மகாராஷ்டிராவில் அதிகபட்ச கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கையில் இப்போது புனே மும்பையை முந்தியுள்ளது. உண்மையில் நாடு முழுவதிலும், டெல்லிக்குப் பிறகு புனே அதிகபட்ச கொரோனா தொற்றுகளைக் கொண்டுள்ளது.
புனேவில் ஞாயிற்றுக்கிழமை 3,200 புதிய தொற்றுகள் கண்டறியப்பட்டதையடுத்து, புனேவில் இதுவரை 1.3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு நாளும் 1,000 முதல் 1,200 வரை புதிய தொற்றுகள் கண்டறியப்பட்டுவரும் மும்பையில் சுமார் 1.28 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லியில் தொடர்ந்து மிக அதிக எண்ணிக்கையில் 1.52 லட்சம் தொற்றுகள் உள்ளன. ஆனால், ஒவ்வொரு நாளும் டெல்லி 1,000 புதிய தொற்றுகளை மட்டும் சேர்த்து வருகிறது. கொரோனா தொற்று எண்ணிக்கையில் புனே தற்போது வளர்ந்து வரும் விகிதத்தில், அது விரைவில் டெல்லியை முந்த வாய்ப்புள்ளது.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நோய் கண்டறியப்பட்ட முதல் நகரங்களில் புனேவும் ஒன்று. ஆனால், புனே எப்போதும் மும்பையை விட குறைவான எண்ணிக்கையிலான தொற்றுகளையே கொண்டிருந்தது. மும்பை மிக நீண்ட காலமாக நாட்டில் அதிகபட்ச கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களைக் கொண்டிருந்தது. புனேவில் சமீபத்திய தொற்று அதிகரிப்புக்கு முக்கியமாக சோதனைகள் அதிகரிக்கப்பட்டதே காரணம். புனே தற்போது மகாராஷ்டிராவில் அதிக எண்ணிக்கையிலான பரிசோதனைகளையும், மும்பை இரு மடங்கு பரிசோதனைகளையும் நடத்தி வருகிறது. ஜூலை மாதம் புனே 1 லட்சம் ஆன்டிஜென் சோதனைகளுக்கு ஆர்டர் செய்தது. அவை தீர்ந்துபோகும் நிலையில் உள்ளது. மேலும், அது இப்போது 1 லட்சம் கருவிகளை ஆர்டர் செய்துள்ளது.
புனேவில் பெரும்பாலான தொற்றுகள் கடந்த சில வாரங்களில்தான் அதிகரித்துள்ளன. நாட்டில் புனே நகரத்தில் ஏற்கனவே அதிக எண்ணிக்கையில் சிகிச்சை பெற்றுவரும் கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் உள்ளனர். இந்த எண்ணிக்கை டெல்லியைவிட கிட்டத்தட்ட 4 மடங்கு அதிகம். ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, புனேவில் 41,000க்கும் மேற்பட்ட நோயாளிகள் இருந்தனர். டெல்லியில் 11,000க்கும் குறைவான நோயாளிகள் இருந்தனர். மும்பையில் தற்போது சுமார் 18,000 தொற்றுகள் உள்ளன. இதுவரை 1.16 லட்சம் பேர் தொற்றுகளைக் கண்டறிந்துள்ள செனையில் சுமார் 11,500 தொற்றுகள் உள்ளன.
ஞாயிற்றுக்கிழமை மாலை நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியும் பரிசோதனைகளின் எண்ணிக்கை 30 மில்லியன் (3 கோடி)ஐ தாண்டியது. இந்தியாவை விட அதிகமாக சீனா 90 மில்லியன் பரிசோதனைகளையும், அமெரிக்கா 70 மில்லியன், ரஷ்யா 32 மில்லியன் என அதிக பரிசோதனைகளை நடத்தியுள்ளன.
இந்தியாவில் கொரோனா பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 50,000ஐ தாண்டியது. இந்தியாவில் ஞாயிற்றுக்கிழமை 941 கொரோனா பாதிப்பு மரணங்கள் பதிவாகியுள்ளன. கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் அமெரிக்காவில் 1.73 லட்சம் பேர்கள், பிரேசிலில் 1.07 லட்சம் பேர்கள் மெக்ஸிகோவில் சுமார் 57,000 பேர்கள் என இந்த மூன்று நாடுகளில் அதிக கொரோனா மரணங்களைக் கண்டுள்ளன. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று நோயால் இதுவரை 7.73 லட்சத்திற்கும் அதிகமானோர் இறந்துள்ளனர்.
நாட்டில் புதிய தொற்றுகளீன் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை சற்று குறைந்துள்ளது. நாடு முழுவதும் நேற்று 58,000க்கும் குறைவான புதிய தொற்றுகள் கண்டறியப்பட்டது. இந்த எண்ணிக்கை கடந்த வாரம் முழுவதும் கண்டறியப்பட்ட தொற்றுகளின் எண்ணிக்கையான 64,000-65,000ஐ விட மிகக் குறைவானது. ஆனால் இது ஒரு எல்லோருக்கும் தெரிந்த ஒரு முறையாக உள்ளது. வார இறுதி நாட்களில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக புதிய தொற்று கண்டறிதல்கள் பொதுவாக ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைகளில் ஒரு வீழ்ச்சியைக் காட்டுகின்றன. கடந்த வாரம், இந்தியா ஒவ்வொரு நாளும் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாதிரிகளை பரிசோதனை செய்து வந்தது. இருப்பினும், வார இறுதியில் இந்த எண்ணிக்கை 7.46 லட்சம் மற்றும் 7.31 லட்சமாக குறைந்தது.
இந்தியாவில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுநோயாளிகளின் எண்ணிக்கை இப்போது 26.47 லட்சமாக உள்ளது. அவற்றில் 19.19 லட்சத்துக்கும் அதிகமானோர் அல்லது சுமார் 72.5 சதவீதம் பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து மீண்டுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.