நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. மருத்துவமனை மற்றும் வீட்டுத் தனிமையில் உள்ள கொரோனா நோயாளிகள் ஆக்சிஜன் அளவை அதிகரிக்க புரோனிங் செய்யலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். மத்திய மாநில அரசுகளிடையே ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகரித்துள்ள நிலையில், புரோனிங் சிகிச்சை முறை என்றால் என்ன? அது எவ்வாறு பலனளிக்கிறது என்பதை பார்க்கலாம்..
புரோனிங் என்றால் என்ன?
புரோனிங் மருத்துவ ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட நிலை. மத்திய சுகாதாரத்துறையால் ஊக்குவிக்கப்படுகிறது. இந்த முறையின் கீழ் நோயாளிகள் ஆக்சிஜன் அளவை அதிகரிக்க வயிற்றை தரையில் வைத்து குப்புற படுத்துக் கொள்ள வேண்டும். இதனால் உடனடி பலன் கிடைக்கும். ஒரு ஆங்கில நாளிதழில் வெளியான செய்தியில், கோரக்பூரைச் சேர்ந்த 82 வயதான கோவிட் பாசிட்டிவ் நோயாளியின் ஆக்சிஜன் அளவு புரோனிங் செய்ததால் 75 லிருந்து 94ஆக உயர்ந்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் உள்ள கோவிட் நோயாளிகளுக்கு புரோனிங் ஒரு உடற்பயிற்சியாக பரிந்துரைக்கப்படுகிறது. இதனால் அவர்களுக்கு கூடுதல் ஆக்சிஜன் தேவைப்படுவதில்லை.
புரோனிங் பொசிஷனிங் என்றால் என்ன?
புரோன் பொசிஷன் என்பது குறிப்பிட்ட நேரம் தலையணையை பயன்படுத்தி குப்புறபடுப்பது, பின் வலதுபுறம் படுப்பது சிறிது நேரத்திற்கு பின் உட்கார்ந்து விட்டு இடது புறமாக படுப்பது இறுதியாக மீண்டும் குப்புறபடுப்பது. சுமார் 30 நிமிடங்கள் முதல் 2 மணி நேரம் வரை புரோனிங் செய்யலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இது ஆக்ஸிஜன் அளவை மேம்படுத்துகிறது. இப்படி செய்வதால் சுவாச பிரச்சனையை சமாளிக்க முடியும் என லூதியானாவைச் சேர்ந்த டாக்டர் சுரேந்திர குப்தா கூறியுள்ளார்.
ஆக்சிஜன் அளவு எப்படி மேம்படுகிறது.
ஆக்ஸிஜன் செறிவு (SpO2) 94 க்குக் கீழே இருந்தால், சரியான நேரத்தில் புரோனிங் செய்து காற்றோட்டத்தை மேம்படுத்தலாம். இதன் மூலம் ஒரு உயிரை காப்பாற்ற முடியும் என டாக்டர் குப்தா கூறியுள்ளார். புரோனிங் நுரையீரலை விரிவாக்குவதற்கு இடமளிக்கிறது, காற்றோட்டம் அதிகரித்து ரத்த ஓட்டம் அதிகமாகிறது. மேலும் அல்வியோலி அலகுகளை (சுவாச மண்டலத்தின் மிகச்சிறிய பாதையாக இருக்கும் சிறிய பலூன் வடிவ கட்டமைப்புகள்) திறந்த நிலையில் வைத்திருக்கிறது, இதனால் சுவாசத்தை எளிதாக்குகிறது என மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட வழிகாட்டுதல்கள் கூறுகின்றன.
புரோனிங் செய்ய என்ன தேவை?
இதற்கு 5 தலையணைகள் தேவை. நோயாளி குப்புற படுத்து கொள்ள வேண்டும். அவரது கழுத்தில் ஒரு தலையணை, மார்பு முதல் தொடை வரை 2 தலையணைகள், காலில் 2 தலையணைகளை வைக்க வேண்டும்.சுமார் 30 நிமிடங்கள் முதல் 2 மணி வரை குப்புற படுத்துக் கொள்ளலாம். அதன்பிறகு 30 நிமிடங்கள் முதல் 2 மணி வரை வலதுபுறமாக படுக்கலாம். இதன்பிறகு இதே கால அளவில் அமரும்நிலையில் இருக்க வேண்டும். அதன்பிறகு இதே கால அளவில் இடதுபுறமாக படுத்து கொள்ளலாம். இறுதியாக மீண்டும் குப்புற படுத்துக் கொள்ளலாம். இந்த 'புரோனிங்' முறையால் சுவாச பிரச்சினையை சமாளிக்க முடியும்.
புரோனிங் எப்போது செய்யக்கூடாது?
கர்ப்பிணிகள், இதய நோயாளிகள், ஆழமான இரத்த உறைவு, நிலையற்ற முதுகெலும்பு, தொடை எலும்பு அல்லது இடுப்பு எலும்பு முறிவுகள்,கழுத்து வலி, கழுத்து முறிவு ஏற்பட்டவர்கள் கண்டிப்பாக 'புரோனிங்' செய்ய கூடாது
புரோனிங் செய்யும்போது நினைவில் கொள்ள வேண்டியவை
உணவுக்குப் பிறகு ஒரு மணி நேரம் புரோனிங் செய்வதைத் தவிர்க்கவும். ஒருவர் தாங்கமுடியாத அளவுக்கு ஒரு நிலையில் படுத்திருக்க இருக்க வேண்டும். தலையணைகள் அழுத்தம் பகுதிகளையும் வசதியையும் மாற்ற சிறிது சரிசெய்யலாம். நோயாளி படுத்திருக்கும் அறை நன்கு காற்றோட்டமாக இருக்க வேண்டும். நோயாளிகள் ஒரு நாளைக்கு 16 மணி நேரம் சுழற்சி முறையில் புரோனிங் செய்யலாம். உடலில் ஏதாவது காயங்கள் இருந்தால் எலும்பில் அடிபட்டு இருந்தால் இதனை செய்வது கடினம்.
வீட்டுத் தனிமையில் உள்ளவர்கள் ஆக்சிஜன் அளவை அதிகரிக்க வேறு என்ன செய்யலாம்?
ஆழ்ந்த சுவாசம், யோக பிராணயாமா, நல்ல காற்றோட்ட வசதி,நீரேற்றத்துடன் இருப்பது, இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணுதல், ஒளி பயிற்சிகள் நோயாளிகளின் ஆக்ஸிஜன் அளவை மேம்படுத்த உதவுகின்றன என்று சுகாதார அமைச்சகம் அறிவுறுத்துகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.