இந்தியா- சீனா எல்லை மோதல்: கைலாய மலைத்தொடர் ஏன் முக்கியமானது?

India China Border Disputes Why Kailash Range matters : இந்தியா- சீனா எல்லை மோதல்: கைலாய மலைத்தொடர் ஏன் முக்கியமானது?

1962 அக்டோபர் தொடக்கத்தில் சீனா அதிபர் மாவோ சேதுங் இந்தியாவை கடுமையாக தண்டிக்க ஒரு பெரிய அளவிலான படையெடுப்பை நடத்த முடிவு செய்தார்.

இந்தியா கிழக்கு எல்லைப் பகுதியில் பிரதான தாக்குதலை திட்டமிட்டிருந்தாலும், 1960 வருட காலம் வரை கிழக்கு லடாக்கில் சொந்தம் கொண்டாடிய பகுதிகளைக் கைப்பற்ற மேற்கு எல்லைப் பகுதியிலும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை சீனா  ராணுவம் முன்னெடுத்தது.  இதில் 43 இந்திய எல்லை சாவடிகள் அழிக்கப்பட்டன.

சீனாவின் சின்ஜியாங்கில் அமைந்துள்ள காஷ்கர் நகரை திபெத்துடன் இணைக்கும் மேற்கு நெடுஞ்சாலையின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அக்சாய் சின் பகுதி மீது சீனா தனது முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது அவசியமானது. 1962 அக்டோபர் 20ல் சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் ஒரே நேரத்தில் முன்னேறி பல தாக்குதல்களை தொடர்ந்தது.

அக்சாய் சின் நிலப்பகுதியில் சீனாவின் தாக்குதல்கள்
இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்பட்டன. அக்டோபர் 20 முதல் 28 வரையிலான நாட்களில், கல்வான் பள்ளத்தாக்கில் தவுலத் பெக் ஓல்டி என்ற இடத்தில் அமைந்துள்ள இந்திய எல்லைச் சாவடிகளை அழித்தது.    பாங்கோங் த்சோ மற்றும் துங்டி-டெம்சோக் பகுதிகளில் அத்துமீறியது.

மூன்று வார தந்திரோபாய போர் நிறுத்தத்திற்குப் பிறகு,  நவம்பர் 18 அன்று மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த கைலாய மலைத் தொடர் பகுதியைக் கைப்பற்ற இரண்டாம் கட்டத் தாக்குதலை சீனா தொடங்கியது.

இந்திய ராணுவம்: 

இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள காரகோரம் மலைத்தொடர்  பாங்கோங் த்சோ ஏரியின் வடக்குப் பகுதியோடு முடிகிறது. ஏரியின் தெற்கு கரை முடிவிற்குப் பிறகு  கைலாய மலைத்தொடர் ஆர்மபபாகிறது.

4,000-5,500 மீட்டர் உயரமுள்ள கைலாயத் தொடர்  கரடுமுரடான, உடைந்த நிலப்பரப்புகளாக  வகைப்படுத்தப்படுகிறது. ஹெல்மெட் டாப், குருங் ஹில், ஸ்பாங்கூர் கேப், முகர் ஹில், முக்பாரி, ரெசாங் லா, ரெச்சின் லா ஆகிய முக்கிய நிலப்பகுதிகளையும் கொண்டுள்ளது. இந்தியாவின் முக்கிய தகவல் தொடர்பு மையமாகக் கருதப்படும்  சுஷுல் பவுல் (Chushul Bowl) இங்கு தான் அமைந்துள்ளது.

முதலாம் கட்டத் தாக்குதலுக்குப் பிறகு கிடைத்த இடைவெளியைப் பயன்படுத்தி இந்திய இராணுவம் தனது தாக்குதல் யுக்தியை மறுசீரமைக்கத் தொடங்கியது. அக்டோபர் 26 அன்று, லே நிலப்பகுதியில் மேஜர் ஜெனரல் புத் சிங்கின் கீழ் 3 காலாட்படை பிரிவு உருவாக்கப்பட்டது.

114வது காலாட்படை தலைமையகம் சுஷூலுக்கு மாற்றப்பட்டது. 70வது காலாட்படை பிரிவு சிந்து சமவெளி துணைத் துறையின் பொறுப்பை ஏற்றுக்கொண்டது. லே நிலப்பகுதியின் பாதுகாப்பிற்கு I63வது காலாட்படை பிரிவு இணைக்கப்பட்டது.

ரெசாங் லா போர் : 

ரெசாங் லாவின் பாதுகாப்புக்கு பொறுப்பான 13வது  குமாவுன் சி படைப்பிரிவு, 7 மற்றும்  9 எல்லைப் புள்ளிகளில் இரண்டு படைகளை நிறுத்தியது. மையத்தில் 5150 என்ற நிலப் பகுதியில் (ஸ்ட்ராங் பாயிண்ட் 8) மூன்றாவது பிரிவை நிறுத்தியது.

நவம்பர் மாதத்தில், ரெசாங் லா நிலப் பகுதியை வடக்கு மற்றும் தெற்கில் இருந்து ஒரே நேரத்தில் தாக்க சீனா ராணுவம் திட்டமிட்டனர். அதன்படி, இரண்டு தரைப்படை குழுக்களாக பிரிந்தனர். முதல் தரைப்படைக் குழு தெற்கிலிருந்து  எல்லைப் புள்ளி 9-ஐ தாக்குவதென்றும். இரண்டாவது படைக்குழு, வடக்கிலிருந்து எல்லைப் புள்ளி 8 ஐ தாக்குவதென்றும் முடிவெடுக்கப்பட்டது.

நவம்பர் 17 இரவு 8 மணிக்கு ரெட்டூசோங் நிலப்பகுதியில் இருந்த ஆயத்தமான இரண்டு படைப் பிரிவுகளும், நவம்பர் 18ம் தேதி காலை 6 மணியளவில் தங்களது தளங்களில் நிலைநிறுத்திக்கொண்டன. இரு திசைகளிலிருந்தும் காலை 9:15 மணியளவில் சீனாவின் தரப்பில் இருந்து  கடுமையான தாக்குதல் தொடங்கியது.  தகவல்தொடர்பு முழுமையாக துண்டிக்கப்பட்டது.  இந்தியப் படையினர் சூழப்பட்டனர். சீனா தனது ஆதங்கத்தை முழுமையாக செலுத்தியது. ‘செய் அல்ல செத்து மடி’ என்ற நிலைக்கு உள்ளான இந்திய படைத் தளபதி மேஜர் ஷைத்தான் சிங் சில எதிர் தாக்குதலைத் தொடங்கினார். இறுதியாக,  நவம்பர் 18 இரவு 10 மணியளவில் ரெசாங் லா பகுதியை சீனா ராணுவம் முழுமையாக கைப்பற்றியது.

இப்பகுதியில் நிறுத்தப்பட்ட 141 இந்திய படை வீரர்களில், 135 பேர் கொல்லப்பட்டனர். 5 பேர் கைதிகளாக அழைத்துச் செல்லப்பட்டனர். ஒருவர் மட்டும் உயிர் பிழைத்தார். உடல் முழுவதும் குண்டுக் காயங்களுடன் படைப்பிரிவு அதிகாரி சைதான் சிங் வீர மரணமடைந்தார். இவரது மறைவிற்குப் பின் இந்தியக் குடியரசுத் தலைவர் 18 நவம்பர் 1962 அன்று இவரது சேவையைப் பாராட்டி பரம் வீர் சக்கரம் விருது வழங்கினார். சீனர்கள் 21 பேர் கொல்லப்பட்டனர் , 98 பேர் காயமடைந்தனர்.

குருங் மலை போர் :

குருங் மலைப் பகுதியை கைப்பற்றுவதற்கான நடவடிக்கை நவம்பர் 18 காலை 9:22 மணிக்கு தொடங்கியது. இது ரெசாங் லா மீதான தாக்குதலுடன் ஒருங்கிணைக்கப்பட்டது. ஆனால், இந்த பகுதியில்  ​​சீனர்கள் பலத்த உயிரிழப்புகளை சந்தித்தனர். தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டது. இருப்பினும், காலை 11 மணியளவில் ஒருகிணைந்த தாக்குதல்களை முன்னெடுத்தனர். இறுதியாக, நவம்பர் 18ம் தேதி இரவுப் பொழுதில் குருங் நிலப்பகுதி சீனர்களால்   கைப்பற்றப்பட்டது. இந்திய கூர்கா படைப்பிரிவில் 50 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். 80க்கும் மேற்பட்ட சீன ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். குருங் மலைப் போரில் எல்லைப் புள்ளிகள் 5 & 6. போன்ற மீதமுள்ள பகுதியை சீனா ராணுவத்தால் கைப்பற்ற முடியவில்லை.

Explained: Why Kailash Range matters

ரெசாங் லா மற்றும் குருங் மலையின் ஒரு பகுதி மட்டுமே கைப்பற்றப்பட்டிருந்தாலும், சீனா ராணுவத்திடம் அக்சாய் சின் நிலப்பகுதியில்  செயல்படுவதற்கான பிளஸ் பிரிவு படைப்பிரிவு மட்டுமே இருந்தது. எனவே, மேலும், எந்தவொரு நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கான வாய்ப்பு அதனிடம் குறைவாக இருந்தது. மறுபுறம், இந்தியாவின் 3வது காலாட்படை பிரிவு ஒரு வரையறுக்கப்பட்ட எதிர் தாக்குதலைத் தொடங்கும் திறனைக் கொண்டிருந்தது. நவம்பர் 21 அன்று போர் நிறுத்தத்தை அறிவித்த பின்னர், போதிய தளவாடங்கள் இல்லாத காரணத்தினால் சீன துருப்புக்கள் மோசமான பாதிப்பை சந்தித்தன.

ஆகஸ்ட் 2020: எல்லை பதற்றம் 

58 ஆண்டுகளுக்குப் பிறகு, வரலாற்றின் போக்கு  மாற்றியமைக்கப்பட்டது. 2020 ஆகஸ்ட் 30ம் தேதி, சிறப்பு எல்லை பாதுகாப்பு படை (எஸ்.எஃப்.எஃப்) கைலாய மலைத்தொடர் பகுதியை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாத்த விதம் சீனா ராணுவத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்தியாவின் இந்த நடவடிக்கையால், பங்கோங் த்சோவின் வடக்குக் கரையில் சீன ராணுவம் அத்துமீறல்கள் நடத்தியிருந்தாலும், ஸ்பாங்கூர் கேப்-மால்டோ கேரிசன் கிழக்குப் பகுதிகளில் சீனாவின் இருத்தல் மேலும் விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மே மாத ஆக்கிரமிப்பின் ஒரு பகுதியாக சீனா ராணுவம் கைலாய  மலைத்தொடருக்கு ஏன் செல்லவில்லை என்பது இரண்டு நம்பத்தகுந்த காரணங்களால் இருக்கலாம்: ஒன்று, காலாட்படை பற்றாக்குறை, இரண்டு-  இந்திய இராணுவம் செயல்திறன்மிக்க எதிர்வினைகளை மேற்கொள்ள முயற்சிக்காது என்ற ஒரு அனுமானம்.

1962 ஆம் ஆண்டில், கைலாய மலைத் தொடரில் தான் இந்திய வீரர்கள் தங்களது திறமையை நிரூபித்தனர். சீனா ராணுவத்துக்கு கடுமையான சேதங்களையும் ஏற்படுத்தினர். அதன் தாக்கங்கள் இன்றும்  உணரப்படுகிறது. தற்போதைய இந்திய ராணுவம், மேம்பட்ட உபகரணங்கள் மற்றும்  ராணுவ உள்கட்டமைப்புகள் காரணமாக கைலாய மலைத்தொடரில் பலம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மறுபுறம், உண்மையான கட்டுப்பாட்டு கோடு நெடுகே சீனர்கள் குளிர்காலத்தின் வேதனையை உணரத் தொடங்கியுள்ளனர்.

தற்போதைய படையை வைத்துக் கொண்டு கைலாய மலைத்தொடரை  மீண்டும் மீட்டெடுக்க முடியாது என்ற விழிப்புணர்வும், குளிர்காலம் தொடங்கியதால் ஏற்கனவே திட்டமிட்ட முக்கிய நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கான சாத்தியக் கூறுகள் இல்லாமல் போனதாலும், சீனர்கள் பேச்சுவார்த்தை என்ற பெயரில் பாங்காங் த்சோவின் தெற்குப் பகுதியில் இருந்து இந்திய இராணுவத்தின் பின்வாங்க முயற்சி மேற்கொள்வார்கள். இதை இந்திய ராணுவம் புரிந்து கொள்ள வேண்டும்.

கைலாஷ் மலைத் தொடர், இந்திய வரலாற்றின் ஒரு திருப்புமுனையாகும். ஏனெனில் சீனாவின் சட்டவிரோத எல்லை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட முதல் பகுதி இதுவாகும். இந்தியா சுதந்திரமடைந்த போது ஜான்சன் கோடு படி மேற்கு பகுதியின் எல்லை அதிகாரபூர்வாக நிர்ணயிக்கப்பட்டது. இந்தியாவின் உரிமை கோரலும் ஜான்சன் கொடு அடிப்படையில் தான் உள்ளது. எனவே, இந்தியா தனக்கு சொந்தமான [பகுதிகளை மீட்டெடுக்க  வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்தியா தனது இறையாண்மையில் என்றும் சமரசம் செய்து கொள்ளது  என்ற கடுமையான செய்தி சீனத் தலைமைக்கு அனுப்ப வேண்டிய நேரம் இது.

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: India china border disputes why kailash range matters

Next Story
புயல்களுக்கு இப்படித்தான் பெயர் வைப்பார்களா ? அடுத்து உருவாக இருக்கும் 7 புயல்களுக்கு பெயர் தயார் !Cyclone Fani Name Fact Checking
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com