இன்றைய டிஜிட்டல் உலகில் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை சர்வசாதாரணம் ஆகிவிட்டது. சிறிய தொகையான 10 ரூபாயும் ஆன்லைனில் அனுப்புகின்ற காலத்தை பார்க்கமுடிகிறது. நகரப்புறங்களில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அசுர வளர்ச்சி அடைந்திருந்தாலும், கிராமப் பகுதிகளில் எளிய மக்களிடம் போதுமான அளவுக்கு அதிகரிக்கவில்லை. அப்பகுதிகளில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை அதிகரிக்க உதவும் வகையில், ரிசர்வ் வங்கி புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது.
உதாரணமாக நீண்ட தொலைவில் உள்ள கிராமம் ஒன்றில், பணம் மற்றும் இன்டர்நெட் வசதி இல்லாமல் சிக்கி கொள்ளும் சூழ்நிலையில் மொபைல் போன் அல்லது வேலட்டைப் பயன்படுத்தி ரூ.200 வரை ஏதாவது வாங்கலாம் என்பது தான் உண்மை. இதற்காகவே, ஆப்லைன் பரிவர்த்தனைக்கு ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கி உள்ளது.
ஆப்லைன் பரிவர்த்தனை என்பது, இண்டர்நெட் இணைப்பு அல்லது மொபைல் நெட்வொர்க் எதுவும் இல்லாமல், பணத்தை உடனடியாக அனுப்பவதற்கான வழியாகும்.
இது எப்படி சாத்தியம்?
இந்த ஆப்லைன் சேவை வாயிலாக, அதிகபட்சமாக ஒரு தடவையில் 200 ரூபாய் வரை அனுப்பலாம். அதன்படி, மொத்தமாக 2,000 ரூபாய் வரை அனுப்பலாம். பின்னர், பேலன்ஸ் இல்லாவிட்டால், மறுபடி ஆன்லைன் வாயிலாக பணத்தை நிரப்பி வைத்துக் கொள்ளலாம்.
இந்த ஆப்லைன் டிஜிட்டல் பேமெண்ட்-க்கு இண்டர்நெட் இணைப்பு அல்லது மொபைல் நெட்வொர்க் தேவையில்லை. இந்த ஆப்லைன் பரிமாற்றத்தில், பணத்தை, ‘பேஸ் டு பேஸ்’ எனும் பிராக்ஸி மோடில் கார்டு, வேலட், மொபைல் போன் போன்றவற்றின் வழியாக அனுப்ப முடியும். இத்தகைய பரிவர்த்தனைகளுக்கு ஓடிபி போன்ற எவ்வித கூடுதல் ஃகன்பார்மெஷன் தேவையில்லை.
வேர்ல்டுலைனின் தெற்காசியா மற்றும் மத்திய கிழக்கு தலைவர் தீபக் சந்தனானி பேசுகையில், “இது சிறிய தொகை கொண்ட பரிவர்த்தனைகளை ஏற்றுக்கொள்வதற்கு மட்டுமே என்றாலும், நாட்டின் ஒட்டுமொத்த நிதி உள்ளடக்கிய நோக்கங்களை அடைவதற்கான ஒரு பெரிய முயற்சியாகும்” என்றார்.
உடனடி எச்சரிக்கை கிடையாது
ஆன்லைனில் இல்லாமல், ஆப்லைனில் அனுப்புவதால், பரிவர்த்தனை குறித்த குறுஞ்செய்தி எச்சரிக்கை தாமதமாகவே கிடைக்கும். வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட ஒப்புதலைப் பெற்ற பின்னரே ஆப்லைன் கட்டண முறையை இயக்க முடியும்.
ஆப்லைன் மோடின் அவசியம் என்ன?
மொபைல் போன்கள், கார்டுகள், வேலட்கள் ஆகியவை மூலம் நடைபெறும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை கணிசமான வளர்ச்சியை கண்டுள்ளது.
இருப்பினும், கிராமப் புறங்களில் இன்டர்நெட் இணைப்பு இல்லாதது, வேகம் குறைவாக காணப்படுவது டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மேற்கொள்வதில் சிக்கலாக இருந்தது. எனவே, இந்த கார்டு,வேலட், மொபைல் போன் மூலம் நடைபெறவுள்ள ஆப்லைன் பணப்பரிவர்த்தனைகள், கிராமப் புறங்களில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
RapiPay Fintech இன் CEO நிபுன் ஜெயின் கூறுகையில், ” கிராமப்புறங்களில் இணைய இணைப்பு ஒழுங்கற்றதாக இருப்பது, டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு இடையூறாக உள்ளது. எனவே, ஆப்லைன் முறையில் சில்லறை டிஜிட்டல் கட்டணத்திற்கான RBI இன் புதிய முயற்சி மிகவும் தேவையானது என்றார்.
பைலட் திட்டம் வெற்றி
செப்டம்பர் 2020 முதல் ஜூன் 2021 வரையிலான காலகட்டத்தில், மூன்று பைலட்டுகள் திட்டத்தின் கீழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 1.16 கோடி ரூபாய்க்கு 2.41 லட்சம் அளவிலான சிறிய அளவிலான பரிவர்த்தனைகள்வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
குறிப்பாக தொலைதூரப் பகுதிகளில் இதற்கான தீர்வுகளை அறிமுகப்படுத்துவதற்கான வாய்ப்பு இருப்பதாக சோதனை முயற்சிகள் காட்டியது. பைலட் சோதனை வெற்றியடைந்ததை தொடர்ந்து. இப்போது நாடு முழுவதும் ஆஃப்லைன் முறையில் சில்லறை டிஜிட்டல் பேமெண்ட்டுகளை மேற்கொள்வதற்கான கட்டமைப்பை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil