பிரதமரின் பாதுகாப்பு எப்படி திட்டமிடப்படும்? தவறுகளுக்கு யார் பொறுப்பு?

பஞ்சாபில் புதன்கிழமை நடைபெற்ற போராட்டத்தால் பிரதமர் மோடியின் கான்வாய் மேம்பாலத்தில் நிறுத்தப்பட்டது. பிரதமரின் பாதுகாப்பு திட்டமிடலில் என்ன நடக்கிறது? எந்த ஏஜென்சிகள் ஈடுபட்டுள்ளன, திட்டத்தில் மாற்றம் ஏற்பட்டால் என்ன நடக்கும்? போன்ற பல்வேறு தகவல்களை இச்செய்தி தொகுப்பில் காணலாம்

பஞ்சாப் மாநிலம் பெரோஸ் மாவட்டத்தில் உள்ள மேம்பாலம் ஒன்றில் 15 நிமிடங்களுக்கு மேலாக பிரதமரின் பாதுகாப்பு கான்வாய் நிறுத்த வைக்கப்பட்ட நிலையில், அங்கு பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடு குறித்து விளக்கமளிக்க மாநில அரசுக்கு மத்திய உள் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

பிரதமரின் பாதுகாப்பு எப்படி திட்டமிடப்படுகிறது?

பிரதமரின் பாதுகாப்பானது மத்திய அமைப்புகளும், மாநில காவல் துறையும் இணைந்து திட்டமிடும் பணியாகும். இதற்காகவே, SPG தரப்பில் பிரத்யேகமாக ப்ளூ புக் என்ற நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. பிரதமரின் வருகைக்கு மூன்று நாள்களுக்கு முன்னரே, பாதுகாப்பிற்குப் பொறுப்பான SPG (சிறப்பு பாதுகாப்புக் குழு), சம்பந்தப்பட்ட மாநிலத்தின் புலனாய்வுப் பணியக அதிகாரிகள், மாநில காவல்துறை உட்பட உயர் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் என அனைவரிடமும் பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை நடத்துவார்கள். பிரதமரின் ஒவ்வொரு நிமிடம் குறித்தும் விரிவாக கலந்தாலோசிக்கப்படும். தொடர்ந்து, பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடு நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.

மீட்டிங்கில் பேசப்பட்டது என்ன?

பொதுவாக பிரதமரின் பயணத்திட்டத்தில் அவரது கடைசி நிமிட விவரம் வரை குறிப்பிடப்பட்டிருக்கும். பிரதமர் எப்படி வருவார் (விமானம், சாலை அல்லது ரயில் மூலம்) மற்றும் அவர் தரையிறங்கியவுடன், நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு (பொதுவாக ஹெலிகாப்டர் அல்லது சாலை மூலம்) எப்படிச் செல்வார் என்பது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

மேலும், மத்திய அமைப்புகள் மற்றும் உள்ளூர் உளவுத்துறையின் தகவல்கள் குறித்து கலந்துரையாடப்படும். அரங்கின் நுழைவு மற்றும் வெளியேறுதல் பகுதிகளின் பாதுகாப்பு அம்சங்கள், அரங்கிற்கு வருபவர்களை சோதனை செய்தல், மெட்டல் டிடெக்டர் வைப்பது குறித்து பேசப்படும். இதுதவிர, மேடையின் கட்டமைப்பு மற்றும் நிலைத்தன்மை குறித்தும் விவாதிக்கப்படும்.

பிரதமர் நரேந்திர மோடியின் பல வருகைகளின் பாதுகாப்பை நிர்வகித்த மூத்த போலீஸ் அதிகாரி கூறுகையில், ” குறிப்பிட்ட இடத்தின் தீ பாதுகாப்பும் தணிக்கை செய்யப்படும். முக்கியமாக, அன்றைய தினத்தின் வானிலை அறிக்கை கருத்தில் கொள்ளப்படுகிறது.

ஒருவேளை பிரதமர் படகில் செல்ல வாய்ப்பு இருந்தால், படகின் செயல்பாடு மற்றும் பாதுகாப்பு சான்றிதழ்கள் ஆராயப்படும். பிரதமர் செல்லக்கூடிய பாதையில் புதர்கள் இருந்தால், அவற்றை வெட்டும்படி எஸ்பிஜி அறிவுறுத்தலாம். பிரதமர் செல்லும் பாதை வரைபடமாக்கப்பட்டு,அங்கு பாதுகாப்பிற்காக அதிக அதிகாரிகளை நியமிக்க அறிவுறுத்தப்படும்” என்றார்.

மாநில காவல்துறையே பொறுப்பு

எஸ்பிஜியில் பணியாற்றிய முன்னாள் உபி டிஜிபி ஓபி சிங் கூறுகையில், “பிரதமருக்கு நெருங்கிய பாதுகாப்பை மட்டுமே எஸ்பிஜி வழங்கிறது. பிரதமர் எந்த மாநிலத்திற்கு செல்கிறாரோ, அங்கு ஒட்டுமொத்த பாதுகாப்பை உறுதி செய்வது மாநில காவல் துறையின் பொறுப்பாகும். உளவுத்துறை சேகரிப்பு, வழித்தடத்தை கிளியர் செய்தல் மற்றும் கூட்டத்தை நிர்வகித்தல் போன்ற பொறுப்புகள் மாநில காவல் துறைக்கு உள்ளது” என்றார்.

எந்தவொரு அச்சுறுத்தலைப் பற்றியும் தகவல்களை வழங்குவது மத்திய புலனாய்வு அமைப்புகள் பொறுப்பாகும். எவ்வாறாயினும், பாதுகாப்பு எவ்வாறு ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்பது குறித்த இறுதி முடிவை எடுப்பது SPG தான்.

மாநில காவல்துறை எவ்வித இடையூறு இல்லை என கூறி அனுமதி வழங்கும் வரை பிரதமர் புறப்பட எஸ்பிஜி அனுமதிக்காது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்னைப்பர்களை நிறுத்த வேண்டும்

அதே சமயம், மாநில காவல் துறையும் நாச வேலைகள் நடக்காமல் தடுத்திட சோதனைகளை மேற்கொள்ள வேண்டும். பாதுகாப்பிற்கு சாலையில் போலீஸை நிற்க வைப்பது மட்டுமின்றி, மேல்தளங்களில் ஸ்னைப்பர்களையும் வைக்க வேண்டும் என தகவல்கள் கூறுகிறது.

மற்றொரு அதிகாரி கூறுகையில், ” பொதுக் கூட்டங்கள், பேரணிகள் மற்றும் சாலை நிகழ்ச்சிகளின் போது, காவலர்களைத் தவிர, ஒரு எஸ்பி பாதுகாப்புக்காக சாதாரண உடையில் வளம்வருவார். சில சமங்களில் போலீஸ் உடையால் ஏற்படும் தேவையில்லாத குழப்பத்தை தலைவர்கள் விரும்புவது இல்லை. இருப்பினும், பாதுகாப்பு வழங்குவது காவல் துறை கடமை என்பதால், பேரணியின் போது, சாதாரண உடையிலும், சில சமயங்களில் கட்சிக்காரர்கள் போல் வேஷம் போட்டுக் கொண்டும் பணியமர்த்தப்படுகிறார்கள்” என்றார்.

திடீரென்று திட்டங்கள் மாறினால் என்ன ஆகும்?

எப்போதும், ஒரு பேக்அப் பிளேன் திட்டமிடப்படும். குறிப்பாக வானிலையின் திடீர் மாற்றத்தால், குறிப்பிட்ட இடத்திற்கு ஹெலிகாப்டரில் செல்ல முடியாத பட்சத்தில், சாலை மார்க்கமாக அழைத்து செல்லும் வகையில் திட்டமிடல் இருக்கும். அவ்வழி கிளியர் செய்யப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கும்.

இதற்கு யார் பொறுப்பு?

ஹெலிகாப்டர் விமானிக்கு 1,000 மீ தொலைவிற்கு தெளிவான பார்வைதிறன் இல்லையென்றால், சாலை வழி பயணம் மேற்கொள்வது வழக்கமான ஒன்றுதான். குளிர்காலங்களில், பனிமூட்டம் காரணமாக பிரதமர் பல நேரங்களில் சாலையில் செல்ல வேண்டியிருக்கும். பாதைகள் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு பாதுகாப்பு அளிக்கப்படும். எதாவது காரணத்தால் பாதை தெளிவாக இல்லாதது கண்டறியப்பட்டாலும், மாநில காவல்துறை அனுமதி வழங்கவில்லை என்றாலும், பிரதமரின் வருகை ரத்து செய்யப்படுகிறது.

போராட்டம் நடந்தால் என்ன செய்யப்படும்?

எந்தவொரு விஐபி வருகைக்கும் எதிராக போராட்டம் நடைபெறுவது முக்கியமான அச்சுறுத்தல் ஆகும். அதனை தடுத்திட, மாநில காவல் துறையுடன் முன்கூட்டியே விவாதிக்கிறது. பொதுவாக, உள்ளூர் புலனாய்வுப் பிரிவினரால் எந்தக் குழுக்கள் போராட்டத்தைத் திட்டமிடுகிறார்கள் என்ற தகவல் வழங்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேசமயம், சந்தேகத்திற்கிடமான நபர்கள் அல்லது சாத்தியமான எதிர்ப்பாளர்களின் பட்டியல் உள்ளூர் காவல்துறையிடம் இருக்கும். அதை வைத்து, அவர்களை முன்க்கூட்டியே கைது செய்யலாம். திட்டமிட்டு போராட்டம் நடத்தினால், அதை தடுத்து நிறுத்த முடியாது, அந்த வழி தவிர்க்கப்படும்.

பஞ்சாப்பில் நடந்தது என்ன?

பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, பிரதமர் தனது திட்டத்தை திடீரென மாற்றியதாகக் கூறியுள்ள நிலையில், பிரதமரின் திட்டம் முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டதாக உள் துறை அமைச்சகம் கூறியுள்ளது. பஞ்சாப் டிஜிபி, பிரதமர் பயணத்திற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதிப்படுத்திய பிறகு, சாலை வழியாக பயணம் மேற்கொள்ளப்பட்டது என அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓபி சிங் கூறுகையில், ” பஞ்சாப்பைப் பொறுத்தவரை, மோசமான வானிலை காரணமாக பிரதமர் சாலை வழியாகப் பயணம் செய்யத் தேர்வுசெய்தபோது, ​​முழு வழியையும் சரிசெய்து, ஸ்னைப்பர்களை கூரைகளில் வைப்பது உள்ளூர் காவல்துறையின் பொறுப்பாகும். மாநில காவல் துறையிடமிருந்து அனுமதி வரும்வரை, எஸ்பிஜி பிரதமர் கான்வாய் செல்ல அனுமதி வழங்காது.

இந்த நிகழ்வில், பிரதமர் 15 நிமிடங்களுக்கு மேல் ஒரு மேம்பாலத்தில் நிற்க வைக்கப்பட்டுள்ளார். அங்கிருந்து மாற்றுவழியில் செல்வதற்கான வாய்ப்புகளும் இல்லை. மேம்பாலத்தின் நுழைவு மற்றும் வெளியேறலைப் பாதுகாக்க உள்ளூர் காவல்துறை தவறிவிட்டது என்பது தான் உண்மை. பஞ்சாப் என்பது பாகிஸ்தானின் எல்லையை ஒட்டிய மாநிலம் என்பதை நினைவில் கொள்வோம். இது ஒரு கடுமையான பாதுகாப்பு குறைபாடு” என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: How the prime minister security is planned by spg

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com