/tamil-ie/media/media_files/uploads/2021/05/covid-43.jpg)
ஒரு பராமரிப்பாளர் என்பவர் வீட்டிலேயே இருக்க வேண்டும். கோவிட் நோயாளிகளின் ஆரோக்கியத்தை கண்காணிக்க வேண்டும். உங்களுக்கு தொற்று பாதிக்காத அளவில் ஒரு கோவிட் நோயாளிக்கு எவ்வாறு பராமரிப்பவராக இருக்க வேண்டும் என்பதை இந்தியன் எக்ஸ்பிரஸ் இங்கே வழிகாட்டுகிறது.
யார் பராமரிப்பாளராக இருக்க முடியும்?
தகுதியுள்ள ஆண் பெண் எவரும் பரமரிப்பாளராக இருக்கலாம். ஒரு கொரோனா நோயாளியை வீட்டு தனிமையில் 24 ×7 மணி நேரமும் கவனித்துக்கொள்ளலாம். கொரோனா நோயாளியை பராமரிப்பதற்கு ஒரு குடும்ப உறுப்பினராக இருக்கலாம். ஒருவேளை குடும்ப உறுப்பினர் ஒருவர் கிடைக்கவில்லை என்றால் அந்த நபர் தன்னார்வலராக இருக்கலாம். பராமரிப்பாளர்கள் லேசான அறிகுறியுள்ள/அறிகுறியற்ற நோயாளிகளை கவனித்துக் கொள்ளலாம். அவர் மருத்துவமனை அல்லது சிகிச்சையளிக்கும் மருத்துவருடன் தொடர்புகொள்வதற்கு ஒரு இணைப்பாளராக இருக்க வேண்டும்.
பராமரிப்பாளர்களுக்கான வழிகாட்டுதல்கள் என்ன?
பராமரிப்பாளர்கள் கோவிட் நோயாளியுடன் ஒரே அறையில் இருக்கும்போது மூன்று மடிப்பு முகமூடிகளை அணிய வேண்டும். வியர்வை அல்லது சளி காரணமாக முகக்கவசம் அழுக்காகிவிட்டாலோ அல்லது ஈரமாகிவிட்டாலோ முகக்கவசம் உடனடியாக மாற்றப்பட வேண்டும். பராமரிப்பாளர்கள் எப்போதும் கைகளைக் கழுவி சுகாதாரத்துடன் பராமரிக்க வேண்டும். அதாவது கைகளை குறைந்தபட்சம் 40 விநாடிகள் சோப்பு போட்டு தண்ணீரில் கழுவ வேண்டும். நோயாளிக்கு உணவைக் கொடுப்பதற்கு முன்னும் பின்னும், உடல் வெப்பநிலை, ஆக்ஸிஜன் அளவு போன்றவற்றை அளவிட வேண்டும். ஒரு கொரோனா நோயாளி பராமரிப்பை மேற்கொள்ளும்போது, ஒருவர் அவருடன் தொடர்பு கொண்டால், கை கழுவுவது மட்டுமில்லாமல், ஆல்கஹால் சார்ந்த ஹேண்ட் சானிடைசரைப் பயன்படுத்தி கை சுகாதாரம் பராமரிக்கப்பட வேண்டும். பராமரிப்பாளர்கள் தங்கள் ஆரோக்கியத்தை ஒரு வழக்கமான அடிப்படையில் கண்காணிக்க வேண்டும். காய்ச்சல், இருமல், சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக பரிசோதிக்கப்பட வேண்டும்.
கோவிட் நோயாளிகளின் அறை மற்றும் பாத்திரங்களை பராமரிப்பாளர்கள் எவ்வாறு சுத்தம் செய்ய வேண்டும்?
கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளிகளுக்கு அவரது அறையிலேயே உணவு வழங்கப்பட வேண்டும். நோயாளி பயன்படுத்தும் பாத்திரங்கள்மற்றும் உணவுகளை கையுறை முகக்கவசம் அணிந்து சூடான நீரைப் பயன்படுத்தி சோப்பு / அல்லது துணிசோப்பை பயன்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும். ஒரு நோயாளி அறிகுறியற்றவராக இருந்தால், உறுதியான நிலையில் இருந்தால், அவன்/ அவள் - அவர்களுடைய பாத்திரங்களை அவர்களே கழுவலாம். கதவு கைப்பிடிகள், மேஜையின் மேற்பகுதி போன்ற அவர்கள் அடிக்கடி தொட்ட பொருட்கள் அவர்களுடன் தொடர்புடைய பொருட்கள் 1% சோடியம் ஹைபோகுளோரைட் கலவையைக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
கோவிட் தொற்று நோயாளிகளின் துணிகளை எவ்வாறு துவைப்பது?
சோடியம் ஹைபோகுளோரைட்டின் 1% கரைசலில் 30 நிமிடங்கள் துணிகளை அழுத்தி நனைக்க வேண்டும். இதனால், துணிகளை முழுமையாக சுத்திகரிக்க முடியும். பின்னர், அவற்றை முகக்கவசம், கையுறைகள் அணிந்து சோப்பு / துணி சோப்புகளைக் கொண்டு துவைக்கலாம் என்று பஞ்சாப்பின் கோவிட் நோடல் அதிகாரி டாக்டர் ராஜேஷ் பாஸ்கர் தெரிவித்தார்.
பராமரிப்பாளர்கள் தவிர்க்க வேண்டியவைகள்
கோவிட் 19 தொற்று நோயாளியின் உடல் திரவங்களுடன் குறிப்பாக வாய்வழியாக எச்சில், தும்மலின்போது வெளிப்படும் நீர் துளிளுடன் பராமரிப்பாளர்கள் நேரடி தொடர்பை தவிர்க்க வேண்டும். நோயாளிகளுடன் தனிப்பட்ட பொருட்களைப் பகிர்வதைத் தவிர்ப்பதோடு அவருடைய இடத்தில் இருந்து அசுத்தமான பொருட்களை வெளிப்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். உதாரணமாக, உணவுகள், பானங்கள், பயன்படுத்தப்பட்ட துண்டுகள் அல்லது படுக்கை துணி ஆகியவற்றை தொடுவதைத் தவிரக்க வேண்டும். பராமரிப்பாளர்கள் அறைக்கு வெளியே நோயாளிகளுக்கு உணவு வழங்க வேண்டும். நோயாளி படுக்கையில் இருந்து எழுந்திருக்கும் நிலையில் இல்லை என்றால், அவர் / அவள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட வேண்டும் அல்லது நோயாளியின் அறைக்கு ஒரு பராமரிப்பாளர் அடிக்கடி சென்று பார்த்துக்கொண்டிருப்பதைவிட உடனடியாக மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்” என்று டாக்டர் பாஸ்கர் கூறினார்.
பராமரிப்பாளரால் கண்காணிக்கப்பட வேண்டிய விஷயங்கள் என்ன?
பராமரிப்பாளர்கள் உடல் வெப்பநிலை, நாடித் துடிப்பு, ஆக்ஸிஜன் அளவு ஆகியவற்றை முறையாக ஒரு அட்டவணையில் பதிவு செய்து சிகிச்சையளிக்கும் மருத்துவரிடம் எதிர்கால குறிப்புக்காக வைத்திருக்க வேண்டும். இணை நோயுள்ள நோயாளிகளின் சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தத்தையும் ஒரு வழக்கமான அடிப்படையில் சரிபார்த்து பதிவு அட்டவணையில் குறிப்பிட வேண்டும். பராமரிப்பாளர்கள் நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் படுக்கும் முறையில் சுவாச பயிற்சிகளில் உதவ வேண்டும். நோயாளியை உடனடியாக மருத்துவமனைக்கு மாற்றலாமா வேண்டாமா என்பதை தீர்மானிக்க ஆக்சிஜன் அளவு குறைந்துவிட்டால் அல்லது வேறு ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் மருத்துவர்களுடன் தொடர்ந்து தொடர்பு கொள்ள வேண்டும். பராமரிப்பாளர்கள் நோயாளிகளுடைய தினசரி செயல்பாடுகளான, காலை உடற்பயிற்சிகள், தியானம், ஆவி பிடிப்பது, வாய் கொப்பளிப்பது சாப்பிடுவது, சரியான இடைவெளியில் மருந்துகள் கொடுப்பது ஆகியவற்றிலும் எல்லாவற்றிற்கும் மேலாக, போதுமான அளவு ஓய்வு பெற உதவ வேண்டும் என்று டாக்டர் பாஸ்கர் தெரிவித்தார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.