SPs alliance with Rajbhars SBSP : செவ்வாய்க்கிழமை அன்று சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், ஓம் பிரகாஷ் ராஜ்பாரின் சுஹெல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியுடன் ( Suheldev Bharatiya Samaj Party (SBSP)) கூட்டணியை உறுதி செய்தார். எஸ்.பி.எஸ்.பி கட்சி முன்பு பாஜகவுடன் கூட்டணியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. உத்தரபிரதேசத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் இவர்களின் கூட்டணி என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதை விளக்குகிறது இந்த சிறப்பு செய்தித் தொகுப்பு
ராஜ்பாரும் பாஜகவும்
2017ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், 403 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட உத்திரப் பிரதேசத்தில் 325 இடங்களில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்றன. 8 தொகுதிகளில் போட்டியிட்ட எஸ்.பி.எஸ்.பி கட்சி நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றார். அன்றைய பாஜக தலைவர் அமித் ஷா மௌ தொகுதியில் ராஜ்பாருடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதே பகுதியில் செவ்வாய்க்கிழமை அன்று அகிலேஷ் யாதவ் பிரச்சாரம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜ்பார் காஸிப்பூரில் அமைந்துள்ள ஜஹூராபாத்தில் வெற்றி பெற்று முதன்முறையாக எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டார். பிறகு பிற்படுத்தப்பட்டோர் நலவாரிய அமைச்சராக அவர் நியமனம் செய்யப்பட்டார். காஸிப்பூர் மாவட்ட ஆட்சியர் சஞ்சய் குமார் காத்ரியை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து அவர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார்.
ராஜ்பார் அப்போது, ”அமைச்சராக இருந்த போதும் அதிகாரிகள் அவருடைய கருத்துகளை ஏற்றுக் கொண்டு செயல்படவில்லை. எனவே மக்களுக்கு பதில் சொல்லும் நிலைக்கு நான் ஆளானேன்” என்று குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து பேசினார். ஆனாலும் இறுதி முடிவு எட்டப்படாத காரணத்தால் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார்.
கிழக்கு உ.பி.யின் வாக்கு வங்கி
ராஜ்பார் இனத்தினர் உ.பி. மக்கள் தொகையில் 3 முதல் 4% உள்ளனர். இது மிகவும் குறைவான மதிப்பாக இருக்கலாம். ஆனால் கிழக்கு உ.பியில் இவர்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். அதாவது அந்த பிராந்தியத்தில் உள்ள மக்கள்தொகையில் அதிக விகிதாச்சாரம் கொண்டுள்ளனர். மேலும் கிழக்கு உ.பியில் பல பகுதிகளில் வெற்றிக்கான வாய்ப்பாக இந்த சமூகத்தினர் உள்ளனர். , SBSP இன் ஆதரவுத் தளம் ராஜ்பார் சமூகத்திற்குள்ளே மட்டும் இல்லை. ஆனால் மிகவும் பின்தங்கிய பிரிவினரான சௌஹான், பால், ப்ரஜாபதி, விஸ்வகர்மா, பார், மல்லா போன்றோர் மத்தியிலும் இக்கட்சியின் ஆதரவு தளம் அதிகமாக உள்ளது.
கிழக்கு உ.பியில் உள்ள 18 மாவட்டங்களில் உள்ள 90 தொகுதிகளில் 25 முதல் 30 தொகுதிகளில் ராஜ்பாரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அவர்களின் எண்ணிக்கை ஒரு சில தொகுதிகளில் 1 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. மாநிலம் முழுவதும் வெற்றியை குவித்த பாஜக கிழக்கு உ.பியில் குறிப்பிடத்தக்க வளார்ச்சியை கண்டது. 2012ம் ஆண்டில் 14 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜக 2017ம் ஆண்டு 72 தொகுதிகளில் வெற்றியை கைப்பற்றியது. சமாஜ்வாடி கட்சி இந்த பகுதிகளில் 52 தொகுதிகளில் இருந்து 9 தொகுதிகளாக வெற்றியை குறைவாக பதிவு செய்தது. . SBSP தானே அதன் செல்வாக்கு பரந்த அளவில் பரவி 150 தொகுதிகளில் உள்ளதாக கூறுகிறது. இதனால் தான் 146 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற உறுதுணையாக இருந்தது என்றும் கூறியது. எவ்வாறாயினும், எஸ்பிஎஸ்பியின் வாக்குகள் பிஜேபிக்கு மாற்றப்பட்டது போல் எஸ்பிக்கு மாற்றப்படுமா என்பது இன்னும் பதிலற்ற கேள்வியாக உள்ளது.
ராஜ்பாரும் சமாஜ்வாடி கட்சியும்
மிக சமீபம் வரை ராஜ்பார் பகிதாரி சங்கல்ப் மோர்ச்சாவை வழி நடத்தினார். வருகின்ற தேர்தலில் போட்டியிடும் வகையில் சிறு கட்சிகளின் கூட்டணியாக அது செயல்பட்டு வந்தது. டிசம்பர் மாதம் ராஜ்பார் அஸாசுதீன் ஓவைஸியின் எ.ஐ.எம்.ஐ.எம். கட்சியும் மோர்ச்சாவில் இணையும் என்று கூறினார். அதே போன்று பீம் ஆர்மியின் தலைவர் சந்திரசேகருடனும் பேச்சுவார்த்தை நடத்தினார். அகிலேஷின் மாமா பிரகதிஷீல் சமாஜ்வாடி கட்சித் தலைவர் ஷிவ்பால் யாதவுடனும் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறினார்.
ஆனால் இந்த தலைவர்கள் யாரும் செவ்வாய்க்கிழமை அன்று மௌவில் நடைபெற்ற பேரணியில் ராஜ்பாருடன் எஸ்.பி. தலைவரை சந்திக்கவில்லை. இது பகிதாரி சங்கல்ப் மோர்ச்சா சிதைவதற்கான சாத்தியமான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.
ராஜ்பாரின் மகனும் அக்கட்சியின் பொதுச்செயலாளருமான அருண் ராஜ்பார் எஸ்.பி.யின் வெற்றியை தங்கள் கட்சி உறுதி செய்யும் என்று அவர் கூறினார்.
பல மாவட்டங்களில் யார் வெற்றி பெறுவது முடிவு செய்யும் கட்சியாக தங்களின் கட்சி அமையும் என்றும் அவர் கூறினார். வாரணாசி, காஸிபூர், மௌ, பாலியா, அஸம்கர், ஜான்பூர், தியோரியா, கோரக்பூர், பஸ்தி, கோண்டா, சித்தார்த் நகர், சந்த் கபீர் நகர், மஹராஜ்கஞ்ச், மிர்சாபூர், அயோத்தி (2017ம் தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற 72 தொகுதிகளில் 18 தொகுதிகள் இவை) அத்துடன் ஷ்ரவஸ்தி, பஹ்ரைச், குஷிநகர் மற்றும் சுல்தான்பூர் ஆகிய 22 மாவட்டங்களை அருண் ராஜ்பார் பட்டியலிட்டார்.
இந்த முறை பாஜக 100க்கும் குறைவான தொகுதிகளில் தான் வெற்றி பெறும். அவர்களின் கட்சி ஆய்வு முடிவுகளும் இதையே தெரிவிக்கின்றன. எங்களின் வாக்குகள் நிச்சயமாக எஸ்.பிக்கு மாறும். அகிலேஷ் யாதவ் அடுத்த முதல்வராவார் என்று அருண் ராஜ்பார் கூறினார். ’
மூத்த சமாஜ்வாடி கட்சித் தலைவர் இது குறித்து பேசும் போது, பாஜக தற்போதைய பிற்படுத்தப்பட்டோர் நலவாரிய அமைச்சர் அனில் ராஜ்பாரை அந்த இனத்தின் பிரதிநிதியாக சித்தகரிக்க பாஜக முயற்சி செய்தாலும், அவருடைய பிம்பம் ஓம் பிரகாஷூடன் ஒப்பிடும் அளவிற்கு உயர்வாக இல்லை என்று கூறினார்.
எஸ்.பி.எஸ்.பி. தலைவரை தவிர, இரண்டு ராஜ்பார் தலைவர்கள், முன்னாள் பகுஜன் சமாஜ் கட்சியின் ராம் அச்சல் ராஜ்பார் மற்றும் முன்னாள் சபாநாயகர் சுகதேவ் ராஜ்பாரின் மகன் கமலகாந்தும் தற்போது சமாஜ்வாடி கட்சியில் தங்களை இணைத்துள்ளனர். இது பிற்படுத்தப்பட்ட வகுப்பினரிடமிருந்து அதிக வாக்குகளை ஈர்க்கும் கட்சியின் நம்பிக்கையை உயர்த்துகிறது.
SBSP இன் கணிப்பு வேறுபட்டிருக்கலாம், ஆனால் அவை எங்களுக்கு 25-30 இடங்களை வெல்ல உதவும் என்பதில் சந்தேகமில்லை என்று எஸ்.பி. தலைவர் ஒருவர் கூறினார். ஏற்கனவே கேசவ் தேவ் மவுரியாவின் தலைமையில் உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைப் பற்றி பேசும் மற்றொரு கட்சியான மகான் தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது சமாஜ்வாடி கட்சி. பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரஸ் போன்ற பெரிய கட்சிகளிடம் இருந்து விலகி இந்த சிறிய கட்சிகளுடன் அகிலேஷ் யாதவ் கூட்டணி அமைத்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.