/indian-express-tamil/media/media_files/tBl14CRTRL54yoENjtAu.jpg)
On bail, tracked by satellite: How GPS anklets work
இந்த மாத தொடக்கத்தில், ஜம்மு காஷ்மீரில் கைதி ஒருவர் அவரது நடமாட்டத்தைக் கண்காணிக்க ஜிபிஎஸ் (Global Positioning System) கருவி பொருத்தப்பட்ட பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
நாட்டிலேயே, ஜிபிஎஸ் டிராக்கர் இத்தகைய பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படுவது இதுவே முதல்முறை.
சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (UAPA) கீழ் குற்றம் சாட்டப்பட்ட குலாம் முகமது பட், ஜம்முவில் உள்ள சிறப்பு தேசிய புலனாய்வு முகமை (NIA) நீதிமன்றம், அரசுத் தரப்பு மனுவை ஏற்று, அவரது காலில், ஜிபிஎஸ் டிராக்கர் அங்கிலெட்டைப் பொருத்துமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டதை அடுத்து, சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
மறைந்த ஹுரியத் தலைவர் சையத் அலி கிலானியின் கூட்டாளியான குலாம் முகமது பட், ஸ்ரீநகரில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து டெல்லி காவல்துறை மற்றும் ஸ்ரீநகர் காவல்துறையின் கூட்டுக் குழுவால் 2011ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
அவரிடம் இருந்து 21 லட்சம் ரூபாய், இரண்டு செல்போன்கள் மற்றும் சில தொலைபேசி எண்கள் அடங்கிய காகிதம் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், பட் ஒரு ஹவாலா ஆபரேட்டர் என்றும், அந்தப் பணத்தை பிரிவினைவாதிகளுக்கு நிதியளிப்பதற்காகப் பயன்படுத்தியதாகவும் குற்றம்சாட்டினர்.
ஜிபிஎஸ் டிராக்கர் என்றால் என்ன, அது எப்படி வேலை செய்கிறது?
ஜிபிஎஸ் டிராக்கர் என்பது ஜிபிஎஸ் காலர்களைப் போன்ற சிறிய அணியக்கூடிய கருவியாகும், இது விலங்குகளின் அசைவுகளைக் கண்காணிக்க நீண்ட காலமாகப் பயன்படுத்தப்படுகிறது.
இது எல்லா நேரங்களிலும் அணிந்திருப்பவரின் சரியான இருப்பிடத்தை வழங்குகிறது, இதன்மூலம் சட்ட அமலாக்க மற்றும் பாதுகாப்பு முகமைகள் ஒருவரின் நடமாட்டத்தை கண்காணிக்க முடியும்.
இந்த கருவி உறுதியானது மற்றும் அதை சேதப்படுத்தும் எந்த முயற்சியும் ஒரு அலாரத்தை எழுப்பும். அதை அணிந்திருப்பவர் சேதப்படுத்தாமல் கருவியை அகற்ற முடியாது.
இந்த டிராக்கரை ஒரு நபரின் கணுக்கால் அல்லது கையில் பொருத்தலாம். இதற்காக ஜிபிஎஸ் அங்கிலெட்ஸ் மற்றும் ஜிபிஎஸ் பிரேஸ்லட்ஸ் உள்ளன.
இந்த கருவி எங்கே கிடைக்கிறது, அதன் விலை எவ்வளவு?
ஜிபிஎஸ் கருவி இந்த நாட்களில் மிகவும் பொதுவானதாகி விட்டது. சிலர் அவற்றை தங்கள் செல்லப்பிராணிகளுக்கு பொருத்துகிறார்கள்.
கேரளாவில் உள்ள முரட்டு யானைகள் அல்லது குனோவில் உள்ள சிறுத்தைகள் போன்ற வன விலங்குகளின் நடமாட்டம் இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி கண்காணிக்கப்படுகிறது.
பல புதிய வாகனங்களில் டிராக்கர் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் வாகனங்கள் திருடப்படும் போது அவற்றைக் கண்டுபிடிக்க முடியும். நீங்களும் கூட விரும்பினால் உங்கள் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தலாம். கருவியின் தரத்தை பொருத்து விலை மாறுபடும். ஆன்லைனில் சுமார் 1,000 ரூபாய்க்கு ஜிபிஎஸ் கருவி வாங்க முடியும்.
குலாம் முகமது பட்-க்கு ஏன் ஏன் ஜிபிஎஸ் டிராக்கர் பொருத்தப்பட்டுள்ளது?
ஜம்மு காஷ்மீர் காவல்துறை, ஜாமீன் காலத்தில் பட் நடமாட்டத்தை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும் என்றும், ஜாமீன் நிபந்தனைகளில் ஒன்றாக ஜிபிஎஸ் மூலம் அவரைக் கண்காணிக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தது.
ஜே & கே காவல்துறையின் புலனாய்வுப் பிரிவான குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) தலைவரான காவல்துறை இயக்குநர் ஜெனரல் (DGP) ஆர் ஆர் ஸ்வைன், ஜிபிஎஸ் டிராக்கர் "போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளைத் தடுக்க உதவும்" என்றார்.
இதன்மூலம் ஜாமீனில் வெளியில் இருக்கும் நபர் ஒரு செயலில் உள்ள பயங்கரவாதியை சந்திக்கிறாரா அல்லது போதைப்பொருள் அல்லது பயங்கரவாத நிதி போன்றவற்றை சேகரிப்பதற்காக யாரையாவது சந்திக்கிறாரா என்பதை போலீசார் கண்காணிக்க முடியும், என்று ஸ்வைன் கூறினார்.
ஜாமீனில் வெளிவரும் ஒருவருக்கு டிராக்கரைப் பயன்படுத்துவது வழக்கமா?
அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் மலேசியா உள்ளிட்ட பல நாடுகளில் ஜாமீன் பெறுவதற்கு ஜிபிஎஸ் டிராக்கர் முன்நிபந்தனையாக உள்ளன. இந்தியாவில் இந்தத் தொழில்நுட்பம் இந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறை.
இந்தத் தொழில்நுட்பத்தை இந்த வழியில் பயன்படுத்துவது குறித்த சட்ட நிலை என்ன?
பட் மீது ஜிபிஎஸ் அங்கிலெட் பொருத்த நீதிமன்றம் அனுமதித்தது. எவ்வாறாயினும், மனித உரிமை ஆர்வலர்கள் இதை அனுமதிக்கும் குறிப்பிட்ட சட்ட விதிகள் இல்லாததை சுட்டிக்காட்டியுள்ளனர்.
தெற்காசிய மனித உரிமைகள் ஆவண மையத்தின் ரவி நாயர் கூறுகையில், "மின்னணு கண்காணிப்பில் பாதுகாப்பு நிறுவனம் ஏதேனும் தரநிலைகள் மற்றும் நெறிமுறைகளை உருவாக்கியுள்ளதா என்று கேட்பது முக்கியம்" என்றார்.
இங்கிலாந்தில், மின்னணு கண்காணிப்பு (electronic monitoring) பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை நடவடிக்கைகள் சட்டம், 2011 இன் கீழ் இருக்கலாம்.
மலேசியாவில், மின்னணு கண்காணிப்பு தொடர்பான சட்ட கட்டமைப்புகள், தற்போதுள்ள சட்டங்களைத் திருத்துவதன் மூலமும், புதிய சட்டங்களை இயற்றுவதன் மூலமும் உருவாக்கப்பட்டுள்ளன.
ஜிபிஎஸ் டிராக்கர்களைப் பயன்படுத்துவதை ஆதரிப்பவர்கள், கடுமையான சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் ஜாமீன் பெறுவதை சற்று எளிதாக்கலாம் என்றும், ஜாமீனை எதிர்க்காமல் இருக்க காவல்துறைக்கு நம்பிக்கை அளிக்கலாம் என்றும் வாதிடுகின்றனர்.
இருப்பினும், ஒரு மனிதனை கண்காணிப்பது அவர்களின் தனியுரிமைக்கான அடிப்படை உரிமையை மீறுவதாகும் என்று உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
குற்றவாளிக்கு ஜிபிஎஸ் டிராக்கர் பொருத்துவதன் மூலம் பொதுப் பாதுகாப்பைப் பராமரிக்க அரசு முயல்கிறது, இந்த கருவி பொருத்தப்பட்ட மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்க முடியாது, என்று நாயர் கூறினார்.
'மேனகா காந்தி vs யூனியன் ஆஃப் இந்தியா' (1978) வழக்கில் உச்ச நீதிமன்றம், வாழ்வதற்கான உரிமையில் மனித கண்ணியத்திற்கான உரிமையும் அடங்கும் என்று தீர்ப்பளித்தது.
கண்காணிப்பு மனித உரிமைகளை மீறுதல் பற்றிய கவலைகளை எழுப்புவதால், நெறிமுறையற்ற மற்றும் சட்ட விரோதமான நடைமுறைகளைக் கையாள்வதற்கு தகவலறிந்த ஒப்புதல் மற்றும் நடைமுறைகளின் அமைப்பு அவசியம்.
Read in English: On bail, tracked by satellite: How GPS anklets work
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.