கிழக்கு லடாக் கால்வான் பள்ளத்தாக்கில், சீனா சீன இராணுவம் தாக்கியதில், பாதுகாப்பு பணியில் இருந்த 20 வீரர்கள் உயிரிழந்தனர். இது, 45 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா சீனா உறவுகளுக்கு இடையே நடந்த மோசமான சம்பவமாக கருதப்படுகிறது.
இந்த பதட்டமான சூழல், பெய்ஜிங்குடனான நடவடிக்கைகளில் புது டெல்லி சந்திக்கவிருக்கும் சவால்களை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்று காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர்ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதளிடம் தெரிவித்தார். "நிலவியல்சார்ந்த அரசியல் மாறுபாடுகளைப் பயன்படுத்தி, சீனா தனது நெருக்கடியை மூலோபாய வாய்ப்பாக திருப்பியுள்ளது"என்றும் தெரிவித்தார்.
அணைத்து மூலோபாய போரட்டங்களிலும் சீனா தனது போர்க்குணத்தை வெளிப்படுத்துகிறது. தற்போதுள்ள நிலையை மாற்ற (Status Quo) தைரியமாக சவால் விடுகிறது. இதற்கு, தென் சீனக் கடல் பிரச்சனை உள்ளிட்ட பலவற்றை உதாரணமாக கூறலாம். சீனாவுடனான எல்லைப் பிரச்சினையில், இந்திய அரசு மனநிறைவு கொள்ளக்கூடாது. உதாரணமாக, 1999ம் ஆண்டு லாகூர் பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்ட மனநிறைவுதான் கார்கில் மோதலுக்கு வழிவகுத்தது என்றார்.
காங்கிரஸ் தலைவர் மேலும் கூறுகையில்,"எதிர்க்கட்சியிடம் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். வெளிப்படைத் தன்மையோடு விவரங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும். சீனாவுடனான எல்லைப் பிரச்சனை குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
மேலும், இந்திய எல்லைப் பகுதிகளில் தனது எல்லையை விரிவுபடுத்துவதற்கான சீனாவின் யுக்திக்கு வரம்புகள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. சீனா பலவீனமாக இருந்த காலங்களில் அந்நிய சக்திகளிடம் இழந்ததாகக் கூறும் ‘மத்திய இராச்சியத்தை’ மீட்டெடுப்பதை சீனா நோக்கமாகக் கொண்டுள்ளது. அவர்கள் விரட்டப்படுவதே மிகச் சிறந்த பதிலாக அமையும் என்று சவுத்ரி தெரிவித்தார்.
இந்தியா தனது அண்டை நாடுகளுடன், குறிப்பாக நேபாளத்திற்கு இடையேயான உறவை புதுப்பித்து பலப்படுத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்துகிறார். அண்டை நாடுகளுடன் ஒற்றுமையை உருவாக்குவது, முரட்டுத்தனமான சீனாவுக்கு எதிரான ஒரு மூலோபாய தேவை.
இறுதியாக, உள்நாட்டில் வகுப்புவாத மற்றும் சமூக நல்லிணக்கத்தை பேணிகாக்க வேண்டும் என்றும் அவர் வாதிடுகிறார். இராணுவ ரீதியாக டிராகனை எதிர்கொள்ளும் போது விவேகத்துடன், ஒன்றுபட்டு செயல்படுவது முக்கியம் என்று சவுத்ரி கூறுகிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil