How the Idukki landslide happened : ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி பெட்டிமுடியில் இரவு 10:45 மணிக்கு நிலச்சரிவு ஏற்பட்டது. மூணாறு கிராம பஞ்சாயத்தின் கீழ் வரும் ராஜமலை பகுதியில் அமைந்துள்ளது இந்த கிராமம். கண்ணன் தேவன் ஹில்ஸ் ப்ளாண்டேசன் கம்பெனியின் ஊழியர்கள் இங்கு வாழ்ந்து வந்தனர். இந்த பகுதி எரவிகுளம் தேசிய பூங்காவின் ஒரு பகுதியாகும். சோலா காட்டுப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக உருண்டு வந்த பாறைகள், சேற்று மண் அனைத்தும் பெட்டிமுடியில் விபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒற்றை அறையை கொண்ட வீடுகள் இரண்டாக வரிசைப்படுத்தப்பட்டு ஒன்றை ஒன்று பார்ப்பது போல் உருவாக்கப்பட்டிருந்தது. ஒன்றரை கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்து வந்த பாறைகள் மற்றும் சேற்றால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
விபத்து பகுதி
கேரளாவின் புவியியல் துறைப்படி இந்த பகுதி 40° கோணத்தில், சாய்வான பகுதியில் அமைந்திருக்கும் ஒன்றாகும். 20 ° கோணத்திற்கு மேல் அமைந்திருக்கும் எந்த ஒரு சாய்வான பகுதியிலும் தொடர் மழை காரணமாக பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. மேலும் இந்த மண்ணில் மணல் அதிகமாக உள்ளது. அதிகப்படியான நீரால் அது மேலும் தளர்வடைந்து விபத்திற்கு ஆளாகியுள்ளது. இடுக்கியில் மாநில பேரிடர் குழு மேற்கொண்ட ஆய்வின் படி, அதிக அளவில் பெய்த மழையால் நிலத்தின் தன்மை மாறியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. அதிக அளவு களிமண் கொண்ட பகுதி அதிக நீரை தேக்கிக் கொண்டும் குறைவாகவே வடிகால் ஆகும் தன்மையும் கொண்டவை. இது அந்த பகுதியின் மண்ணில் அதிக அளவு நீர் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
மனிதர்களின் தலையீடுகள் குறிப்பாக சரிவுகளில் அமைக்கப்பட்டிருக்கும் குடியிருப்பு பகுதிகளால் ஏற்ப்டும் அழுத்தங்கள் மற்றும் இருப்பக்கங்களிலும் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமல் இருந்ததும் இந்த பகுதியை விபத்து ஏற்படும் பகுதியாக மாற்றியுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் அதனால் ஏற்படும் நிலச்சரிவின் காரணமாக அங்கே ஆறுகள் தங்களின் பாதைகளை மாற்றியுள்ளது. இதுவும் கூட நிலச்சரிவிற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை
இங்கு 83 நபர்கள் 30 வீடுகளில் வசித்து வந்தனர். அவர்களில் 12 நபர்கள் அருகில் இருக்கும் குடியிருப்பு பகுதி நபர்களால் காப்பாற்றப்பட்டனர். இதுவரை 49 நபர்கள் இங்கு மீட்கப்பட்டுள்ளனர். மற்ற பகுதிகளில் இருந்து வந்த நபர்களும் இங்கு தங்கியிருந்ததால் நிறைய நபர்களை காணவில்லை என்றூ கூறுகின்றனர். குறைந்த அளவிலான நபர்கள் மட்டுமே இதுவரை உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 31 நபர்களும் இந்த விபத்தில் சிக்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எரவிக்குளம் தேசிய பூங்காவில் தற்காலிக பணியாளர்களாக பணியாற்றிய 6 நபர்கள் மற்றும் 19 பள்ளி செல்லும் குழந்தைகளின் நிலை என்னவென்று இதுவரை தெரியவில்லை.
கடந்த காலங்களில் ஏற்பட்ட நிலச்சரிவுகள்
2019ம் ஆண்டு மலப்புரத்தின் கவலப்பாரா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 59 நபர்கள் உயிரிழந்தனர். புதுமலாவிலும் வயநாட்டிலும் ஏற்பட்ட நிலச்சரிவில் 17 நபர்கள் கொல்லப்பட்டனர்.
2018ம் ஆண்டு இடுக்கியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 60 நபர்கள் உயிரிழந்தனர். தமரசேரி, கோழிக்கோட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 14 நபர்களும், திருச்சூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவரும் உயிரிழந்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil