சமீபத்திய பல சம்பவங்களில், மோசடி செய்பவர்கள் போலிஸ் போல நடித்து, வீடியோ கால் வழியாக ‘டிஜிட்டல் கைது’ என்று மிரட்டி மக்களிடம் பணம் கேட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம்.
ஆங்கிலத்தில் படிக்க: How to stay safe from Skype scams, in which scammers impersonate police officers
மும்பையைச் சேர்ந்த கிஞ்சல் ஷா என்ற பெண்ணுக்கு அது ஒரு வழக்கமான நாளாக இருந்தது. அப்போது அவருக்கு ஒரு தானாக வரும் ஒரு போன் அழைப்பு வந்தது. அதில் அவரது தொடர்பு எண் இரண்டு மணி நேரத்திற்குள் செயலிழந்துவிடும். வாடிக்கையாளர் பராமரிப்பு நிர்வாகியிடம் பேசுவதற்கு ‘9’ஐ அழுத்துவதன் மூலம், புகார் தெரிவிக்க எளிய வழிமுறைகளைப் பின்பற்றுமாறு அந்த போன் கால் அழைப்பு அவருக்கு வழிகாட்டியது.
அதன்பிறகு, தனக்கு எதிராகப் பதிவுசெய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர்.க்கு ஒரு அறிக்கையை வழங்க வீடியோ காலில் பங்கேற்கும்படி கேட்கப்பட்டது. புகாருக்கான காரணத்தை அவர் கேட்டபோது, அவரது மாற்று எண்ணிலிருந்து யாரோ சில நபர்களுக்கு சட்டவிரோதமான செய்திகளை அனுப்புவதாகக் கூறப்பட்டது - அவர் இன்னொரு மொபைல் எண்ணை ஒருபோதும் வாங்கவில்லை அல்லது பயன்படுத்தவில்லை.
போலீஸ் அதிகாரி போல நடிக்கும் மோசடி நபரால் தான் ஏமாற்றப்படுவதை கிஞ்சல் இறுதியில் உணர்ந்தார். இருப்பினும், தாமதமாகப் புகாரளிக்கப்பட்ட பல்வேறு 'விர்ச்சுவல் பேட்ஜ்' ஸ்கைப் மோசடிகளில் அவருடைய புகாரும் ஒன்று. போலீஸ்காரர்கள் போல நடித்து அல்லது பிற சட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் போல நடித்து சந்தேக நபரை அணுகி, அவர் ஒரு குற்றத்திற்காக சிக்கலில் இருப்பதாகக் கூறுகிறார்கள். இத்தகைய மோசடிகள் எவ்வாறு செயல்படுகின்றன, அவர்களிடம் இருந்து பாதுகாபாக இருக்க நீங்கள் மனதில் கொள்ள வேண்டியவைகளை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
சில சந்தேகத்திற்கிடமான அறிகுறிகள் யாவை?
கிஞ்சலின் விஷயத்தில், மோசடி செய்பவர் அவருடன் தொலைபேசியில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பேசியிருக்கிறார். குற்றம் சாட்டப்பட்ட ஒருவருடன் எந்த ஒரு காவல்துறையினரும் அதிக நேரம் ஆன்லைன் வீடியோ அழைப்பில் பேச வாய்ப்பில்லை என்பதால் இது சந்தேகத்தை எழுப்பியது.
மேலும், கொடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்த புகாரைப் பதிவு செய்ய அருகிலுள்ள காவல் நிலையத்திற்குச் செல்ல அவர் முன்வந்தபோது, மோசடி செய்பவர் உடனடியாக அவரிடம் அப்படி செய்ய வேண்டாம் என்று கூறுகிறார். அதற்குப் பதிலாக வீடியோ அழைப்பில் உடனடி அறிக்கையை வழங்குமாறு கூறினார். மோசடி செய்பவர் வீடியோவில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அவர் ஒரு அறிக்கையை வழங்கும்போது தன்னைச் சுற்றி யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்த வீடியோவை பான் செய்யும்படி அவரிடம் கேட்டார். மேலும், அவரிடம் நடத்திய விசாரணையில் எந்த ஒரு பெண் அதிகாரியும் ஈடுபடாததால் சந்தேகம் அடைந்தார்.
இந்த உரையாடலில் அவருக்கு சந்தேகம் எழுந்தவுடன், கிஞ்சல் இந்த உரையாடலைப் பதிவு செய்யத் தொடங்கினார். போலீஸ் அதிகாரி என்று கூறிக்கொண்ட அந்த நபர் ‘டிஜிட்டல் கைது’ செய்ய முயன்றார். அவரிடம் ஆதார் மற்றும் பான் கார்டு விவரங்களைப் பகிரச் சொன்னபோது, கிஞ்சல் அழைப்பைத் துண்டித்தார்.
மோசடி அழைப்புகளிலிருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி?
இத்தகைய மோசடிகள் இரண்டு பொதுவான வழிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முதலாவதாக, மோசடி செய்பவர்கள் கூரியர் சேவையின் பிரதிநிதிகளாக காட்டிக்கொள்கிறார்கள், அவர்கள் வைத்திருக்கும் பார்சலில் சட்டவிரோதமான பொருட்கள் இருப்பதாகக் குற்றம் சாட்டுகின்றனர். மோசடியின் இலக்கு அவர்கள் இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது.
இரண்டாவது முறையில், மோசடி செய்பவர்கள் உள்ளூர் காவல்துறையாக மாறுவேடமிட்டு, மோசடி இலக்காக உள்ளா நபர்களுக்கு எதிரான வழக்குகளின் புனையப்பட்ட பட்டியலை முன்வைக்கின்றனர்.
நீங்கள் மனதில் கொள்ள வேண்டியவை:
1. முதலில் ‘நோட்டீஸ்’ கேளுங்கள்
உங்களுக்கு எப்போதாவது அத்தகைய அழைப்பு வந்தால், காவல்துறை உங்கள் மெய்நிகர் அல்லது உடல் இருப்பைக் கோரினால், ‘தோற்றம் பற்றிய அறிவிப்பை’ நீங்கள் கேட்கலாம். குற்றவியல் நடைமுறைச் சட்டப் (CrPC) பிரிவு 41ஏ-ன் படி, எந்த ஒரு போலீஸ் அதிகாரியும் எந்த ஒரு நபரின் பங்கேற்பு தேவையென்றால், அவர் அடிப்படையில் கைது செய்யப்பட வேண்டிய அவசியமில்லை என்றால், அந்த அதிகாரி அதற்கு இணையான ஒரு அறிவிப்பை வழங்கலாம்.
2. சட்ட அமலாக்க அமைப்பினர் பொதுவாக வீடியோ கால் செய்வதில்லை
காவல்துறை அதிகாரிகள் வீடியோ கால் செய்வது வழக்கமான நடைமுறை அல்ல. யாரேனும் ஒரு போலீஸ் அதிகாரியின் பெயரிலோ அல்லது காவல்நிலையத்தில் இருந்து வருவதாகக் கூறிக்கொண்டு உங்களை அழைத்தாலோ, அழைப்பை எடுக்காமல் இருப்பது முற்றிலும் நல்லது.
3. ஒரு பெண் போலீஸ் அதிகாரி விசாரணை
ஒரு பெண் எப்போதும் ஒரு பெண் போலீஸ் அதிகாரி முன்னிலையில் விசாரிக்கப்படுகிறார். நீங்கள் ஒரு பெண்ணாக இருந்து வீடியோ அழைப்பை எடுத்தால், மறுபுறம் பெண் இல்லை என்றால் உடனடியாக அழைப்பை துண்டித்துவிடுங்கள்.
4. தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பாக வைத்திருங்கள்
ஸ்கைப் அழைப்புகளின் போது தனிப்பட்ட அல்லது முக்கியமான தகவல்களைப் பகிர்வதைத் தவிர்க்க வேண்டும். கடவுச்சொற்கள், நிதித் தகவல், ஏதேனும், ரகசியத் தரவு அல்லது பணம் செலுத்துதல் போன்ற விவரங்களைப் பகிர்வதில் கவனமாக இருக்க வேண்டும்.
5. செல்போனில் ஸ்கிரீன்ஷாட் எடுங்கள் அல்லது உங்கள் ஸ்கிரீன் ரெக்கார்ட் செய்யுங்கள்
போலீஸ் அதிகாரி என்று கூறிக்கொள்ளும் நபரிடம் இருந்து உங்கள் செல்போனுக்கு ஸ்கைப் அழைப்பு வந்தால், நீங்கள் ஸ்கிரீன் ஷாட் எடுக்க வேண்டும். அல்லது உங்கள் செல்போனில் ஸ்கிரீன் ரெக்கார் செய்யுங்கள். நீங்கள் மோசடிக்கு ஆளானால் புகாரைப் பதிவுசெய்ய போதுமான ஆதாரம் உங்களிடம் உள்ளதா என்பதை உறுதிசெய்ய வேண்டும்.
6. உங்கள் உள்ளுணர்வை நம்புங்கள்
ஏதாவது தவறாகவோ அல்லது உண்மையாக இருக்க முடியாததாக இருந்தாலோ, உங்கள் உள்ளுணர்வை நம்பி எச்சரிக்கையுடன் தொடருங்கள். உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அழைப்பை துண்டிக்கவோ அல்லது உதவியை நாடவோ பயப்பட வேண்டாம்.
7. புகாரைப் பதிவு செய்ய அருகிலுள்ள காவல் நிலையத்திற்குச் செல்ல வேண்டும்
இதுபோன்ற மோசடிகளுக்கு நீங்கள் பலியாகிவிட்டீர்கள் என்று நீங்கள் நம்பினால், புகாரைப் பதிவு செய்ய அருகிலுள்ள காவல் நிலையத்திற்குச் செல்ல தயங்காதீர்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“