India imported halwa : நிர்மலா சீதாராமன் இந்த வாரத்தின் துவக்கத்தில் (ஜனவரி 20) நிதி அமைச்சகத்தில், அமைச்சக நிர்வாகிகள் அனைவருக்கும் அல்வா கொடுத்து, பட்ஜெட் பணிகளை துவங்கி வைத்தார். இந்திய அரசியல் பணிகளிலும் மிக முக்கியமான, பாரம்பரிய மிக்க பொறுப்பாகவே கருதப்படுகிறது இந்த அல்வா கலாச்சாரம். இந்தியாவில் அல்வா என்பது நாடு முழுவதும் நீக்கமற நிறைந்திருக்கும் தேசத்தின் வாசமாகவே இருக்கிறது.
சிந்து நதியில் துவங்கி தாமிரபரணி நதிக்கரை வரை அல்வா என்றால் அதில் ஒரு தனி ஆனந்தமும், எச்சில் ஊறும் நினைவுகளும் தான் மேலோங்குகிறது. சிந்தி அல்வா, மோஹன்பாக் அல்வா, திருநெல்வேலி அல்வா, கோதுமை அல்வா என்று எத்தனை ரகம், அதில் எத்தனை சுவை. ஊருக்கு ஊரு அல்வா வித்தியாசப்படுவதைப் போல், சமய வழிபாடுகளிலும் வித்தியப்படுகிறது. அதே நேரத்தில் முக்கியத்துவமும் பெறுகிறது அல்வா குருத்வாராக்களில் கடா பிரசாதமாக அல்வா தருகின்றார்கள். நவராத்திரி நாட்களில் சின்னஞ்சிறு பெண் குழந்தைகளுக்கு அல்வா பூரி உணவாக வழங்கப்படுகிறது.
Advertisment
Advertisements
இந்தியாவில் இன,மத,மொழி, இட பேதமின்றி கொண்டாடப்படும் இந்த அல்வாவின் பூர்வீகமோ துருக்கி. அங்கிருந்து தான் அல்வா இந்தியாவுக்கு வந்தது. இன்றைய சிறப்பு செய்திகளில் அல்வா குறித்த வரலாற்றை நாம் அறிந்து கொள்வோம்.
உணவு குறித்து ஆராய்ச்சி செய்து வரும் வரலாற்று அறிஞரான கே.டி. அச்சயா கூறுகையில் அரைத்த எள்ளுடன் சேர்க்கப்பட்ட தேனை தான் அல்வாவாக துருக்கியில் பயன்படுத்தினர் என்று மேற்கோள் காட்டினார். இந்திய அல்வாவுக்கு தனி இடமே இருக்கிறது உணவு சரித்திரத்தில். ரவையில் அல்வா, ஆட்டா மாவில் அல்வா, கேரட் அல்வா, பூசணிக்காய் அல்வா, பாதாம் அல்வா, முட்டையை வைத்தும் அல்வா தயாரிக்கின்றார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். ஒவ்வொரு அல்வாவிலும் நெய்யும், பாலும் மணக்கும். ஒருவர் வீட்டில் அல்வா கிளறினால் வாசம் ஊரையே தூக்கும். அது தானே நிஜம்.
வரலாற்றிஞர் ராணா ஷஃபி கூறுகையில் ”சில புத்தகங்கள் அல்வாவின் பிறப்பிடம் அரபு நாடுகள் என்று கூறப்படுகிறது. இந்தியா வரை பரவிய அந்த உணவு வகையே தற்போது அல்வாவாக நிலைத்துவிட்டது. எழுத்தாளர் அப்துல் ஹலீம் ஷரர் (1860-1926) எழுதிய குஜிஸ்தா லக்னோ என்ற புத்தகத்தில் அரபு நிலத்தை தாயகமாக கொண்ட அல்வா பெர்சியா வழியாக இந்தியா வந்தடைந்தது என்று கூறப்பட்டிருக்கிறது” என்று குறிப்பிடுகிறார்.
சில புத்தகங்களிலோ ஹல்வா ஒட்டாமன் அரசர் சுலைமான் அரண்மனையின் சமையற்கட்டுகளில் இருந்து தோன்றியது என்று கூறுகிறார்கள். ஆமாம் 1520 முதல் 1566 ஆண்டு வரை ஒட்டாமனின் அரசராக இருந்தவர் தான் இந்த சுலைமானி. அந்த அரண்மனை சமையலறையில் இனிப்பு உணவுகளுக்காகவே ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. ஹல்வாஹானே என்று அழைக்கப்பட்ட அந்த சமையல் அறையில் இருந்து உலகம் முழுவதும் இந்த அல்வா பரவியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
தி இல்லுஸ்ட்ரேட்டட் ஃபுட்ஸ் ஆஃப் இந்தியா (2009) (The Illustrated Foods of India) என்ற புத்தகத்தில் கோதுமை மாவு, கோதுமை குருணை, சேமியா, கடலை மாவு, வாழைப்பழம், பேரிச்சம்பழம், பூசணிக்காய்கள், பாதம் என பல்வேறு உணவுப் பொருட்களில் இருந்தும் அல்வா தயாரிக்கப்படுகிறது என்று எழுதியுள்ளார் அச்சாயா.
இந்திய சமையலறையில் சரியாக எந்த கால கட்டத்தில் அல்வா நுழைந்தது என்று சரியாக கூற இயலாது. 13 முதல் 16ம் நூற்றாண்டின் பிற்பாதி வரையிலான ஏதோ ஒரு காலகட்டத்தில் தான் இந்தியாவில் அல்வா வந்திருக்கலாம் என்றும் சிகாக்கோவை சேர்ந்த உணவுசார் வரலாற்றாசிரியர் டெயலர் சென் கூறுகிறார். மத்திய கால இந்தியாவில் மல்வா பிரதேசத்தின் சுல்தானுக்காக எழுதப்பட்ட சமையல் புத்தகமான நிமத்னாமாவில் ஹல்வா குறித்தும், அது எப்படி தயாரிக்கப்படுகிறது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. கராச்சி மற்றும் கோழிக்கோடு துறைமுக வாயிலாக இந்தியாவிற்கு அல்வா வந்திருக்கலாம் என்றும் சிலர் கூறுகின்றனர். ஏற்றுமதி, இறக்குமதிக்கு முக்கியத்துவம் பெற்ற இந்த பகுதிகளில் உள்ளூர் வாசத்துடன் கூடிய சிறப்புமிக்க அல்வாக்கள் கிடைக்கிறது.