ஒவ்வொரு நாளும் அதிகப்படியான கொரோனா பாதிப்புகளை புகாரளித்து வந்தாலும், பெரிய அபாய கட்டத்தை கேரளா மாநிலம் குறைந்தபட்சம் கடந்துவிட்டதாகத் தெரிகிறது. கடந்த மூன்று வாரங்களாக, சிகிச்சை பெற்றுவருபவர்களின் எண்ணிக்கையில் நிலையான சரிவு காணப்படுகிறது. தற்போது, நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 70,000 ஆக குறைந்துள்ளது. மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக இது நாட்டின் இரண்டாவது அதிகப்படிய எண்ணிக்கையாகும்.
செப்டம்பர் முதல் அக்டோபர் வரை, கேரளா தேசிய சராசரியை விட அதிகமான கொரோனா பாதிப்புகளை கண்டது. ஒரு கட்டத்தில், தினசரி பாதிப்பு எண்ணிக்கையில் மகாராஷ்டிராவையும் விஞ்சியது. ஒரு சில சந்தர்ப்பங்களில், தினசரி பாதிப்பு எண்ணிக்கை 10,000க்கும் அதிகமாக அதிகரித்தன. எவ்வாறாயினும், அனைவராலும் கணிக்கப்பட்ட ஒரு மோசமான சூழலை கேரளா தவிர்த்துவிட்டதாக தெரிகிறது.
அம்மாநில சுகாதார அமைச்சர் கே.கே. ஷைலஜா முன்பு தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம்,” கேரளாவில், கொரோனா நோய்த் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட விகிதமும் (positivity rate), தினசரி பாதிப்பும் அதிகரித்து வருகின்றன. வரும் நாட்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 20,000-ஐ விட அதிகமாக இருக்கும். அதை, 15,000 க்கும் குறைவான நிலையில் வைத்திருப்பதில் கவனம் செலுத்தி வருகிறோம். நவம்பர் மாத இறுதியில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறையத் தொடங்கும்” என்று கூறியிருந்தார். இருப்பினும், கடந்த மாதம் 10ம் தேதி, பதிவான 11, 755 என்ற எண்ணிக்கை தான் தற்போது வரை அம்மாநிலத்தின் உச்சக்கட்ட பாதிப்பாக இருந்து வருகிறது.
கடந்த 7 நாட்களாகவே, கேரளாவில் தினசரி தொற்று பாதிப்பு 7,000க்கும் குறைவாக உள்ளது. தினசரி பாதிப்பு எண்ணிக்கையில், கேரளா நாட்டின் 2வது இடத்தில் இருந்தாலும், சீரான முறையில் அங்கு கொரோனா பாதிப்பு குறைந்துவருவதை காணமுடிகிறது.
ஒரு வாரத்திற்கு முன்பு, 8,500 என்ற அதிகப்படியான கொரோனா பாதிப்பை பதிவு செய்த டெல்லி, கடந்த 2 நாட்களாக மிகக் குறைவான பாதிப்புகளை உறுதி செய்து வருகிறது. ஒப்பிட்டளவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை குறைவாக இருப்பது இதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மேற்கொண்ட பரிசோதனைகளை விட, டெல்லியின் தற்போதைய சோதனை எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது. எனவே,டெல்லியின் தற்போதைய போக்கு மிகவும் தற்காலிகமானது. தொடர்ந்து 10 நாட்களுக்கு மேலாக, நாட்டில் அதிகப்படியான பாதிப்புகளை டெல்லி பதிவு செய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதில், கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், தேசிய தலைநகரில் இறப்பு எண்ணிக்கையும் கடுமையாக அதிகரித்து வருகிறது. சில நாட்களாக, மகாராஷ்டிரா மாநிலத்தைத் தவிர்த்து, இந்தியாவின் வேறு எந்த மாநிலத்தையும் விட டெல்லியில் அதிகப்படியான இறப்புகள் பதிவாகி வருகின்றன. கடந்த 7 நாட்களாக, தினசரி இறப்பு எண்ணிக்கை அங்கு 90க்கும் அதிகமாக உள்ளது. இதுவரை, கோவிட்- 19 நோய்த் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7,800 ஆக அதிகரித்துள்ள நிலையில், நாட்டில் மகாராஷ்டிரா, கர்நாடகா தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கு அடுத்தப்படியாக டெல்லியின் இறப்பு எண்ணிக்கை உள்ளது.
இதற்கிடையே, அண்டை மாநிலமான ஹரியானாவில், கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை இரண்டு லட்சத்தை தாண்டியது. கடந்த இரண்டு வாரங்களாக, ஹரியான ஒரு அசாதாரண பாதிப்பை கண்டு வருகிறது. தற்போது, அதன் தினசரி பாதிப்பு வளர்ச்சி விகிதம் டெல்லிக்கு அடுத்துள்ளது. கடந்த 7 நாட்களில், ஹரியானாவில் புதிதாக 16,000க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. தேசிய அளவில், குறைந்தது 15 மாநிலங்களில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 2 லட்சத்தைக் கடந்தது.
கடந்த 24 மணி நேரத்தில், நாட்டில் 44,739 பேர் குணமடைந்துள்ளனர். ஆனால் புதிதாக 38,617 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 6,122 குறைந்து தற்போது 4,46,805 ஆக உள்ளது. கொவிட் மொத்த பாதிப்பில் இது 5.01 சதவீதம்.
குணமடைவோர் வீதம் இன்று 93.52 சதவீதமாக உள்ளது. குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 83,35,109 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 474 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 78.9 சதவீதம் பேர் 10 மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் சேர்ந்தவர்கள்.
இந்தியாவில், தொடர்ந்து 11- வது நாளாக, தினசரி தொற்று பாதிப்பு எண்ணிக்கை 50,000-க்கு கீழ் உள்ளது. தொடர்ந்து 3 வது நாளாக கொரோனா தினசரி தொற்று பாதிப்பு சுமார் 40,000க்கும் கீழ் உள்ளது. ஆனால், இந்த போக்கு கொரோனா பரிசோதனை எண்ணிக்கை சீராக குறைந்து வருவதால் ஏற்பட்டிருக்கலாம். உதரணாமாக, தொடர்ந்து 5 நாட்களாக, சோதனை எண்கள் பத்து லட்சத்திற்கும் குறைவாகவே உள்ளன. கடந்த மூன்று மாதங்களில் இத்தகைய குறைப்பு காணப்படவில்லை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil