/tamil-ie/media/media_files/uploads/2020/09/New-Project-32-1.jpg)
கொரோனா வைரஸ் தினசரி புதியதாக கண்டறியப்படும் தொற்று கடந்த 2 வாரங்களாக 1 லட்சத்துக்கு அருகே பதிவாகி வருகிறது. ஆனால், இப்போது உண்மையில், அந்த எண்ணிக்கையைவிட கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை தாண்டிவிட்டது.
திங்கள்கிழமை 1.01 லட்சம் கொரோனா வைரஸ் நோயாளிகள் தொற்றில் இருந்து குணமடைந்ததாக அறிவிக்கப்பட்டனர். அதே நேரத்தில், தினசரி கொரோனா வைரஸ் புதிய தொற்று கண்டறிதல்கள் 75,000க்கு குறைந்தது. இது ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதன் விளைவாக அமைந்தது. இந்த ஞாயிற்றுக்கிழமை பரிசோதனைகளின் எண்ணிக்கை கடுமையாக குறைந்தது. வழக்கமாக மற்ற நாட்களில் 11 லட்சம் முதல் 12 லட்சம் மாதிரிகள் வரை பரிசோதனை செய்யப்படுவதற்கு பதிலாக அன்று 7.3 லட்சம் மாதிரிகள் மட்டுமே பரிசோதனை செய்யப்பட்டன.
கடந்த சில நாட்களில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் சீரான உயர்வு காணப்படுகிறது. அது புதிய தொற்றுகள் கன்டறிவதில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களால் பாதிக்கப்படவில்லை. வழக்கமாக, கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2 வாரங்களாக தினசரி புதிய தொற்றுகள் கண்டறியப்படும் எண்ணிக்கையை பிந்தொடர்ந்து வந்தது. இது தொற்று பாதிக்கப்பட்ட ஒருவர் இயல்பாக தொற்றில் இருந்து குணமடையும் நேரமாக உள்ளது. ஆனால், இப்போது பல நாட்களாக, கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை தினசரி புதிய தொற்றுகளை விட அதிகமாக உள்ளன. ஏனென்றால், முந்தைய நாட்களில் கணக்கில் சேர்க்கப்படாத, சில குணமடைந்தவர்களின் எண்ணிக்கையை மாநில அரசாங்கங்களால் வெளியிடப்பட்ட தரவுகளில் சேர்க்கப்படுகின்றன.
கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு மற்றும் புதிய தொற்றுகள் கண்டறியப்படுதலில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, நாட்டில் சிகிச்சை பெற்றுவரும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனுக்கும் குறைவாக இருப்பதை உறுதி செய்துள்ளன.
இருப்பினும், இவை அனைத்தும் ஒரு தற்காலிக போக்காக இருக்கக்கூடும். மேலும், வரும் வார நாட்களில் இது மாறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தினசரி புதிய தொற்று கண்டறிதல்களின் எண்ணிக்கை 90,000க்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எண்ணிக்கை, உடனடியாக 1 லட்சத்தைக் கடக்கவில்லை என்றால் சிகிச்சை பெறும் கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை மீண்டும் மேலே உயரத் தொடங்கும்.
உண்மையில் கொரோனா வைரஸ் தொற்று விகிதம் அல்லது பரிசோதனை செய்யப்பட்டவர்களில் தொற்று கண்டறியப்பட்ட நபர்களின் எண்ணிக்கை கடந்த 10 நாட்களில் ஓரளவு மேல்நோக்கி செல்லும் போக்கைக் காட்டுகிறது. அதாவது, அதே எண்ணிக்கையிலான பரிசோதனைகளில் அதிக மக்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளனர். அதனால், வார நாட்களில் பரிசோதனை எண்ணிக்கை இயல்பு நிலைக்கு திரும்புவதால், அதிக எண்ணிக்கையில் கொரோனா தொற்று கண்டறியப்படுவதற்கு வழிவகுக்கும்.
உலக அளவில் கொரோனா வைரஸ் தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கை ஓரிரு நாட்களில் 1 மில்லியனைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலக அளவில் கொரோனா வைரஸ் தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கை இப்போது 9,60,000 ஆக உள்ளது. இதில் இந்தியாவின் பங்கு 9 சதவீதத்திற்கும் சற்று அதிகம். இந்த மாத தொடக்கத்தில் இருந்து, ஒவ்வொரு நாளும் 1,000க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியுள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை நிலவரப்படி இறப்பு எண்ணிக்கை 88,935ஐ எட்டியுள்ளது.
ஒவ்வொரு நாளும் அதிக எண்ணிக்கையில் புதிய தொற்றுகளை பங்களிப்பு செய்யும் மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரா ஆகிய 2 மாநிலங்களில் பரிசோதனைகள் குறைக்கப்பட்டதால் திங்கள்கிழமை கண்டறியப்பட்ட புதிய தொற்றுகள் கணிசமாக குறைந்து பதிவாகியுள்ளன.மகாராஷ்டிரா, தினமும் கிட்டத்தட்ட 25,000 புதிய தொற்றுகளை பதிவு செய்து வருகிறது. திங்கள்கிழமை 16,000க்கும் குறைவாக புதிய தொற்றுகள் கண்டறியப்பட்டன. அதே நேரத்தில், ஆந்திரா 6,000 புதிய தொற்றுகளைக் கண்டறிந்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.