டெல்லியில் மீண்டும் தலை தூக்குகிறதா கொரோனா பாதிப்பு?

covid-19 Pandemic : பீகார்,  உத்தரபிரதேச மாநிலங்களில் இருந்து புலம்பெயர்த்  தொழிலாளர்கள் மீண்டும் டெல்லிக்கு திரும்புவதால் இந்த போக்கு காணப்படலாம்

By: Updated: August 30, 2020, 05:30:40 PM

Covid-19 Updates:  கடந்த சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளிலும் கொரோனா பாதிப்பு ஏறக்குறைய ஒரே நேரத்தில் அதிகரித்தன. மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, டெல்லி, ஒடிசா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் ஒரு வாரத்திற்கு முன்பிருந்த நிலையை விட, தற்போது அதிகமான பாதிப்புகள் பதிவாக தொடங்கியது.

தினசரி சோதனைகளின் எண்ணிக்கையை அதிகரித்த காரணத்தால், தெலுங்கானா, கர்நாடகா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று ஓரளவு உயர்வைக் கண்டன என்று  கருதலாம். ஆனால், மற்ற மாநிலங்களில் பரிசோதனை எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு எதுவும் ஏற்படவில்லை.

இதில் அதிகப்படியாக, மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று மட்டும் 16,000 க்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டன. தற்போதைய உயர்வுக்கு முன்னர், 12,000 க்கும் குறைவான  தினசரி பாதிப்பை அம்மாநிலம் பதிவு செய்து வந்தது.

ஜூலை மாதத்தில் அதிகப்படியான உயர்வைக் கண்ட ஆந்திரா மாநிலம், கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் சரிவின் அறிகுறிகளைக் காட்டத் தொடங்கின. ஆனால் கடந்த ஐந்து  நாட்களாக, தினசரி பாதிப்பு எண்ணிக்கை 10,000 க்கும் அதிகமாக உள்ளது. ஆந்திரா, தற்போது உச்சக்கட்ட பாதிப்பு நிலையை நோக்கி நகர்கிறது. தமிழகத்தின் கோவிட்- 19 பாதிப்பு எண்ணிகையை ஆந்திரா இன்று முந்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், மிகவும் சுவாரஸ்யமான விசயங்கள் தேசிய தலைநகர் புதுடெல்லியில் அரங்கேறுவதாக தெரிகிறது. ஜூன் மாதம் கடைசி வாரங்களில், கொரோனா பாதிப்பின்  கோர பிடியில் இருந்து புது டெல்லியில் மீளத் தொடங்கியது. கடந்த ஒன்றரை மாதங்களாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை வீழ்ச்சியடையத் தொடங்கின. வளர்ச்சி விகிதம் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்தது. புதிய  பாதிப்புகளை விட, கொரோனா நோய்த் தொற்றில் இருந்து  குணமடைந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தது. இதனால், டெல்லி தனது உச்ச நிலையை அடைந்து, கொரோனா தாக்கத்தில் இருந்து வெளிவருவதாகவும் கருதப்பட்டது.

ஆனால் கடந்த பத்து நாட்களில், டெல்லி மீண்டும் ஒரு  அசாதாரண போக்கை சந்தித்து வருகிறது. இந்த அசாதாரண போக்கு நீண்ட காலம்  தொடர்வதால், இது சாதாரண பிறழ்வு என்று எடுத்துக் கொள்ள முடியாது. சனிக்கிழமையன்று மட்டும் டெல்லியில்  2,000 க்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டன. ஜூலை 10க்குப் பின் இத்தகைய ஒரு நாள் அதிகப்பட்ச பாதிப்பு காணப்படவில்லை. தினசரி வளர்ச்சி விகிதமும் தர்போது 1 சதவீதத்தை எட்டியுள்ளது. பீகார்,  உத்தரபிரதேச மாநிலங்களில் இருந்து புலம்பெயர்த்  தொழிலாளர்கள் மீண்டும் டெல்லிக்கு திரும்புவதால் இந்த போக்கு காணப்படலாம் என்று சில கருத்துக்கள் உள்ளன.

செப்டம்பர் 7 ம் தேதி முதல் மெட்ரோ ரயில்கள் இயங்கும். செப்டம்பர் 21ம் தேதி முதல் விளையாட்டு, பொழுதுபோக்கு, சமூக மற்றும் மதம் சார்ந்த நிகழ்வுகள்  வழிகாட்டுதல்களை பின்பற்றி 100பேர் கலந்து கொள்ளும் வகையில் நடத்த அனுமதிக்கப்படும். மத்திய அரசுடன் முன்னரே ஆலோசிக்காமல் கட்டுப்பாடு மண்டலங்களுக்கு வெளியே எந்த ஒரு உள்ளூர் பொது முடக்கத்தையும் (மாநில / மாவட்ட / உள்-வட்ட / மாநகர / கிராம அளவில்) மாநில / யூனியன் பிரதேச அரசுகள் அமல்படுத்தக்கூடாது என்று 4ம் கட்ட  ஊரடங்கு தளர்வு வழிமுறைகளில் தெரிவிக்கப்பட்டது.   இதனால், டெல்லியில் வரும் நாட்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சவாலை எதிர்கொள்ள, கொரோனா  பரிசோதனை சோதனை திறனை மேலும் அதிகரிப்பதாக  டெல்லி அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

சனிக்கிழமையன்று, ஒடிசா மாநிலத்தின் கொரோனா பாதிப்பு  1 லட்சத்தைத்  தாண்டியது. 1 லட்சம் பாதிப்பு பட்டியலில்  சேர்ந்த 11 வது மாநிலமாக ஒரிசா திகழ்கிறது. நேற்று, ஓடிசா  மாநிலம் ஒருநாள் அதிகபட்ச உயர்வாக 3,000 க்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்பைக் கண்டறிந்ததன் மூலம், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 22,000 க்கும் அதிகமாக உள்ளது .

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், 79,000  பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.  இது இதுவரை இல்லாத வகையில் ஒருநாள் அதிகபட்ச உயர்வாகும். இந்தியாவின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை சனிக்கிழமையன்று 35 லட்சத்தைத் தாண்டியது.கடந்த நான்கு நாட்களாக, இந்தியா 7 5,000 க்கும் மேற்பட்ட புதிய பாதிப்புகளை பதிவு செய்து வருகிறது. இறப்பு எண்ணிக்கை 63,500 ஐ எட்டியுள்ளது. மேலும், நோய் பாதிக்கப்பட்டவர்களில் 0.29 சதவிகித நோயாளிகள் செயற்கை சுவாசக்குழாய் பொருத்தப்படும் நிலையில் உள்ளனர். 1.93 சதவீதம் பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். 2.88 சதவீதம் பேர் பிராணவாயு செலுத்தும் நிலையில் உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

Web Title:India coronavirus numbers explained coronavirus latest news updates covid 19 pandemic

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X