Explained: Facing no-trust vote, what are Pakistan PM Imran Khan’s options now?: இறுதியாக திங்கள்கிழமை (மார்ச் 28) பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள் தேசிய சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய முடிந்தது. இந்த தீர்மானத்தின் மீதான விவாதம் மார்ச் 31-ம் தேதி சபை மீண்டும் கூடும்போது தொடங்க உள்ளது.
தீர்மானம் தாக்கல் செய்யப்பட்ட மூன்று நாட்களுக்கு பின்னரும், ஏழு நாட்களுக்கு உள்ளாகவும் வாக்களிக்கப்பட வேண்டும் என்று நடைமுறைகள் கூறுகின்றன. முன்னதாக சட்டசபையை கூட்டாததன் மூலம் சபாநாயகர் அரசியலமைப்பு விதிகளை மீறியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
இப்போது செயல்முறை தொடங்கியுள்ள நிலையில், கிரிக்கெட் வீரராக மாறிய பிரதமருக்கான கவுண்ட்டவுன் தொடங்கியுள்ளதா? அல்லது இல்லையா? "கடைசி பந்து வரை" விளையாடுவதாக இம்ரான் சபதம் செய்திருந்தார், மேலும் அதற்கான வேலைகளை அவர் செய்து வருவதாகத் தெரிகிறது.
பிரதமர் என்ன செய்ய முயற்சிக்கிறார்?
இம்ரான் கான், கூட்டணிக் கட்சிகளுடன் கடைசி நேர ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் உள்ளார். அவரது அரசாங்கத்தில் உள்ள சிலர், 2023ல் வரவிருக்கும் தேர்தலை ஒரு வருடத்திற்கு முன்னதாக, தற்போது உடனடியாக நடத்துமாறு அவரை வற்புறுத்துகின்றனர். ஆனால் தேர்தல் எப்படி வரும் என்று தற்போது எதுவும் கூறமுடியாது.
திங்கட்கிழமை வரை, இம்ரான் கானிடம் பெரும்பான்மைக்கான எண்ணிக்கை இருந்ததாகத் தெரியவில்லை, ஆனால் இப்போது அவர் தனது எண்ணிக்கையை உயர்த்திக் கொள்வதற்காக வெறித்தனமான கடைசி நிமிட அரசியல் ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளார்.
பி.டி.ஐ கூட்டணி ஆதரவாளர்களுக்கு தினமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. 342 உறுப்பினர்களைக் கொண்ட தேசிய சட்டமன்றத்தில், இம்ரானின் ஆளும் கூட்டணிக்கு 179 உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால், பாராளுமன்றத்தில் ஒரு உறுப்பினரைக் கொண்ட பலுசிஸ்தானை தளமாகக் கொண்ட ஜம்ஹூரி வதன் கட்சி கூட்டணியில் இருந்து விலகியதையடுத்து ஞாயிற்றுக்கிழமை அது 178 ஆகக் குறைந்தது.
அப்படியென்றால் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தப்பிப்பிழைப்பதற்கான எண்ணிக்கை இம்ரான் கானிடம் உள்ளதா?
இம்ரான் கான் மற்றும் பிடிஐ கட்சி தலைவர்கள் 17 MNAக்களைக் (தேசிய சட்டமன்ற உறுப்பினர்கள்) கொண்ட மற்ற மூன்று கூட்டணிக் கட்சிகளான PML-Q, பலூசிஸ்தான் அவாமி கட்சி (BAP), மற்றும் Muttahida Quumi Movement-Pakistan ஆகியவற்றை நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்க செய்ய முயற்சித்து வருகின்றனர். ஆனால் மூன்று தரப்பினரும் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.
திங்கள்கிழமை மாலை, நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, இம்ரான் கான் பஞ்சாப் மாகாணத்தின் முதலமைச்சர் பதவியை PML(Q) க்கு வழங்கினார். முஷாரஃப் காலத்தில் பதவியில் இருந்த PML(Q) தலைவரான சௌத்ரி பெர்வைஸ் இலாஹிக்கு வழிவிட்டு, பெரிதும் செல்வாக்கற்றவரும், இம்ரான் கானால் நியமிக்கப்பட்டவருமான உஸ்மான் புஸ்தார், முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
மறுபுறம், பார்லிமென்டில் ஒரே ஒரு உறுப்பினரைக் கொண்ட பிஏபி, ஆளும் கூட்டணியில் இருந்து விலகியுள்ளது.
மேலும் இம்ரான் கான் வழங்கிய சிந்து மாகாண ஆளுநர் பதவி குறித்து MQM கட்சி ஆலோசித்து வருகிறது.
ஆனால், இம்ரான் கான் தனது தலைமைக்கு எதிராகக் கிளர்ச்சி செய்து, அவருக்கு எதிராக வாக்களிக்கக்கூடிய பிடிஐ கட்சியின் ஒரு டஜன் முதல் இரண்டு டஜன் உறுப்பினர்களை மீண்டும் அவரது வழிக்குக் கொண்டு வர வேண்டும். இந்த தலைவர்களில் பலர் தெற்கு பஞ்சாபைச் சேர்ந்தவர்கள் என்ற நிலையில், அதே பிராந்தியத்தைச் சேர்ந்த குறிப்பிடத்தக்கவரான வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி, தெற்கு பஞ்சாபை ஒரு தனி மாகாணமாக உருவாக்குவதற்கான மசோதாவை சமர்ப்பித்துள்ளது, அவர்களை மீண்டும் கவர்ந்திழுக்கும் நடவடிக்கையாகத் தோன்றுகிறது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இருந்து பிரித்து, அத்தகைய மாகாணத்தை உருவாக்குவது, நீண்டகால பிராந்திய கோரிக்கையாக இருந்து வருகிறது, ஆனால் பஞ்சாபி மேலாதிக்க அரசியல் மற்றும் பாதுகாப்பு உயரடுக்கால் இது ஒருபோதும் தீவிரமாக விவாதிக்கப்படவில்லை, ஏனெனில் இது அவர்களின் சொந்த சக்திவாய்ந்த மற்றும் முதன்மையான நிலையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும்.
இதையும் படியுங்கள்: குற்றவாளிகளின் பயோ சாம்பிள்ஸ் சேகரிப்பு… புதிய மசோதாவுக்கு எதிர்ப்பு ஏன்?
இந்த முயற்சிகள் அனைத்திற்கும் முக்கியமானது என்னவெனில், இம்ரான் கானுக்கு பாதுகாப்பு அமைப்பின் ஆதரவு தேவை. மேலும் 2018ல் இம்ரான் கானை பதவியில் அமர்த்துவதில் முக்கிய பங்காற்றிய ராணுவம் மற்றும் ஐ.எஸ்.ஐ., இனி இம்ரான் கான் பதவியில் இருப்பதை விரும்பவில்லை என்று சமிக்ஞை செய்துள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிராக செயல்பட்டதாக இம்ரான் குற்றம் சாட்டும் "லண்டனில் உள்ள மனிதர்" யார்?
ஞாயிற்றுக்கிழமை, எதிர்க்கட்சிகளுக்கு எதிரான பலத்தை வெளிப்படுத்தும் வகையில், தேசிய சட்டமன்றத்திற்கு அருகில் இஸ்லாமாபாத்தில் பிரதமர் ஒரு பெரிய பேரணியை நடத்தினார். குர்ஆன் போதனையிலிருந்து மேற்கோள் காட்டி, அவர் பேரணியை அம்ர் பில் மரூஃப் (நல்லதை ஊக்குவிக்கவும்) என்று அழைத்தார். இம்ரான் மற்றும் அவரது பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் ஆதரவாளர்களான ஏராளமானோர் பேரணியில் கலந்து கொண்டதாக டான் செய்தி வெளியிட்டுள்ளது.
அவருக்கு முன் தெற்காசியாவில் பல நெருக்கடிக்குள்ளான தலைவர்கள் பதவியில் இருப்பதற்காக போராடுவதைப் போலவே, இம்ரான் கான் ஒரு "வெளிநாட்டு சக்தி" மற்றும் எதிர்க்கட்சி PML(N) தலைவர் நவாஸ் ஷெரீபை சாடும் அதேவேளையில், "லண்டனில் அமர்ந்திருக்கும் ஒரு நபர் பாகிஸ்தானின் நலன்களுக்கு எதிராக செயல்படுகிறார் என்று குற்றம் சாட்டினார். பாகிஸ்தானின் வெளியுறவுக் கொள்கையில் நாட்டின் நலன்களுக்கு எதிராக செல்வாக்கு செலுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.
“பாகிஸ்தானில் அரசாங்கத்தை மாற்ற வெளிநாட்டு பணத்தின் மூலம் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எங்கள் மக்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். பெரும்பாலும் அந்த எண்ணம் இல்லாமல், ஆனால் சிலர் எங்களுக்கு எதிராக பணத்தை பயன்படுத்துகின்றனர். எந்தெந்த இடங்களில் இருந்து அழுத்தம் கொடுக்க முயற்சிகள் எடுக்கப்படுகின்றன என்பது எங்களுக்குத் தெரியும். எங்களுக்கு எழுத்துப்பூர்வமாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது, ஆனால் தேச நலனில் சமரசம் செய்து கொள்ள மாட்டோம்,'' என்று இம்ரான் கான் கூறினார்.
"பாகிஸ்தானின் சுதந்திரத்திற்கான ஒரு வழக்கை" முன்வைப்பதாகவும், "வெளிநாட்டு சதி" பற்றிய விவரங்களை மிக விரைவில் மக்களுடன் பகிர்ந்து கொள்வதாகவும் இம்ரான் கான் கூறினார். இந்த சதி என்று கூறப்படுவதற்கான மறுக்க முடியாத ஆதாரம் கடிதம் வடிவில் தன்னிடம் இருப்பதாக அவர் கூறினார்.
“லண்டனில் அமர்ந்திருக்கும் நபர் யாரைச் சந்திக்கிறார், பாகிஸ்தானைச் சேர்ந்த தலைவர்கள் யாருடைய கட்டளைகளைப் பின்பற்றுகிறார்கள் என்பதை தேசம் அறிய விரும்புகிறது? எங்களிடம் உள்ள ஆதாரத்தை வெளிப்படுத்துகிறேன். எனது நாட்டின் நலனைக் காக்க வேண்டும் என்பதால் என்னால் விரிவாகப் பேச முடியாது. எனது நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் எதை குறித்தும் நான் பேச முடியாது. அதைப் பற்றி நான் உங்களிடம் சொல்லியிருக்கலாம். நான் யாருக்கும் பயப்படவில்லை, ஆனால் பாகிஸ்தானின் நலனில் அக்கறை கொண்டுள்ளேன்,” என்றார்.
இந்த நேரத்தில் இம்ரானுக்கு வேறு வழி இருக்கிறதா?
அவரது அமைச்சர்கள் சிலர் ஆலோசனை வழங்கியபோல் அவர் அரசாங்கத்தை கலைத்துவிட்டு மீண்டும் தேர்தலை நடத்தலாம். அவர் இந்த விருப்பத்தை சற்று யோசித்ததாக தெரிகிறது. ஏனெனில், ஞாயிற்றுக்கிழமை அவரது பேரணி கிட்டத்தட்ட தேர்தல் பிரச்சார உரையாக இருந்தது.
அவர் ஜனநாயகத்திற்காக அரசியல் தியாகியாகப் போராடினால், கடந்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளாக அவரைக் கைவிட்ட சில ஆதரவுத் தளத்தை அவர் திரும்பப் பெறலாம். ஆனால் தேர்தல் முடிவுகளை நிச்சயமற்ற நிலையில் கணிக்க முடியாது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.