Manraj Grewal Sharma
ஜூன் 15 மற்றும் 16 தேதிகளில் லடாக்கின் கால்வான் பகுதியில், இந்தியா- சீனப் படைகளுக்கிடையேயான மோதலில், 20 இந்தியா ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இருநாட்டு வீரகளுக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பால் இந்த வன்முறை சம்பவம் அரங்கேறியதாக தொலைக்காட்சிகளில் பேசப்பட்டது. பொதுவாக, ஆயுதப்படைகள் கைகலப்பு சண்டைகளுக்கு எப்படித் தங்களை தயார் படுத்திக்கொள்கின்றன என்பதை இந்தியன் எக்ஸ்பிரஸ் இங்கே விளக்க முயற்சிக்கிறது.
இந்திய இராணுவம் ஒரு ஆயுதப்படை. எனவே, ஆயுதப் பயன்பாட்டிற்குத் தேவைப்படும் பயிற்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. போர் பயிற்சிகளின் ஒரு பகுதியாக ராணுவ வீரர்களுக்கு தற்காப்பு சண்டைகள் கற்பிக்கப்பட்டாலும், ஆயுதங்கள் தான் அங்கு முதன்மையாக்கப்படுகிறது.
ராணுவத்தில் பணியாற்றும் அனைத்து சிப்பாய் மற்றும் அதிகாரிகளுக்கு இயந்திர துப்பாக்கி, கைத்துப்பாக்கி போன்ற ஆயதங்கள் வழங்கப்படுகின்றன. மேலும், எம்.எம்.ஜி (நடுத்தர இயந்திர துப்பாக்கி), ஏ.ஜி.எல் (தானியங்கி கைக்குண்டு துவக்கி), மிசைல் லாஞ்சர், ராக்கெட் லாஞ்சர் , 51 மிமீ பீரங்கி , 81 மிமீ பீரங்கி, எம்.ஜி.எல் (மல்டி கிரெனேட் லாஞ்சர்) போன்ற ஆயுதங்களை ஒவ்வொரு காலாட்படை பிரிவும் கொண்டுள்ளது.
இது தவிர, போர்க்களத்தில் உள்ள சிப்பாய்களுக்கும் , அதிகாரிகளுக்கும் உடைவாள் ஒன்றும் வழங்கப்படுகிறது. எதிரி உடனான போரில், ஆபத்தான சூழலில் இந்த உடைவாளை பயன்படுத்தவும் அவர்களுக்கு பயற்சி அளிக்கப்படுகிறது.
ராணுவ கட்டமைப்பு நவீனமயமாக்கப்பட்டுவருவதால், எல்லைப் பாதுகாப்பில் ஆயுதங்கள் தான் அளவுகோலாக உள்ளது. இதனால், ஆயுதமற்ற சண்டை பயிற்சிக்கு மிகக் குறைந்த முன்னுரிமை அளிக்கப்படுகிறது. எனினும், காலாட்படை பட்டாலியன்களின் கடாக் படைப்பிரிவு (Ghatak platoons) ஆயுதமற்ற சண்டைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றன.
கடாக் (கமாண்டோ) பாடத்திட்டம், எல்லை ஊடுருவல், மற்றும் வனவாச சண்டை போன்ற ராணுவ பாடத்திட்டங்களில் ஆயுதமற்ற சண்டை ஒரு பகுதியாக விளங்குகிறது.
எவ்வாறாயினும், நாட்டின் சிறப்புப் படைகள் (எஸ்.எஃப்) ஆயுதமற்ற சண்டைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. தற்காப்புக் கலைகள் மற்றும் எதிராளியை அழிக்கும்பிற நுட்பங்களில் தங்கள் வீரர்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றன. நிறுவனங்களுக்கு இடையேயும், பட்டாலியன்களுக்கு இடையேயும், குத்துச்சண்டை, மல்யுத்த போன்ற போட்டிகள் வழக்காமாக நடை பெற்று வருகிறது.
கலவரங்களின் போது,லத்தி சார்ஜ், கண்ணீர்ப்புகைக் குண்டு போன்றவைகளைப் பயன்படுத்த மத்திய ஆயுத படைப்பிரிவு பயிற்சி பெற்றுள்ளது. இது போன்ற தருணங்களில் இராணுவம் வரவழைக்கப்பட்டால், அது ஆயுதங்களை மட்டுமே பயன்படுத்தும். லத்திகள், மட்டைகள் போன்றவைகளை பயன்படுத்துவது ஆயுதப்படை பயிற்சியின் ஒரு பகுதியாக அமையவில்லை.
ஆயுதப்படைகள் நாட்டின் கடைசி பாதுகாப்பு கோட்டையாகும். அதனால்தான் அனைத்து நாடுகளும் எதிரிகளை கையாளும் வகையில் சிறந்த ஆயுத கட்டமைப்பை உருவாக்க முயற்சி மேற்கோள்கின்றன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil