Russia’s nuclear plant strike: வெள்ளிக்கிழமை அதிகாலை ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தில் ரஷ்யா நடத்திய தாக்குதல், 1986ம் ஆண்டு செர்னோபில் வெடித்து சிதறி ஏற்பட்ட தாக்கங்களைப் போன்ற ஒரு நிகழ்வு மத்திய ஐரோப்பாவை பாதிக்கலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியது.
வெடிகுண்டால் ஏற்பட்ட தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டுவிட்டது. அணு உலைகளுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை. அணுமின் நிலையம் முழுமையாக பாதுகாக்கப்பட்டுள்ளது என்று உக்ரைன் அதிகாரிகள் கூறிய நிலையில் பதட்டம் ஓரளவுக்கு குறைந்தது.
உக்ரைன் அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து… ஆபத்துகள் என்ன?
செர்னோபில்லைப் போன்று ஜாப்போரிஜியா இல்லை; தீ மற்றும் இதர வெளிப்புறக் காரணிகளால் பாதிக்கப்படாத வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டாலும் கூட, சர்வதேச அணு சக்தி அமைப்பு, தற்போது நடத்தப்படும் தாக்குதல் ஜாப்போரிஜியாவின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் என்று எச்சரிக்கை செய்துள்ளது.
தற்போது நடைபெற்று வரும் தாக்குதல் காரணமாக அணுமின் நிலையத்திற்கு விநியோகம் செய்யப்படும் மின்சாரம் பாதிக்கப்படுவது குறித்து உக்ரைன் நாட்டு அணு சக்தி கட்டுப்பாட்டாளரகம் கவலை தெரிவித்துள்ளது. மின் தடை ஏற்படும் பட்சத்தில், பெரிய அளவில் நம்பிகை அளிக்காத டீசல் ஜெனரேட்டர்களை வைத்து குளிரூட்டிகளை செயல்படுத்தும் நிலை ஏற்படும் என்று கூறியுள்ளது. குளிரூட்டிகள் முறையாக செயல்படுத்தப்படவில்லை என்றால் 2011ம் ஆண்டு ஜப்பான் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக ஃபுகோஷிமாவில் ஏற்பட்ட ஆபத்து இங்கும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
உக்ரைன் முன்னாள் அதிபர் மீது பார்வையைத் திருப்பும் ரஷ்யா; யார் இந்த விக்டர் யனுகோவிச்?
இப்படி ஒரு அசம்பாவிதம் நிகழும் என்றால் அது ஐரோப்பா முழுவதும் பரவும் மிகப்பெரிய ஆபத்தாக முடியும் என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் எச்சரிக்கை செய்துள்ளார்.
அணு உலையில் ஏதேனும் விபத்து ஏற்பட்டால் அது அனைவரின் முடிவுக்கும் வழி வகுக்கும். ஐரோப்பாவின் முடிவாக அது மாறிவிடும் என்று, மற்ற நாடுகள் அனைத்தும் ரஷ்யாவிற்கு அழுத்தம் கொடுக்குமாறு நள்ளிரவில் அவர் வெளியிட்ட உருக்கமான வீடியோவில் அவர் குறிப்பிட்டார்.
ஐரோப்பிய தரும் உடனடி அழுத்தம் மட்டுமே ரஷ்ய துருப்புகளின் செயல்பாட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்கும். அணு உலை அருகே நடத்தப்படும் தாக்குதல் காரணமாக ஏற்படும் பேரழிவால் நிகழ இருக்கும் ஐரோப்பாவின் அழிவை தடுத்து நிறுத்துங்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிகழ்ந்தது என்ன?
துறைமுக நகரமான கெர்சோனை ரஷ்யா கைப்பற்றிய நிலையில் ரஷ்ய துருப்புகள் முன்னோக்கி நகர்ந்தனர். எனெர்ஹோதர் என்ற நகரத்தின் மீது தாக்குதல் நடத்தி அணு உலைக்கு செல்லும் வழியை கைப்பற்றினார்கள். எப்படி அணுமின் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்பது தொடர்பாக தெளிவான விளக்கம் இல்லாத நிலையில், எனெர்ஹோதர் மேயர் திமித்ரோ ஒர்லோவ், ரஷ்ய துருப்புகள் அணுமின் நிலையத்தை நோக்கி நகர்ந்தது குறித்தும் அதன் பின்னர் அதிக அளவில் தாக்குல் சத்தங்கள் அங்கிருந்து வந்தன என்றும் குறிப்பிட்டார்.
அணுமின் நிலையத்தின் செய்தி தொடர்பாளர் ஆண்ட்ரி துஸ், உக்ரேனிய தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் வெள்ளிக்கிழமை அதிகாலை ரஷ்யாவின் குண்டுகள் நேரடியாக அணுமின் நிலையத்தை நோக்கி வந்தன. 6 உலைகளில் ஒன்றில் அவர்களின் குண்டுகள் வெடித்து தீ எரியத்துவங்கியது என்று குறிப்பிட்டார். தீயணைப்பு வீரர்கள் மீதும் தாக்குதல் நடத்தியதால் அவர்களால் தீயை அணைக்க அணு உலையை நெருங்க இயலவில்லை என்றும் அவர் மேற்கோள்காட்டினார்.
சர்வதேச அணுசக்தி அமைப்பின் இயக்குநர் ரஃபேல் க்ரோஸி உக்ரைன் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, அணு உலையின் மீது தாக்குதல் நடைபெறவில்லை, அதன் அருகே அமைந்திருக்கும் கட்டிடத்தின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டது என்று தெளிவுபடுத்தினார்.
6 உலைகளின் பாதுகாப்பு அம்சங்களும் இதனால் பாதிக்கவில்லை என்றும், கதிரியக்க துகள்கள் அதில் இருந்து வெளியேறவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
ஆனாலும் தொடர்ந்து கட்டுப்பாட்டாளாரகமும் ஆப்பரேட்டர்களும் தொடர்ந்து அங்கே நடைபெற்றுவரும் தாக்குதல்கள் மிகவும் மோசமானதாகவும் சவால்மிக்கதாகவும் இருக்கிறது என்பதால் அங்குள்ள நிலைமை என்னவென்று நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டார் அவர். இந்த வார ஆரம்பத்திலேயே ரஃபேல், அணுமின் நிலையங்களுக்கு அருகே நடத்தப்படும் ரஷ்யாவின் தாக்குதல்களுக்கு கடுமையான கண்டனங்களை சர்வதேச அணுசக்தி அமைப்பு தெரிவிக்கிறது என்று கூறியிருந்தார்.
உக்ரைனில் உள்ள ஜப்போரிஜ்ஜியா மற்றும் இதர அணுமின் நிலையங்கள் அருகே நடத்தப்படும் தாக்குதல்கள் மற்றும் ராணுவ செயல்பாடுகள் எந்த வகையிலும் அங்கே இருக்கும் உலைகளையோ அல்லது அங்கு பணியாற்றும் மக்களையோ இலக்காக கொண்டிருக்க கூடாது என்பது இதில் மிகவும் முக்கியமானது என்று தெரிவித்தார்.
வெடித்து சிதறிய செர்னோபில் அணு உலையை ரஷ்ய ராணுவத்தினர் கைப்பற்ற காரணம் என்ன?
என்ன நடந்திருக்கும்?
தாக்கப்பட்ட உலை ஆஃப்லைனில் இருந்தது, ஆனாலும் அதில் அதிக கதிரியக்க அணு எரிபொருள் உள்ளது. மற்ற ஆறு உலைகளில் நான்கு இப்போது ஆஃப்லைனில் எடுக்கப்பட்டு, ஒன்று மட்டுமே செயல்பாட்டில் உள்ளது.
ஆலையில் உள்ள அணு உலைகளில் தடிமனான கான்கிரீட் கட்டுப்பாட்டு குவிமாடங்கள் உள்ளன, அவை டாங்கிகள் மற்றும் பீரங்கிகளில் இருந்தும், வெளிப்புறத் தீயில் இருந்தும் பாதுகாக்கும் என்று ஒபாமா ஆட்சியின் போது தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் ஆயுதக் கட்டுப்பாடு மற்றும் பரவல் தடைக்கான மூத்த இயக்குநராக பணியாற்றிய ஜான் வொல்ஃப்ஸ்டால் கூறினார்.
அதே சமயம், அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து ஒருபோதும் நல்லதல்ல என்றும் அவர் கூறினார். எங்கள் அணுமின் நிலையங்கள் தாக்குதலுக்கு உள்ளாகுவதையும், தீப்பிடித்து எரிவதையும், அதனால் பாதிக்கப்படையக் கூடிய நாட்டினர் தீயைக் கட்டுப்படுத்த அணுகமுடியாமல் போவதையும் நாங்கள் விரும்பவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
அணுமின் நிலையங்களில் எரிபொருள் “ராடுகளை” குளிர்விக்க உருவாக்கப்பட்டிருக்கும் குளங்களும் மிக முக்கியமானவை. குண்டு வெடிப்பால் அதிகம் பாதிக்கப்படக் கூடிய அம்சமாக அது இருக்கிறது. பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் கதிரியக்க துகள்களை வெளியேற்ற ஆரம்பிக்கும்.
இதைவிட மிகப்பெரியது அணு உலைகள் இயங்க தேவைப்படும் மின் விநியோகம் என்று கூறுகிறார் நஜ்மெதீன் மேஷ்கதி. சவுத் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் அவர் செர்னோபில் மற்றும் ஃபுகோஷிமா பேரழிவு குறித்து மிகவும் ஆழமாக படித்துள்ளார். மற்ற அதிகாரிகள் மற்றும் தலைவர்கள் வெளியிட்டிருக்கும் அதே கருத்தையே அவரும் கூறுகிறார். மேலும் உலைகளுக்கு தேவையான மின்சார விநியோகத்தில் தடை ஏற்படும் பட்சத்தில் அவர்கள் அவசரகால டீசல் ஜெனரேட்டர்களை நம்பி இருக்கும் சூழல் ஏற்படும். அது அவ்வளவு நம்பிக்கைக்கு உரியதல்ல. ஏன் என்றால் எரிபொருள் தீரும் போது அவை செயல்பாட்டை நிறுத்திக் கொள்ளும். முற்றிலும் மின் தடை நிறுத்தப்படும் பட்சத்தில் பயன்படுத்தப்பட்ட அணு எரிபொருளை குளிர்விக்க தேவையான நீர் விநியோகம் தட்டுப்படும். இது மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
சிட்னி பல்கலைக்கழக வேதியியல் பிரிவு பேராசிரியர் டேவிட் ஃப்லெச்சர் இது குறித்து கூறும் போது, குளிரூட்டிகள் செயல்பாட்டை நிறுத்திய பின்னர் அணு உலைகளை மூடி ஒரு பயனும் இல்லை என்று கூறினார். ஏற்கனவே இங்கிலாந்தின் அணு சக்தி அமைப்பில் பணியாற்றிய அவர், உண்மையான பிரச்சனை என்னவென்றால் செர்னோபில் வெடித்து சிதறியது போன்றா நிகழ்வு குளிரூட்டிகள் செயல்பாட்டை இழக்கும் போது ஏற்படாது. இது போன்ற சேதம் ஃபுகுஷிமாவில் ஏற்பட்டதைப் போன்ற விபத்திற்கு வழி வகுக்கும் என்றும் கூறினார்.
தற்போது இருக்கும் கவலைகள் என்ன?
உக்ரைன் அணுசக்தியை பெரிதும் நம்பியுள்ளது, நான்கு நிலையங்களில் உள்ள 15 உலைகள் நாட்டின் மின்சாரத்தில் பாதியை வழங்குகின்றன.
சபோரிஜியா மீதான தாக்குதலை அடுத்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் பலர் அங்குள்ள சண்டையை உடனடியாக நிறுத்துமாறு அழைப்பு விடுத்தனர்.
உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹாலுடனான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, IAEA இயக்குனர் ரஃபேல், உக்ரைனின் அணுமின் நிலையங்களை ஆபத்தில் ஆழ்த்தக்கூடிய நடவடிக்கைகளில் இருந்து விலகி இருங்கள் என்று அனைத்து தரப்பினரிடமும் வேண்டுகோள் விடுத்தார். ஷ்மிஹால் மேற்கத்திய நாடுகளை நாட்டின் அணுமின் நிலையங்களுக்கு மேல் வானத்தை மூடுமாறு அழைப்பு விடுத்தார். இது உலகநாடுகளின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கும் செயல் என்று அவர் தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
செர்னோபில் உலையும் உக்ரைனில் தான் உள்ளது. இன்னும் அந்த பகுதியில் அணுக்கசிவு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. உக்ரைன் மீது போர் துவங்கிய நாளிலேயே ரஷ்ய படையினர் அதனை கைப்பற்றினர்.
உக்ரைன் அதிகாரிகள் இந்த வார தொடக்கத்தில் IAEAக்கு வைத்த கோரிக்கையில் , செர்னோபில் ஊழியர்கள் ரஷ்ய இராணுவத்தால் தடுத்து வைக்கப்பட்டு சோர்வடைந்துள்ளனர் என்று தெரிவித்தனர்.
செர்னோபில் ஊழியர்களை அவர்களின் பணிகளை செய்ய விடுமாறு ரஷ்யாவை கேட்டுக் கொண்டார் க்ரோஸி. கடந்த வாரத்தில் நடத்திய தாக்குதலில் ரஷ்யாவின் செயல்பாடுகள் கீவ் மற்றும் கார்கிவில் உள்ள கதிரியக்க கழிவுகளை அகற்றும் வசதியையும் தாக்கியது குறிப்பிடத்தக்கது.
இரண்டிலும் மருத்துவ பயன்பாட்டினால் உற்பத்தி செய்யப்படும் குறைந்த அளவிலான கழிவுகள் உள்ளன, மேலும் கதிரியக்க வெளியீடு எதுவும் பதிவாகவில்லை, ஆனால் இந்த சம்பவங்கள் ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
சர்வதேச அமைதிக்கான கார்னகி எண்டோமென்ட்டில் அணுசக்தி கொள்கை திட்டத்தின் இணை இயக்குனரான ஜேம்ஸ் ஆக்டன், வசதிகளைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான எளிய திறவுகோல் அவர்களைச் சுற்றியுள்ள எந்தவொரு இராணுவ நடவடிக்கைகளையும் உடனடியாக முடிவுக்குக் கொண்டு வருவது தான் என்று கூறினார்.
சாதாரண சூழ்நிலையில், ஒரு உலை சக்தியை இழக்கும் மற்றும் அவசரகால டீசல் ஜெனரேட்டர்கள் சேதமடைவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் போதுமான அளவு விரைவாக பழுதுபார்க்கப்படாமல் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் மிக மிக மிக குறைவானது தான் என்று ஆக்டன் கூறினார்.
ஒரு அணு உலை சேதமடைவதற்கும், உருகுவதற்கும் தேவையான அனைத்து சாத்தியக் கூறுகளும் ஒரு சாதாரண நாளைக் காட்டிலும் போர் காலத்தில் மிகவும் அதிகமாகவே இருக்கும் என்று மித்சுரு ஃபுகுடா கூறியுள்ளார். நிஹோன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கும் அவர் நெருக்கடி மேலாண்மை மற்றும் பாதுகாப்பு நிபுணராகவும் இருக்கிறார். ஜப்போரிஜியா மீதான தாக்குதல் அனைத்து நாடுகளிடையேவும் பரந்த கேள்விகளை எழுப்புகிறது என்றார்.
மதிப்பிற்குரிய ஒரு நாட்டின் ராணுவம் இத்தகைய செயல்பாடுகளில் மூர்க்கத்தனமாக ஈடுபடும் என்று நாம் யாருமே நினைக்கவில்லை என்று கூறினார் அவர். தற்போது புடினின் செயல்பாட்டினால், , உக்ரைன் மட்டுமல்ல, ஜப்பான் உட்பட சர்வதேச சமூகமும் அணுசக்தி ஆலைகளை போர்க்கால இலக்குகளாகக் கொண்டிருப்பதன் அபாயத்தை மறு மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.