாண்டுகளில் தபால் அலுவலகம் மற்றும் தேசிய சேமிப்பு சான்றிதழ் போன்ற சிறு சேமிப்பு திட்டங்களில் குடும்ப சேமிப்பு மாறாமல் ரூ .75,879 கோடியாக உள்ளது. இத்திட்டங்களில் பெரும்பாலானவை குறிப்பிட்ட காலத்திற்கு பின்னரே எடுக்க முடியும் என்பதால் முதலீட்டாளர்கள் பணத்தை எடுக்கவில்லை.

வீட்டுக் கடன்

மொத்த உள்நாட்டு உற்பத்தியின் விகிதத்திற்கான வீட்டுக் கடன் 2019 மார்ச் மாத இறுதியில் இருந்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. 2020 டிசம்பர் இறுதியில் இது 37.9 சதவீதமாக அதிகரித்து 2020 செப்டம்பர் இறுதியில் 37.1 சதவீதமாக இருந்தது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 2020 ஜூன் காலாண்டில் வங்கிகளில் குடும்பங்களின் கடன்கள் ரூ .1,38,472 கோடியாக இருந்தது. ஆனால் டிசம்பரில் ரூ .2,18,216 கோடியாக அதிகரித்தது. ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு கடன் திருப்பிச் செலுத்துவதற்கான சில அறிவிப்புகளை வெளியிட்டது. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து அதிக கடன் வாங்கிய போதிலும், 2020-21 டிசம்பர் காலாண்டில் வீட்டு நிதி கடன்கள் சற்றே குறைவாக இருந்தது, வங்கி சாரா நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் வாங்கியதில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டது என ரிசர்வ் வங்கி கூறியது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: How covid 19 pandemic impacted household savings deposits and debt

Next Story
ஒரு நாடு ஒரு ரேஷன் அட்டை : கடந்து வந்த பாதை என்ன?One Nation One Ration Card ONORC system
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com