Advertisment

புத்தகத்தில் கொக்கைன், தலைமுடியில் பணம்; இந்தியாவில் உருமாறி வரும் கடத்தல்

இந்தியாவில் பல புதிய முறைகளில் கடத்தல்கள் நடைபெறுவதாக பதிவாகியுள்ளது. கொக்கைன், மெத்தம்பேட்டமைன், சிகரெட்டுகள், வெளிநாட்டு நாணயங்கள் போன்றவை அதிகமாக பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

author-image
WebDesk
New Update
Smuggling

லெஹெங்கா, துடைப்பம், முடி விக்குகள், தெர்மாகோல் பந்துகள் போன்ற பொருள்களில் மறைத்து கடத்தல் நடைபெறுகிறது. கடந்த ஓராண்டில் இதன் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. சட்டவிரோதமான பணம் தொடங்கி ஹெராயின், கொக்கைன் உள்ளிட்ட போதைபொருள்கள் வரை இந்தியாவில் கடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவலை வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் (DRI) புதிய அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

Advertisment

 

ஆங்கிலத்தில் படிக்கவும்: Cocaine hidden in story book, illicit cash stuffed in hair wigs: How smuggling in India is evolving

 

Advertisment
Advertisement

கொக்கைன், மெத்தம்பேட்டமைன், சிகரெட்டுகள், வெளிநாட்டு நாணயங்கள் போன்ற பல்வேறு பொருள்கள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்படுகின்றன.

இந்தியாவை இரண்டு முக்கிய போதைப்பொருள் மையங்களுடன் இணைக்கும் விதமாக பாரம்பரிய தரை மற்றும் கடல்வழிப் பாதைகள் உள்ளன. இவை டெத் க்ரெசன்ட் (ஆப்கானிஸ்தான், ஈரான் மற்றும் பாகிஸ்தான்) என்றும் டெத் ட்ரைஆங்கிள் (மியான்மர், லாவோஸ் மற்றும் தாய்லாந்து) என்றும் அறியப்படுகிறது. மேலும், பல புதிய வழித்தடங்களும் இதில் உருவாகியுள்ளன.

தென் அமெரிக்காவிலிருந்து அதிகளவில் கொக்கைன், வெளிநாட்டினர் மூலம் ஆப்பிரிக்க நாடுகளுக்கு விமானம் வாயிலாக அனுப்பப்படுகிறது. இதனிடையே, மேற்கு ஆசியாவில் உள்ள தடையற்ற வர்த்தகக் கிடங்கு மண்டலங்கள், குறிப்பாக துபாய், தென்கிழக்கு ஆசியாவிலிருந்து இந்தியாவிற்கு சட்டவிரோத சிகரெட்டுகளை கடத்துவதற்கான முக்கிய போக்குவரத்து மையங்களாக மாறியுள்ளன.

அறிக்கையிலிருந்து எடுக்கப்பட்ட சில முக்கிய அம்சங்கள்:

1 குழந்தைகள் கதைப் புத்தகத்தில் மறைத்து வைக்கப்பட்டுள்ள கொக்கைன்

கொக்கைன் என்பது மேற்கு தென் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட கோகோ தாவரத்தின் இலைகளிலிருந்து பெறப்படுவது. சமீப ஆண்டுகளில், தென் அமெரிக்க நாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் கொக்கைன் கடத்துவதற்கு விமானப் பயணம் ஒரு யுக்தியாக  உருவெடுத்துள்ளது என்று DRI தெரிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் ரூ. 975 கோடி மதிப்புள்ள  கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டது. இது முந்தைய நிதியாண்டில் பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகம். விமான நிலையங்கள் வழியாக இந்தியாவிற்கு கடத்தப்பட்டு கைப்பற்றப்பட்ட கொக்கைன் அளவு 9 சதவீதம் அதிகரித்து 107 கிலோவாக உள்ளது.

வெளிநாட்டவர்கள் தங்கள் உடல்களில் கொக்கைனை மறைத்து இந்தியாவிற்குள் கடத்துகின்றனர். இதேபோல், இந்தியர்களும் ஆப்பிரிக்காவிற்கு கடத்தலில் ஈடுபடுகின்றனர். மேலும், கூரியர் சரக்குகள் மூலமாகவும் கடத்தல் நடைபெறுகிறது.

ஆகஸ்ட் 2023 இல், பெங்களூரு விமான நிலையத்தில், குழந்தைகளின் கதை புத்தகத்தில் மறைத்து வைத்து கொக்கைன் கடத்திய வெளிநாட்டவரை அதிகாரிகள் கைது செய்தனர். அடுத்த சில மாதங்களில் ஹேர் விக்கில் மறைத்து கொக்கைன் கடத்திய வெளிநாட்டவர், மும்பை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். ஷம்பு பாட்டில்கள், மது பாட்டில்கள், சோப் போன்றவற்றில் மறைத்து அதிகளவில் கடத்தல் நடைபெறுகிறது.

2 கொக்கைன் கடத்தலில் ஈடுபடும் இந்தியர்கள்

வெளிநாட்டவர்களுக்கு அடுத்தபடியாக இந்தியர்களும் கொக்கைன் கடத்தலில் ஈடுபடுகின்றனர். இவர்கள் 'மியூல்கள்' என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் ஆப்பிரிக்காவிற்கு சென்று கொக்கைகளை பெற்று, அவற்றை இந்தியாவிற்கு எடுத்து வருகின்றனர். இவை பெரும்பாலும் மியான்மர், காத்மாண்டு, மாலே மற்றும் டாக்கா போன்ற விமான நிலையங்களில் கைப்பற்றப்படுகிறது.

லாட்டரி திட்டங்கள் அல்லது வேலை வாய்ப்புகள் மூலம் ஏமாற்றப்படும் பலர், தாங்கள் கடத்தலில் ஈடுபடுகிறோம் எனத் தெரியாமலேயே இந்த செயல்களை செய்வதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சியரா லியோனில் இருந்து மும்பைக்கு விமானத்தில் வந்த இந்தியரிடமிருந்து 4 கிலோ கொக்கைன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

விமானப் பயணத்தைத் தொடர்ந்து, கொக்கைன் கடத்தலுக்கு கூரியர் சேவைகள் பயன்படுத்தப்படுகிறது. ஜூன் 2023 இல், பிரேசிலின் சாவோ பாலோவிலிருந்து டெல்லிக்கு அனுப்பப்பட்ட கூரியர் பார்சலில் தெர்மாகோல் பந்துகளுக்குள் கொக்கைன் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு கைப்பற்றப்பட்டது. ஏறத்தாழ 10 ஆயிரம் பந்துகளில் இருந்து 1922 கிராம் கொக்கைன் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் ஹெராயின், இலங்கைக்கு கடத்தப்படும் கஞ்சா

மே 2023 இல் ஆப்கானிஸ்தான் துடைப்பக் குச்சிகளில் மறைத்து வைத்திருந்த 5.5 கிலோ ஹெராயின், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அட்டாரி எல்லையில் DRI அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது. இந்த ஆண்டு மார்ச் மாதம், படகு மூலம் கடத்தப்பட்ட ரூ. 109 கோடி மதிப்பிலான கஞ்சாவை கடலோரக் காவல்படை அதிகாரிகள் கைப்பற்றினர். கடந்த சில நாள்களுக்கு முன்பு, இலங்கைக்கு கடத்த இருந்த மெத்தாம்பெட்டமைன் போதை பொருளை, மதுரை ரயில் நிலையம் மற்றும் சென்னை கொடுங்கையூர் குப்பை கிடங்கில் இருந்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சில சமயங்களில், கடத்தல்காரர்கள் ரசாயனங்கள் மற்றும் மருந்துகள் என்ற பெயரில் போதைபொருள்களை ஏற்றுமதி செய்ய முயற்சித்துள்ளனர். உதாரணமாக, ஜனவரியில், பாங்காக்கிற்கு அனுப்பப்பட்ட ஏற்றுமதி சரக்கில் 50 கிலோ கேடாமைன் இருந்தது கண்டறியப்பட்டது.

நடப்பு நிதியாண்டில், 8,224 கிலோ போதை பொருள்கள் DRI-ஆல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக 109 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 49 கிலோ ஹெராயின் (ரூ. 365 கோடி), 236 கிலோ மெபெட்ரான் (ரூ. 357 கோடி), 136 கிலோ மெத்தம்பெட்டமைன் (ரூ. 275 கோடி) ஆகியவை அடங்கும்.

4 தங்கம், ஆபரணங்கள் மற்றும் பணம் கடத்தல்

மருதாணி பாக்கெட்டுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.1.1 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சியை கொல்கத்தா விமான நிலையத்தில் DRI கைப்பற்றியுள்ளது. டெல்லியில் உள்ள விமான நிலைய கூரியர் முனையத்தில் ரூ. 94 கோடி மதிப்பிலான சவுதி ரியால்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவை துபாய்க்கு அனுப்பப்பட்ட "பெண்கள் லெஹெங்காக்கள்" ஏற்றுமதி சரக்குகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இந்த ஆண்டு ஜனவரியில், ஹைதராபாத் மற்றும் பெங்களூரு விமான நிலையங்களில் இருந்து துபாய்க்கு பயணம் செய்த நான்கு பயணிகளிடம் இருந்து கிட்டத்தட்ட 14 கோடி ரூபாய் மதிப்புள்ள வைரங்களை DRI பறிமுதல் செய்தது. இவை சாக்லேட் பாக்கெட்டுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

லென்ஸ், கார் இன்ஜின் பிஸ்டன்கள், அச்சு தயாரிக்கும் இயந்திரங்கள், உணவு பதப்படுத்தும் இயந்திரங்கள் மற்றும் வீட்டுப் பொருட்கள் போனறவற்றில் இருந்து பல்வேறு சந்தர்ப்பங்களில் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

துபாய் மற்றும் பாங்காக்கில் குறைந்த விலையில் கிடைக்கும் தங்கம், கடல் வழியாக இந்தியாவுக்குள் கடத்துவதற்காக இலங்கை போன்ற அண்டை நாடுகளுக்கு அடிக்கடி கொண்டு செல்லப்படுகிறது. பல சந்தர்ப்பங்களில், இலங்கையில் இருந்து தங்கம் கொண்டு வரப்பட்டு, நடுக்கடலில் உள்ள உள்ளூர் மீன்பிடி படகுகளுக்கு மாற்றப்படுகிறது. இது இந்தியாவின் கிழக்கு கடற்கரையோரத்திற்கு கொண்டு வரப்படுகிறது. மண்டபம் மற்றும் வேதாளை கடற்கரை போன்ற ஒப்பீட்டளவில் குறைவான கண்காணிப்பு மற்றும் அமைதியான கடலோரப் பகுதிகளில் படகுகள் மூலம் பல கடத்தல் நடவடிக்கைகள் நிகழ்கின்றன என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது போல் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

- Aggam Walia

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Smuggling
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment