பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங், சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் சந்திப்பு நடைபெற உள்ளது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த சந்திப்பு மாமல்லபுரத்தில் நடக்க இருப்பது தமிழர்களாகிய நமக்கு பெருமையே. ஆனால், சிலர் இதை மாமல்லபுரம் என்றும் பலர் மகாபலிபுரம் என்றும் குறிப்பிட்டு வருகின்றனர்.
மகாபலிபுரமா இல்லை மாமல்லபுரமா என்பது குறித்து இந்த செய்தியில் வரலாற்று தகவல்களுடன் காண்போம்...
பல்லவ மாமல்லன்
கடற்கரை நகரமாகவும் இன்று உருமாறியுள்ள மாமல்லபுரம், மாமல்லன் என்ற பெயரிலிருந்து தோன்றியது ஆகும். பல்லவர் ஆட்சியில், கிபி 630 முதல் கிபி 668 காலத்தில் ஆட்சி செய்த முதலாம் நரசிம்மவர்மன் , கற்சிற்பங்கள் கொண்ட அழகிய மாமல்லபுரம் நகரத்தை உருவாக்கினார்.
/tamil-ie/media/media_files/uploads/2019/10/2-5-300x200.jpg)
மகாபலிபுரம் தோன்றிய கதை
கடற்கரை கோயில் அமைந்துள்ள நகரத்தின் உண்மையான பெயர் மாமல்லபுரம் தான் என்று மாமல்லபுரம் புத்தகத்தை எழுதிய எழுத்தாளர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, மகாபலிபுரம் என்று 14 முதல் 17ம் நூற்றாண்டில், விஜயநகர பேரரசு ஆட்சிக்காலத்தில் தான் அழைக்கப்பட துவங்கியது. மாமல்லபுரத்துக்கும், மகாபலி அரசருக்கும் எவ்வித நேரடி தொடர்புமில்லை.
ஒரே ஒரு தொடர்பு மட்டும் உள்ளது அதுயாதெனில்,மாமல்லபுரத்தில் உள்ள வராஹ குகை கோயிலில் உள்ள மண்டபத்தில் திரிவிக்கிரமா கற்சிற்பம் உள்ளது. திரிவிக்ரமா யார் என்றால், மகாவிஷ்ணுவின் ஐந்தாவது அவதாரமான வாமன அவதாரத்தில், மகாபலியை கொன்றவரே திரிவிக்ரமா. இதுமட்டுமே, மகாபலிக்கும் மாமல்லபுரத்துக்கும் உள்ள தொடர்பு ஆகும்.
/tamil-ie/media/media_files/uploads/2019/10/1-10-300x200.jpg)
மீண்டும் மாமல்லபுரம்
நாடு சுதந்திரம் அடைந்தபின், தமிழகத்தில் திராவிட அரசியல் காலூன்ற துவங்கியது. இந்த காலத்தில் மீண்டும் மாமல்லபுரம் என்ற பெயரில் அழைக்க துவங்கினர். 1957ம் ஆண்டு அரசு இதழிலும் மாமல்லபுரம் என்றே பெயர் பதியப்பட்டது. 1964ம் ஆண்டில், கிராம பஞ்சாயத்து ஆக மாமல்லபுரம் அறிவிக்கப்பட்டது. மகாபலியுடன் சிறு தொடர்பு இருந்தாலும், பல்லவ மன்னர்களின் நினைவுகளை போற்றும் வகையில், மாமல்லபுரம் என்ற பெயரை தமிழக அரசு சூட்டி மகிழ்ந்தது.
மாமல்லபுரத்தில் உள்ள கற்சிற்பங்களுக்கு அடித்தளமிட்டவர் முதலாம் நரசிம்மவர்மன் ஆயினும், அதற்குரிய ஆலோசனைகளை வழங்கியது அவரது தந்தை முதலாம் மகேந்திரவர்மன் (கிபி 600 - கிபி 630)ஆவார். முதலாம் நரசிம்மவர்மனை தொடர்ந்து, அவரது பேர.ன் முதலாம் பரமேஸ்வரவர்மன் (கிபி 670-695) அவரது கொள்ளுப்பேரன் இரண்டாம் நரசிம்மவர்மன் ( கிபி 700-728) மாமல்லபுரத்தை அழகிய கற்சிற்பங்கள் கொண்ட நகராக உருவாக்கினர்.
இரண்டாம் நரசிம்மவர்மன், ராஜசிம்ம பல்லவர் என்று அழைக்கப்பட்டார். இவரது ஆட்சிக்காலத்தில்தான் மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோயில், காஞ்சிபுரத்தில் கைலாசநாதர் கோயில் உள்ளிட்டவைகள் கட்டப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
மாமல்லபுரமா அல்லது மகாபலிபுரமா என்று அனைவரும் குழப்பிக்கொண்டிருப்பீர்கள். அதன் உண்மையான வரலாறை தெரிந்துகொண்டீர்கள் அல்லவா.
மோடி - ஜின்பிங் இடையேயான சந்திப்பு, மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இருந்தபோதிலும், அலுவல்மொழியின் காரணமாக, மகாபலிபுரம் என்ற சொல்லையே பயன்படுத்துமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.