செவ்வாயன்று, கொரோனா தொற்று பாதிப்பில் 2 லட்சத்தைக் கடந்த மூன்றாவது பெருநகரமாக பெங்களூர் உருவெடுத்தது. நேற்று, மட்டும் அங்கு 3,000க்கும் அதிகமான புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டது. புனே, புதுடெல்லி போன்றவைகள் மட்டுமே தொற்று பாதிப்பில் பெங்களூருவை விட அதிகம் பாதிக்கப்பட்ட பெருநகரங்களாக உள்ளன.
ஆனால், டெல்லியை விட பெங்களூருவில் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளன. ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை தற்போது அங்கு 40,000 ஐத் தொட்டுள்ளது. புனேவில் இந்த எண்ணிக்கை 60,000க்கும் அதிகமாக உள்ளன. கர்நாடகா மாநிலத்தின் 37 சதவீத பாதிப்புகள் பெங்களூரில் இருந்து கண்டறியப்படுகின்றன.

தேசியளவில், புதிய நோயாளிகளை விட குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகமாகும் போக்கு நேற்றையும் சேர்த்து கடந்த 5 நாட்களாக தொடர்ந்து நீடிக்கிறது. அதிகளவில் குணமடையும் போக்கு (அதுவும் 5 நாட்கள்) தற்போது தான் இந்தியாவில் காணப்படுகின்றன. உண்மையில், ஜூன் மாதத்திலிருந்து, மூன்று முறை மட்டுமே, புதிய பாதிப்புகளை விட ஒரே நாளில் அதிகளவில் குணமடைவது காணப்பட்டது.
இதன் விளைவாக கடந்த ஐந்து நாட்களில், நாட்டில் சிகிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளது. செப்டம்பர் 17 அன்று 10.17 லட்சமாக இருந்த ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை, தற்போது 9.68 லட்சமாக உள்ளது.
இப்போது அறிவிக்கப்பட்ட தினசரி குணமடைவோர் எண்ணிக்கை அனைத்தும், சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு கண்டறியப்பட்ட தினசரி கொரோனா பாதிப்புகளுக்கு சமமானதாகும் ( ஏனெனில், நோயத் தொற்றில் இருந்து மீள எடுத்துக் கொள்ள 2 வாரங்கள் எடுத்துக் கொள்கிறது).
திங்களன்று, நாட்டில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் (1,01,468) குணமடைந்தனர். இந்தியாவில், தினசரி கொரோனா பாதிப்புகள் 1 லட்சம் என்ற மைல்கல்லை தொட வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
புதிய பாதிப்புகளை விட ஒரே நாளில் அதிகளவில் குணமடைவது காணப்படுவது மிகவும் வரவேற்கத்தக்க போக்கு. நோய்ப் பரவல் இறுதியாக குறைய ஆரம்பிக்கிறது என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
எவ்வாறாயினும், கடந்த ஒரு வாரத்தில் நாட்டில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைந்து காணப்படுகின்றன. இதன் விளைவாக, புதிய பாதிப்புகள் தற்போது ஒப்பீட்டளவில் குறைந்து காணப்படுகின்றன. எனவே, மிக அதிக அளவிலான குணமடைதல்கள் போக்கு ஒரு தற்காலிக நிகழ்வாக இருக்கலாம்.

இந்தியாவில், கடந்த மூன்று வாரங்களாக தினசரி புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 90,000 என்ற எண்ணிக்கையில் இருந்து வந்தன... கடந்த வாரங்களில், பரிசோதனை எண்கள் இயல்பை விட சற்றே குறைவாக காணப் பட்டன. எடுத்துக்காட்டாக, கடந்த மூன்று நாட்களில், சோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை சராசரியாக 8.72 லட்சம் என்ற அளவில் தான் உள்ளது. அதற்கு முன், இந்த எண்ணிக்கை 10-11 லட்சம் என்ற அளவில் இருந்து வந்தது. ஊரடங்கு தளர்வுகளுக்குப் பின், தினசரி புதிய பாதிப்பில் மிகப்பெரிய எழுச்சி ஏற்படாமல் இருக்க இதுவும் ஒரு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 83,347 புதிய தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதுவரை பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 56,46,011 ஆக உயர்ந்துள்ளது. உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகளில் 74 சதவீதம் 10 மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களில் இருந்து பதிவாகியுள்ளது.
நாட்டில் கொரோனா நோய்த் தொற்று தொடர்பான உயிரிழப்பு எண்ணிக்கை 90,000 ஐ தாண்டியுள்ளது. உலகில் மொத்த கொரோனா இறப்புகளில் கிட்டத்தட்ட 10 சதவீதம் இந்தியாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil