2022-23 ஆம் கல்வியாண்டு முதல், மாணவர்கள் ஒரே நேரத்தில் இரண்டு நிறுவனங்களில் வெவ்வேறு பட்டப்படிப்புகளை படிப்பதற்கான புதிய முறையை பல்கலைக்கழக மானியக் குழு நேற்று (ஏப்ரல் 12) அறிவித்துது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய யுஜிசி தலைவர் எம் ஜகதேஷ் குமார் , புதிய முறைக்கான வழிகாட்டுதல்கள் இன்று (புதன்கிழமை) வெளியிடப்படும். மாணவர்கள் பல்வேறு திறன்களை பெறுவதற்கு இந்த நடவடிக்கை அவசியம் என தெரிவித்தார்.
இது, மாணவர்கள் இளங்கலை, டிப்ளமோ மற்றும் முதுகலை நிலைகளில் இரண்டு திட்டங்களை ஒரே நேரத்தில் தேர்வு செய்ய அனுமதிக்கும். இரண்டு பட்டங்களையும் நேரடியாக சென்று கற்கலாம் அல்லது ஒன்று ஆஃப்லைனிலும் மற்றொன்று ஆன்லைனிலும் கற்கலாம் அல்லது இரண்டு படிப்பையும் ஆஃப்லைனிலே கற்றுக்கொள்ளலாம் என தெரிவித்தார்.
எந்த வகையான பாட காம்பினேஷன்களை மாணவர்கள் கற்கலாம்?
பேராசிரியர் குமார் கூறுகையில், கல்வி நிறுவனங்கள் சேர்க்கைக்கு வெவ்வேறு அளவுகோல்களை அமைப்பதால், அனுமதிக்கப்பட்ட பாடங்களின் சேர்க்கை ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறுபடும்.
உதாரணமாக, ஒரு மாணவர் ஏற்கனவே BSc கணிதப் பட்டப்படிப்பில் சேர்ந்திருக்கும் போது, வரலாற்றிலும் இளங்கலைப் பட்டப்படிப்பைத் தொடர விரும்பினால், அவர் சேர அனுமதிக்கப்படுவார். ஒரு பல்கலைக்கழகம் மாலை நேர ஷிப்டின் போது ஆஃப்லைனில் BCom திட்டத்தையும், காலை ஷிப்டின் போது முழுநேர BA திட்டத்தையும் வழங்கினால், ஒரு மாணவர் இரண்டு திட்டங்களிலும் சேரலாம் என்றார்.
படிப்பு முறைகளின் சாத்தியமான சேர்க்கைகள்?
புதிய நடைமுறை, ஒரு மாணவர் இரண்டு கல்வித் திட்டங்களைத் தொடர அனுமதிக்கிறது. ஒன்று முழுநேர நேரடியாகவும், மற்றொன்று திறந்த மற்றும் தொலைதூரக் கற்றல் முறையில் மேற்கொள்ளலாம். ஒரு பல்கலைக்கழகத்தில் நேரடி முறையில் ஒரு படிப்பிற்கும், ஆப்லைன் முறையில் மற்றொரு படிப்பிலும் சேரலாம். மாணவர்களுக்கான மூன்றாவது தேர்வு, அவர்கள் ஒரே நேரத்தில் இரண்டு பட்டங்களையும் ஆன்லைனிலே தொடரலாம்.
மாணவர்கள் இரண்டு படிப்பை தேர்ந்தெடுக்கும்பட்சத்தில், மாணவர்களும் கல்லூரிகளும் ஒரு திட்டத்திற்கான வகுப்பு நேரம், மற்றொன்றின் வகுப்பு நேரத்தின் போது இல்லாத வகையில் திட்டமிட வேண்டும். இந்த வழிகாட்டுதல்கள் எம்ஃபில் மற்றும் பிஎச்டி திட்டங்களுக்கு பொருந்தாது.
UGC மற்றும் இந்திய அரசாங்கத்தின் சம்மந்தப்பட்ட அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் மட்டுமே மாணவர்கள் தொலைதூர முறை/ஆன்லைன் முறையில் பட்டம் அல்லது டிப்ளமோ படிப்பை தொடர முடியும்.
சேர்க்கைக்கான தகுதி மற்றும் வருகை தேவை இருக்கிறதா?
ஒவ்வொரு திட்டத்திற்கான தகுதி அளவுகோல்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளவில்லை. தற்போதுள்ள UGC மற்றும் பல்கலைக்கழக விதிமுறைகளின் அடிப்படையில் சேர்க்கை நடத்தப்படும்.
ஒரு மாணவர் ஏதேனும் ஒரு துறையில் சிறப்புப் பட்டப்படிப்பைத் தொடர விரும்பு பட்சத்தில், குறைந்தபட்ச அளவுகோல்களின்படி அந்தப் பாடத்தைப் பற்றிய அடிப்படை அறிவு இருந்திட வேண்டும். இல்லையெனில், அந்தக் குறிப்பிட்ட படிப்பில் சேர முடியாமல் போகலாம். ஆனால் இது சம்பந்தப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தைப் பொறுத்தது தான்.
அனைத்து கல்வித் திட்டங்களிலும் மாணவர்கள் தேர்வெழுதுவதற்கு குறைந்தபட்ச வருகைத் தேவைகள் இருப்பதால், இந்தப் படிப்புகளுக்கான வருகை அளவுகோலை பல்கலைக்கழகங்கள் வகுக்க வேண்டும் அல்லது மாற்றியமைக்க வேண்டும். "யுஜிசி எந்த வருகைத் தேவைகளையும் கட்டாயப்படுத்தவில்லை, இவை பல்கலைக்கழகங்களின் கொள்கைகள்" என்று குமார் கூறினார்.
இந்த முடிவு நடைமுறைக்கு எவ்வளவு சாத்தியமானது?
மாணவர்கள் பலதரப்பட்ட கல்வியைப் பெறுவதற்கு, முடிந்தவரை நெகிழ்வுத்தன்மையை வழங்க முற்படும் தேசிய கல்வி கொள்கையை செயல்படுத்துவதன் பகுதியாக வழிகாட்டுதல்கள் உள்ளன என்று பேராசிரியர் குமார் கூறினார். இது சாத்தியமா என்ற கேள்விக்கு, நிச்சயமாக இது மாணவர்களின் திறனைப் பொறுத்தது" என்றார்.
மேலும் பேசிய அவர், ஒரு மாணவர் ஆஃப்லைன் பயன்முறையில் இரண்டு பட்டங்களைத் தொடர்வது கடினம் ஆனால் சாத்தியமற்றது அல்ல. உதாரணமாக, ஐஐடி டெல்லியில் பி டெக் படிக்கும் ஒரு மாணவர் மாலையில் ஜேஎன்யுவில் பிஏ பிரெஞ்ச் படிக்க விரும்பினால், சாலையின் குறுக்கே நடப்பதன் மூலம் அதை செய்ய முடியும். இரண்டு பட்டப்படிப்புகளில் ஒன்றை ஆன்லைனில் படித்தால் நடைமுறைச் சிக்கல்கள் எதுவும் இல்லை என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.