இந்தியா, மாலத்தீவு மற்றும் இலங்கையை உள்ளடக்கிய இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் முத்தரப்பு கடலோரக் காவல் பயிற்சியான தோஸ்தியின் 15வது பதிப்பு மாலத்தீவில் நடந்து வருகிறது. இந்த பயிற்சிகள் தொடங்கப்பட்டு 2021 ஆம் ஆண்டுடன் 30 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்திய கடலோர காவல்படை கப்பல்களான ஐசிஜிஎஸ் வஜ்ரா மற்றும் ஐசிஜிஎஸ் அபூர்வா ஆகியன இலங்கை கடலோர காவல்படையான எஸ்எல்சிஜிஎஸ் சுரக்ஷாவுடன் இணைந்து நவம்பர் 20ஆம் தேதி தொடங்கிய ஐந்து நாள் பயிற்சிகள் இன்றுடன் நிறைவடைகின்றன.
இதுகுறித்து மாலத்தீவில் உள்ள இந்திய உயர் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியா-மாலத்தீவு-இலங்கை முத்தரப்பு பயிற்சியான தோஸ்தியின் நோக்கம் நட்புறவை மேலும் வலுப்படுத்துவதும், பரஸ்பர செயல்பாட்டு திறனை மேம்படுத்துவதும், ஒன்றுக்கொன்று செயல்படுவதும், மாலத்தீவுகள், இந்தியா மற்றும் இலங்கையின் கடலோர காவல்படைகளுக்கு இடையே ஒத்துழைப்பை உருவாக்குவதும் ஆகும்." மாலத்தீவு மற்றும் இலங்கை ஆகிய இரண்டு நாடுகளும், இந்தியாவுக்கும் அதன் கடல்சார் பாதுகாப்பு நலன்களுக்கும் வியூக முக்கியத்துவம் வாய்ந்தவை.
இந்த பயிற்சி ஏன் முக்கியமானது?
“இந்தியா மற்ற நாடுகளுடன் இதுபோன்ற ராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளது. சில சமயங்களில் பலதரப்பு, சில சமயங்களில் மும்முனை பயிற்சிகள் மேற்கொள்ளப்படும். பல ஆண்டுகளாக இந்தப் பயிற்சிகள் இருதரப்புப் பயிற்சிகளாக இருந்தன,” என்று மனோகர் பாரிக்கர் பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் பகுப்பாய்வு நிறுவனத்தின் (Institute for Defence Studies and Analyses) ஆராய்ச்சி ஆய்வாளர் டாக்டர் குல்பின் சுல்தானா கூறினார்.
1991 இல் முதன்முதலில் தொடங்கப்பட்டதிலிருந்து பல ஆண்டுகளாக இந்த பயிற்சிகள், இந்தியா மற்றும் மாலத்தீவு கடலோர காவல்படைகளை உள்ளடக்கிய இருதரப்பு பயிற்சியாக நடைபெற்று வந்தது. ஆனால், 2012 இல், இலங்கை முதன்முறையாக இந்தப் பயிற்சிகளில் இணைந்த பின்னர், இது ஒரு முத்தரப்பு பயிற்சியாக தொடர்கிறது.
இந்த பயிற்சிகள் கூட்டு செயல்பாடுகள் மற்றும் நாடுகளால் மேற்கொள்ளப்படும் பணிகளின் போது உதவுகின்றன, மேலும் இயங்குதன்மையை மேம்படுத்த உதவுகின்றன என்று டாக்டர் சுல்தானா indianexpress.com இடம் கூறினார். இந்தியப் பெருங்கடலின் இந்தப் பகுதியில் கடற்கொள்ளையர் ஒரு பெரிய பிரச்சினை இல்லையென்றாலும், இதுபோன்ற பயிற்சிகள் கடலோரக் காவல்படையினருக்கு சாத்தியக்கூறுகளுக்கான பயிற்சிக்கு உதவுகின்றன.
பயிற்சிகளின் உள்ளடக்கம் என்ன?
இந்த பயிற்சிகளின் நோக்கம் பரந்த அளவில் உள்ளது. "ஒரு கடல் விபத்து ஏற்பட்டாலோ, அல்லது எண்ணெய் கசிவு போன்ற சுற்றுச்சூழல் பேரழிவு ஏற்பட்டாலோ, சில சமயங்களில் ஒரு நாட்டின் கடலோரக் காவல்படை தனித்துச் சமாளிக்க முடியாது," என்று டாக்டர் சுல்தானா விளக்கினார்.
இந்தப் பயிற்சிகள் மற்ற தேசத்தின் கடலோரக் காவல் நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு வகையான பணிகளின் போது ஒருங்கிணைப்பை எவ்வாறு மேம்படுத்துவது என்பதைப் பற்றிய சிறந்த புரிதலை வளர்க்க உதவுகின்றன. "கடல் பாதுகாப்பு என்பது உங்களுக்கு ஒத்துழைப்பு தேவைப்படும் ஒரு வகையான விஷயம். இதை ஒரு நாடோ, ஒரு கடலோர காவல்படையோ தனித்து சிறப்பாக செய்ய முடியாது" என்று டாக்டர் சுல்தானா விளக்கினார்.
சர்வதேச சட்டத்தை உள்ளடக்கிய வரம்புகள் மற்றும் ஒழுங்குமுறைகள் உள்ளன, உதாரணமாக பிரத்தியேக பொருளாதார மண்டலங்கள் (EEZ). அதேபோல் கண்டங்கள் ரீதியிலான (கான்டினென்டல் ஷெல்ஃப்) குறிப்பிட்ட விதிகளும் உள்ளன. சர்வதேச சட்டத்தின் கீழ், கடல் மாநாட்டு சட்டத்தின் 76 வது பிரிவில் கூறப்பட்டுள்ளபடி, இந்த கடல் மண்டலமானது கண்ட விளிம்பின் வெளிப்புற விளிம்பு வரை அல்லது 200 நாட்டிகல் மைல் தூரம் வரை (கண்ட வெளிப்புற விளிம்பு அவ்வளவு தூரம் நீடிக்கவில்லை என்றால்) பரவியிருக்கும் கடற்பரப்பு மற்றும் நிலத்தடி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள ஆவணத்தின்படி, "கண்ட அடுக்கு மற்றும் பிரத்தியேக பொருளாதார மண்டலம் (EEZ) ஆகியவை வேறுபட்ட கடல் மண்டலங்கள் ஆகும்." நீட்டிக்கப்பட்ட கான்டினென்டல் ஷெல்ஃப் (ECS) பிரத்தியேக பொருளாதார மண்டலத்தின் (EEZ) நீட்டிப்பு அல்ல என்று அந்த ஆவணம் கூறுகிறது. "கடலோர நாடுகள் EEZ இல் பயன்படுத்தக்கூடிய சில இறையாண்மை உரிமைகள், குறிப்பாக நீர்நிலையின் வளங்களுக்கான உரிமைகள் (எ.கா., பெலஜிக் மீன்வளம்), ECS க்கு பொருந்தாது." என்று அந்த ஆவணம் கூறுகிறது.
ஒரு நாடு மற்ற நாடுகளின் கடல்பரப்பு மண்டலங்களுக்குள் நுழையக்கூடிய சூழ்நிலைகளைக் குறிப்பிடும் பல்வேறு விதிகள் மற்றும் உட்பிரிவுகள் உள்ளன, மேலும் கூட்டுப் பயிற்சிகள் இந்த பிரத்தியேகங்களைப் பற்றிய புரிதலை வளர்க்க உதவுகின்றன என்றும், “இந்தியப் பெருங்கடலில் பொதுவான அச்சுறுத்தல்கள் இருக்கும்போது மற்ற நாடுகள் இணைகின்றன. அந்த நேரத்தில், இயங்குதன்மை முக்கியமானது." என்றும் டாக்டர் சுல்தானா கூறினார்.
பாதுகாப்பு சூழல்
இந்த ஆண்டு ஆகஸ்டில், உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகளின் காணொலி சந்திப்பின் போது, இந்தியா, இலங்கை மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகள் பாதுகாப்பு ஒத்துழைப்பின் "நான்கு தூண்கள்" என்று அழைக்கப்படுவதில் பணியாற்ற ஒப்புக்கொண்டன. இது கடல் பாதுகாப்பு, மனித கடத்தல், பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் இணைய பாதுகாப்பு ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது.
ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற இந்த சந்திப்பிற்கு ஒன்பது மாதங்களுக்கு முன்னர், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இலங்கையின் பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர் கமல் குணரத்ன மற்றும் மாலத்தீவு பாதுகாப்பு அமைச்சர் மரியா தீதி ஆகியோருடன், கலந்துரையாடுவதற்காக கொழும்புக்கு சென்றிருந்தார். அந்த சந்திப்பில் உளவுத்துறைப் பகிர்வின் நோக்கத்தை விரிவுபடுத்த மூன்று நாடுகளும் ஒப்புக்கொண்டன. மூன்று உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இடையிலான இந்த சந்திப்பு முக்கியமானது, ஏனெனில் இது ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பு குறித்த NSA-நிலை முத்தரப்பு பேச்சுக்களின் மறுமலர்ச்சியைக் குறித்தது.
இந்த NSA அளவிலான கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு இந்தியா மற்றும் மாலத்தீவு மற்றும் இந்தியா மற்றும் இலங்கை இடையேயான உறவுகளுக்கு முக்கியமானது. “மூன்று நாடுகளின் கடற்படைகளும், (மற்றும் கடலோரக் காவல்படைகள்) அவை ஒவ்வொன்றும் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்வது எப்போதும் சிறந்தது. எனவே இந்தப் பயிற்சிகள் முக்கியத்துவம் பெறுகின்றன” என்கிறார் டாக்டர் சுல்தானா.
இராஜதந்திர சூழல்
மாலத்தீவின் பாதுகாப்பு அமைச்சர் மரியா தீதி ஆறு நாள் பயணமாக இந்தியா வந்திருக்கும் நேரத்தில் இந்த பயிற்சிகள் நடைபெறுகின்றன. இந்திய கடற்படை அகாடமியில் நடந்த பாசிங் அவுட் அணிவகுப்பை மறுஆய்வு செய்யும் முதல் வெளிநாட்டு பாதுகாப்பு அமைச்சர் மரியா தீதி ஆவார். மரியா தீதி இந்தியா புறப்படுவதற்கு முன் மாலத்தீவுக்கான இந்திய தூதர் முனு மஹாவர் அவரைச் சந்தித்து பேசினார்.
இந்தியாவிற்கும் மாலத்தீவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் குறித்து விவாதிக்க முனு மஹாவர், மரியா தீதியைச் சந்தித்த இரண்டு நாட்களுக்குப் பிறகு திதியின் இந்தியா வருகை வருகிறது. தீதி தனது இந்திய பயணத்தின் போது, இந்தியாவில் பயிற்சி பெற்று வரும் மாலத்தீவு தேசிய பாதுகாப்பு படை வீரர்களையும் சந்தித்து பேசுவார் என மாலத்தீவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. "தீதியின் வருகையின் போது, பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து அவரது சகாக்களுடன் கலந்துரையாடலாம்" என்று டாக்டர் சுல்தானா கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.