இந்த 21 நாள் எல்லை பூட்டுதல், இந்தியாவில் நாவல் கொரோனா வைரஸின் பரவலை தாமதப்படுத்தினாலும், அதை முற்றிலுமாக அகற்றாது என்று பெரும்பாலான நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த காலகட்டத்தை நமது பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் , சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், மோசமான சூழ்நிலைக்குத் தயாராவதற்கும் பயன்படுத்தப்பட வேண்டும். உண்மையில், இந்த வேலைப்பாடு இந்தியாவில் ஏற்கனவே தொடங்கிவிட்டது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, செயலாளர், அசுதோஷ் ஷர்மாவின் நேர்காணல் இங்கே:
கொவிட்- 19 சவாலை எதிர்கொள்ள அறிவியல் சமூகம் எவ்வாறு தயாராகிறது?
கொரோனா வைரஸுக்கு எதிரான இந்த போர் பல மட்டங்களில் நடைபெறக்கூடியவை. அறிவியல், தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் என மூன்றிலும் பரவலாக இருக்கக்கூடிய தீர்வுகளைக் கண்டறிய நாங்கள் முயற்சிக்கின்றோம்.
அறிவியல் ரீதியாக கூற வேண்டும் என்றால் மலிவான சோதனைக் கருவிகளை கண்டறியும் முயற்சிகளை கூறலாம். தடுப்பூசி மேம்பாடு, மருந்துகளை மறுபயன்பாடு செய்தல் போன்ற முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொழில்நுட்ப ரீதியாக, நோயாளிகள் அல்லது சுகாதார நிபுணர்களுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்களை கூறலாம் . மூன்றாவதாக, கொரோனா வைரஸ் பற்றிய பயனுள்ள தகவல் தொழிநுட்ப அடிப்படையிலான தயாரிப்புகளையும் நாம் கொண்டு வர வேண்டும்.
எனவே, அவசரமாக நடைமுறைக்கு வரவேண்டிய விஷயங்கள் யாவை? இதற்கான பதிலை நான் தொழிநுட்பத்தில் இருந்து தொடங்குகிறேன். சமீபத்தில், இந்திய தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம், கொரோனா வைரஸின் அவசர சூழ்நிலைக்கு தேவைப்படும் பொருட்களை தயாரிக்க சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும், ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுத்தது. இதன்மூலம், பலதரப்பட்ட சாதனங்கள் தயாரிக்கப்படலாம். உதாரணமாக, வென்டிலேட்டர்களை எடுத்துக் கொள்வோம். பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகிவிட்டால், வென்டிலேட்டர்களின் தேவை தவிர்க்க முடியாதவை. தற்போது, ஒரு நிறுவனம் ஸ்ப்லிட்டார் முறையில் வென்டிலேட்டரை தயாரிக்க முன்மொழிந்துள்ளது. இதன் மூலம், ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நோயாளிகளுக்கு வென்டிலேட்டரைப் பயன்படுத்த முடியும்.
இதேபோல், இரத்த ஆக்ஸிஜனை அளவிடும் மானிட்டர்கள் அதிகளவில் தேவைப்படுகிறது. இவை சந்தையில் கிடைத்தாலும், அதிக விலை கொண்டவையாக உள்ளன. ஏதேனும் ஒரு நிறுவனம், மலிவான விலையில் இதை தயாரிக்க முடிந்தால், அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
எனவே……. நாங்கள் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். சாதனங்கள், உற்பத்தியாகக்கூடிய சூழலில் இருந்தால்,நாங்கள் (அரசாங்கம்) அதை ஆதரிக்க தயாராக இருக்கிறோம். உண்மையில், பயனுள்ள தயாரிப்புகளைக் தயாரிக்க இருக்கும் 60 ஸ்டார்ட்அப் நிறுவனங்களை நாங்கள் ஏற்கனவே கண்டறிந்துள்ளோம்.
அறிவியல் ரீதியாக என்ன செய்யப்படுகிறது?
கொரோனா வைரஸ் குறித்த ஆராய்ச்சி முன்மொழிவுக்கான அழைப்பை அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியம் சில நாட்களுக்கு முன்பு கேட்டுள்ளது. வரும் அழைப்புகள் மார்ச் 30ம் தேதி முதல் சோதனையிடப்படும். (இருப்பினும் அழைப்புகள் தொடர்ந்து வரக்கூடும்) இதில், சில குறிப்பிட்ட யோசனைகளை எதிர்பார்க்கிறோம்.
உதாரணமாக, கொரோனா வைரஸ் தொற்றுக்கான மலிவான சோதனைக் கருவிகளை எடுத்துக் கொள்வோம். தற்போது, ஆய்வக சோதனைக்கு தனியார் நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டாலும், அவை பொது ஜன மக்களுக்கு பயனுள்ளதாக இல்லை. எனவே, ரூ .500 க்குக் குறைவான டெஸ்ட் கிட்களைப் எதிர் பார்க்கிறோம்.
தடுப்பூசி தயாரிபுக்கான அனைத்து முயற்சிகளும் ஆதரிக்கப்பட்டு, பாஸ்ட் ட்ரேக் முறையில் செயல்முறை படுத்தப்படும். கொரோனா வைரஸ் தொற்றுக்கான சிகிச்சை அல்லது ஏற்கனவே உள்ள மருந்துகளை கொரோனா வைரஸ் நோய்க்கு மறுபயன்பாடு செய்தல் போன்ற முயற்சிகளும் ஆதரிக்கப்படும். உண்மையில், பெங்களூரில் உள்ள ஒரு நிபுணர் குழு, தனியார் நிறுவனத்துடன் இணைந்து செயற்கை நுண்ணறிவு உதவியால் மருந்து மறுபயன்பாடு ( repurposing of drugs) செயல்முறையில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது.
தகவல் தொழில்நுட்பம் எந்த வகையான உதவியை வழங்க முடியும்?
பல தேவைகள் உள்ளன. ஒரு உதாரணத்தைக் கூறுகின்றேன். இந்திய சூழலுக்கான ஒரு தகவல் டிஜிட்டல் டாஷ்போர்டு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. பாதிக்கப்பட்ட மக்களின் அனைத்து வகையான டேட்டாக்கள் ஒருங்கிணைக்கப்படுவதன் மூலம் நிறைய பயனுள்ள வலைத்தளங்கள், மருத்துவ செயலிகள் மற்றும் சாட்போட்கள் கூட உருவாக்கப்படலாம்.
இந்தியா போன்ற நாடுகளுக்கு இது எவ்வளவு ஆபத்தானது ?
பரவலைக் கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன, ஆனால் ஒவ்வொரு நிகழ்விற்கும் நீங்கள் தயாராக இருக்க வேண்டும். அதனால்தான், பல்வேறு மட்டங்களில் நாங்கள் பணியாற்றி வருகிறோம்.
இந்தியாவில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படலாம் என்று கூறும் கணிப்பை என்ன செய்வது?
கணித மாதிரிகள் (Mathematical Models)பல அனுமானங்களில் செயல்படுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை வலுவான அறிவியலை அடிப்படையாகக் கொண்டவை. அரசாங்க நடவடிக்கைகள் ஏற்படுத்தும் தாக்கங்கள்…. உதாரணமாக தனிமைப்படுத்தல், சமூக விலகல் போன்றவைகள மாதிரிகளின் முடிவுகளை பாதிக்கும். உண்மையில், மாடலிங் குறித்த சில நல்ல ஆராய்ச்சிகளையும் நாங்கள் ஆதரிக்க தயாராக உள்ளோம்.
இத்தகைய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முயற்சிகளை ஆதரிக்க எவ்வளவு பணம் ஒதுக்கப்பட்டுள்ளது?
அவசர நடவடிக்கையாக ரூ .100 கோடியை ஒதுக்கியுள்ளோம். இந்த நிதி தீரும் தருவாயில், நாங்கள் அடுத்த நிதியாண்டில் கால் வைத்திருப்போம். இன்னும் கூடுதலாக நிதி ஒதுக்கப்படும். செலவுகள் அனைத்தும் தொழில் மற்றும் விஞ்ஞான குழுக்களின் தேவைகளைப் பொறுத்தது. எங்களுக்கு நல்ல திட்டங்கள் கிடைத்தால், நிதியுதவி ஒரு பிரச்சினையாக இருக்காது.