AMITABH SINHA
ஆந்திரப் பிரதேசத்தில் புதன்கிழமை 10,000க்கும் அதிகமான கொரோனா வைரஸ் தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளது. மார்ச் மாதம் நடுவிலிருந்து மகாராஷ்டிரா மாநிலத்தைவிட வேறு ஒரு மாநிலம் அதிக அளவில் கொரோனா வைரஸ் தொற்றுகளை பதிவு செய்தது இதுவே முதல்முறை ஆகும். மகாராஷ்டிராவில் புதன்கிழமை 9,211 கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை கண்டறியப்பட்டது. அம்மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியுள்ளது.
மாநிலங்களில் ஒரே நாளில் 10,000 க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கையை பதிவுசெய்தது என்பது இது இரண்டாவது முறையாகும். ஜூலை 22ம் தேதி மகாராஷ்டிரா 10,500க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கையை புதிதாக கண்டறிந்தது.
மகாராஷ்டிராவில் மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில், முதல் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று கண்டறியப்பட்டதிலிருந்து, அம்மாநிலம் நாட்டில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா வைரஸ் தொற்றுகளை பங்களித்து வருகிறது. ஆரம்ப நாட்களில் மற்ற மாநிலங்களான கேரளா, டெல்லி, தெலங்கானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் மட்டுமே கொரோனா வைரஸ் பரவல் இருந்தது. அந்த நேரத்தில் இம்மாநிலங்களில் மகாராஷ்டிராவைவிட அதிகமான தொற்று எண்ணிக்கை பதிவாகியிருந்தன. ஆனால், அந்த நாட்களில் தினசரி புதிய கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் இருந்தன.
இந்த எண்ணிக்கை அதிகரித்தபோது, தேசிய அளவில் மகாராஷ்டிராவின் பங்களிப்பு மற்றவர்களைவிட மிக அதிகமாக இருந்தது. அதன் உச்சத்தில், மே மாதத்தில், இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கண்டறியப்பட்ட தொற்று எண்ணிக்கையில் 40 சதவீதத்திற்கும் அதிகமான கொரோனா வைரஸ் தொற்றுகள் மகாராஷ்டிராவிலிருந்து வருகின்றன. அந்த நாட்களில் நாட்டின் மொத்த கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கையில் 35 சதவீதத்திற்கும் மேல் அம்மாநிலத்தில் இருந்தது.
இந்த பங்களிப்புகள் இப்போது படிப்படியாக குறைந்துவிட்டன. தற்போது நாட்டில் ஒவ்வொரு நாளும் கண்டறியப்படும் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கையில் 20%க்கும் குறைவான தொற்றுகள் மகாராஷ்டிராவில் இருந்து இடம்பெறுகிறது. நாட்டின் மொத்த கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கையில், மகாராஷ்டிராவின் பங்கு வெறும் 25% ஆக (அதாவது தேசிய அளவில் 15.85 லட்சத்தில் 4 லட்சம்) குறைந்துள்ளது.
அப்படியிருந்தும், தினசரி புதிய கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கையைப் பொருத்தவரை மகாராஷ்டிராவின் நிலையை தாண்டமுடியாத அளவில் இருந்தது. ஆனால், மகாராஷ்டிராவின் தினசரி கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கையை தாண்டிய முதல் மாநிலமாக ஆந்திரப் பிரதேசம் உள்ளது.
ஆந்திரப் பிரதேசம் இந்த மாதத்தில் அதன் போக்கில் ஒரு தனித்துவமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. அதன் மொத்த தொற்று எண்ணிக்கை ஜூன் மாத இறுதியில் 15,000க்கும் குறைவாக இருந்து. இப்போது 1.2 லட்சத்துக்கு மேல் அதிகரித்துள்ளது. அது கிட்டத்தட்ட 725 சதவீதம் அதிகரித்துள்ளது. வழக்கமாக, பெரிய அளவில் தொற்று எண்ணிக்கைகளைக் கொண்ட மாநிலங்களில் அதிக தொற்று எண்ணிக்கையின் வளர்ச்சி நீண்ட காலம் இருக்காது. அவற்றின் தொற்று எண்ணிக்கை வளர்ச்சி சில நாட்களுக்குப் பிறகு வீழ்ச்சியடையும். ஏனென்றால், அந்த வளர்ச்சியைத் தக்கவைக்க மாநிலங்கள் ஒவ்வொரு நாளும் அதிக எண்ணிக்கையிலான தொற்றுகளைக் கண்டறிய வேண்டும். இந்த மாதத்தில் அதிக தொற்று எண்ணிக்கைகளைக் காட்டிய தெலங்கானா, தமிழ்நாடு அல்லது கர்நாடகா போன்ற மாநிலங்கள் சில நாட்கள் அல்லது வாரங்களுக்குப் பிறகு மெதுவாக அல்லது ஒரு நிலையான எண்ணிக்கையை அடைந்துள்ளன. அம்மாநிலங்கள் ஒவ்வொரு நாளும் இதேபோன்ற எண்ணிக்கையில் கொரோனா தொற்றுகளை தொடர்ந்து கண்டறிந்தாலும், தொற்று வளர்ச்சி, சதவீதத்தில் வீழ்ச்சியடைந்துள்ளன.
இருப்பினும், ஆந்திரப் பிரதேசம் இந்த போக்கை மீறி நீண்ட காலமாக மிக அதிக தொற்று வளர்ச்சியைத் தக்க வைத்துக்கொண்டுள்ளது. ஜூலை மாதத்தில், அதன் தொற்று எண்ணிக்கை ஒரு நாளைக்கு சராசரியாக 7.55 சதவீதமாக அதிகரித்துள்ளன. ஆந்திராவுடன் ஒப்பிடக்கூடிய ஒரே மாநிலம் கர்நாடகா மாநிலம் ஆகும். கர்நாடகாவில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை ஒரு நாளைக்கு 7.14 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த மாதத்தில் கர்நாடகாவின் தொற்று எண்ணிக்கை 15,242இல் இருந்து 1,12,504 ஆக உயர்ந்து 638 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஆந்திராவில் புதன்கிழமை 10,000 க்கு மேல் கொரோனா தொற்றுகள் பதிவாகியுள்ளன. இந்த நாட்களில் 7,000 முதல் 8,000 வரை தொற்றுகள் பதிவாகியுள்ளது. நாட்டின் மொத்த புதிய தொற்றுகளின் எண்ணிக்கை முதல் முறையாக 50,000 ஐத் தாண்டியது. இப்போது ஒரு வாரத்திற்கும் மேலாக, இந்த எண்ணிக்கை 50,000க்கு அருகே பதிவாகி வருகிறது. ஆனால், அது குறைந்துள்ளது. இருப்பினும், புதன்கிழமை, 52,123 புதிய தொற்றுகள் கண்டறியப்பட்டன. இந்தியாவில் இந்த கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை இப்போது 15.83 லட்சமாக உள்ளது.
நோயிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையும் புதன்கிழமை 1 மில்லியனைத் தாண்டியது. 10.2 லட்சத்துக்கும் அதிகமானோர் அல்லது பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 64 சதவீதம் பேர் இப்போது குணமடைந்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.