சாஜூ பிலிப்
கேரள தண்டர்போல்ட்ஸ் என்ற சிறப்பு போலிஸ் படையினர், இந்த வாரத் தொடக்கத்தில் நடத்திய தாக்குதலில், நான்கு மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஒரு பெண் உட்பட இந்த நான்கு பேரும் கர்நாடக, தமிழ்நாடு மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றது காவல்துறை.
கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் மாவோயிஸ்ட்டுகளுக்கும் , போலீசாருக்கும் இடையில் நடக்கும் மூன்றாவது நேரடி தாக்குதல் இதுவாகும். இந்த வருடம் மார்ச் மாதத்தில், வயநாடு மாவட்டத்தில் செயல்படும் ஒரு ஓட்டலில் பணம் பறிக்கும் போது ஒரு மாவோயிஸ்ட்டை போலீசார் சுட்டனர். 2016 ம் ஆண்டு மலப்புரம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் நிலம்பூர் காடுகளில் இரண்டு மாவோயிஸ்ட்டுகள் போலீசாரால் சுடப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த பத்து வருடங்களாகவே கேரளாவில் கண்ணூர், கோழிக்கோடு, வயநாடு, பாலக்காடு , மலப்புரம் ஆகிய வடக்கு மாவட்டங்களில் வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ மாவோயிச நடவடிக்கைகள் நடைபெற்றுவருகிறது . இதன் வெளிப்பாடாக வயநாடு, மலப்புரம், பாலக்காடு போன்ற மாவட்டங்கள் மத்திய அரசின், இடதுசாரி தீவிரவாதத்தால் (எல்.டபிள்யூ.இ) பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டன.
நக்சலிசம் தொடக்கம் என்ன ?
வடக்கு வங்கத்தில் நக்சல்பரி எழுச்சியின் சிற்றலைகள் 1960 ன் பிற்பகுதியில் கேரளாவையும் அடைந்தன. சிபிஎம் கட்சியை விடுத்து நக்சலிசத்தின் தலைவரான ஏ.வர்கீஸும் , இந்தியாவின் தற்போது முக்கிய பெண்ணிய ஆர்வலராக இருக்கும் கே. அஜிதாவும் நில உரிமையாளர்களுக்கு எதிரான தொடர்ச்சியான கிளர்ச்சிகளுக்கு ஊக்கமளித்தனர். வயநாடு, மிகத்தீவிர இடதுசாரி சிந்தனையைத் தாங்கும் மையமாக மாறியது. எவ்வாறாயினும், 1970 களில் பழங்குடியினரின் இதயங்களை வென்ற ஏ.வர்கீஸ் ஒரு என்கவுண்டரில் கொல்லப்பட்டபோது இந்த இயக்கம் அதன் வேகத்தை இழந்தது. இது போலியான பிறகு நிரூபிக்கப்பட்டது என்பது வேறக்கதை.
கேரளா நக்சலிசம் :
கேரளாவில் மாவோயிச நடவடிக்கைகளின் தன்மை மற்ற மாநிலங்களில் இருக்கும் மாவோயிசத்தில் இருந்து வேறுபடுகிறது. உதாரணமாக, கேரளா மாவோயிசம் ஒருபோதும் பொதுமக்களை குறிவைத்து மனித உயிரிழப்புகளை ஏற்படுத்துவது இல்லை.
கேரளா, தமிழ்நாடு கர்நாடகாவின் சந்திக்கும் தடையற்ற வனப்பகுதியில் தான் மாவோயிச நடவடிக்கைகளுக்காக பயன் படுத்தப்பட்டு வருகிறது. பாலக்காடு, மலப்புரம், வயநாடு ஆகிய மாவட்டங்களில் இருக்கும் காடுகள் இந்த முக்கோணத்தின் ஒரு பகுதியாக விளங்குகிறது.
கடந்த காலங்களில், கேரளா மாவோயிஸ்டுகள் கபானி, நடுகனி, பவானி ஆகிய பகுதிகளில் தளம் அமைத்து குழுக்களாய் போராட்டத்தை நடத்தி வந்தனர் . 2017 ம் ஆண்டில் வராஹினி என்ற இடத்தில் புது தளம் அமைத்ததாகவும் தகவல் அறியப்பட்டது. பொதுவாக காடுகளின் எல்லையில் உள்ள கிராமங்கள் அல்லது பழங்குடியின குக்கிராமங்களுக்குள் நுழைந்து, உள்ளூர் மக்களோடு உரையாடுவது இவர்களின் வழக்கம். அரசுக்கு எதிராக ஏன் ஆயுதம் ஏந்துகிறோம் ? என்ற காரணங்களை துண்டுப்பிரசுரங்களாகவும் விநியோகிக்கின்றன.
இருந்தாலும், இந்த பகுதிகளில் மாவோயிஸ்டுகளால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை என்பதே உண்மை. ஏனெனில், அந்த பழங்குடியினர் மற்ற பழங்குடியினரை விட சமூகத்திலும், பொருளாதாரத்திலும் நன்கு முன்தங்கிய நிலையில் இருப்பதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கின்றது.
சில தவறான நடவடிக்கைகள்
சட்டவிரோதமாக செயல்படுவதாக ரிசார்ட்ஸ்களின் மீதும், பழங்குடியினரின் நிலங்களை ஆக்கிரமித்ததாக கல் குவாரிகளின் மீதும் மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தியதாக வழக்குகள் உள்ளன. உள்ளூர் மக்களிடமிருந்து வரும் புகார்களின் அடிப்படையில் போலீசார் அடையாளம் காணக்கூடிய மாவோயிஸ்டுகள் மீது வழக்குகளை பதிவு செய்கிறார்கள்.
2014 ம் ஆண்டில், பாலக்காட்டில் அமைந்திருக்கும் கே.எஃப்.சி கடையைத் தாக்கினர். அதே ஆண்டில், இந்தோ-ஜப்பானிய கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்ட நிட்டா ஜெலட்டின் இந்தியா லிமிடெட் (என்ஜிஐஎல்) கொச்சின் அலுவலகத்தை சூறையாடினர்.
2014ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தான் மாவோயிஸ்டுகளும், கேரள காவல்துறையினரும் நேரடியாக துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. கடந்த மூன்று ஆண்டுகளில் ஏற்பட்ட மரணங்கள் மாவோயிஸ்ட்களின் தரப்பில் நடந்தாலும் , வடக்கு கேரளாவிலும் மாவோயிஸம் பரவுவதை யாராலும் தடுக்க முடியவில்லை.
பிற மாநிலங்களிலிருந்து கேரளாவில் :
உளவுத்துறை வட்டாரங்களின்படி, கேரளாவில் செயல்படும் பெரும்பாலான மாவோயிஸ்டுகள் மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள். 'விக்ரம் கவுடா' போன்ற பிற மாநிலங்களை சேர்ந்த பல உயர்மட்ட மாவோயிஸ்டுகள் கேரளாவில் அவ்வப்போது காணப்பட்டுள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளில் கொல்லப்பட்ட ஏழு மாவோயிஸ்டுகளில் ஆறு பேர் (இந்த வார துப்பாக்கிச் சூடு உட்பட) பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். மற்ற மாநிலங்களில் மாவோயிஸ்ட்களுக்கு எதிராக நடவடிக்கை தீவிரமாக்கப்படுவதால் கேரளாவில் மாவோயிஸ்ட்டுகள் தஞ்சம் அடைய தூண்டுவதாக கருதப்படுகிறது.
அனுதாபம் மற்றும் ஆதரவு :
கேரளாவில் பொதுமக்களின் இரத்தத்தை மாவோயிஸ்ட்கள் விலையாக கேட்பதில்லை என்பதால், அவர்களின் இயக்கம் கேரளாவில் குறிப்பிடத்தக்க ஆதரவைப் பெறுகிறது.
போராட்டம், அய்யங்கலிபாடா போன்ற சமூக அமைப்புகளிடமிருந்தும், மனித உரிமை ஆர்வலர்களிடமிருந்தும் மாவோயிஸ்ட்கள் கருத்தியல் ஆதரவைப் பெறுகிறார்கள்.
மாவோயிஸ்டுகள் என்ற பெயரில் நடக்கும் போலிஸ் கொலைகளும், வழக்குகளும் தொடர்ச்சியாக கேரளாவில் கேள்வியாக்கப்படுகின்றன. இதனால், மனித உரிமை ஆர்வலர்கள் பெரும்பாலும் என்கவுண்டர் கொலைகள் குறித்து ஒரு இணையான விசாரணையையும் நடத்துகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.