/tamil-ie/media/media_files/uploads/2020/09/image-1-2.jpg)
கேரளாவில் நேற்று மட்டும் 3,000 க்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டதை அடுத்து, அங்கு தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது. நாட்டில், 1 லட்சம் பாதிப்புகளை உறுதி செய்த 13 வது மாநிலமாக கேரளா விளங்குகிறது.
ஏப்ரல் மாத இறுதியில், தினசரி பாதிப்பு எண்ணிக்கை 500 ஆக இருந்த நிலையில், கேரள அரசின் நோய்த் தடுப்பு நடவடிக்கை காரணமாக தினசரி பாதிப்புகள் ஒற்றை இலக்கு எண்ணிக்கையில் சுருங்கின. கொரோனா பாதிப்பு இல்லாத நாட்களையும் கேரளா கண்டது.
அன்றைய காலங்களில், மகாராஷ்டிராவின் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 1,000- த்தை தாண்ட தொடங்கின. டெல்லி, தமிழ்நாடு, குஜராத் போன்ற மாநிலங்கள் தினசரி பல நூறு பாதிப்புகளை பதிவு செய்து வந்தன. இதனால், கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில் முன்னுதாரணமாக கேரளா அப்போது அனைவராலும் பாராட்டப்பட்டது.
ஆனால், அதற்குப் பிறகு நிலைமை முற்றிலும் மாறத் தொடங்கியது. முதன்முறையாக பொது முடக்கநிலையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டவுடன், கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சீராக அதிகரிக்கத் தொடங்கின. ஜூலை மாதத்தில் இருந்து நாட்டில் அதிகப்படியான பாதிப்பு விகிதத்தை கேரளா பதிவு செய்ய ஆரம்பித்தது. இருப்பினும், மொத்த பாதிப்பின் ஒப்பிட்டைப் பார்க்கும் பொழுது, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களை விட கேரளா குறைந்த எண்ணிக்கையில் தான் உள்ளது.
உண்மையில், அதிகபட்ச பாதிப்பைக் கொண்ட முதல் 15 மாநிலங்களில், அதிகப்படியான பாதிப்பு வளர்ச்சி விகிதத்தை கேரளா கொண்டுள்ளது. நாட்டின் தினசரி பாதிப்பு வளர்ச்சி 2.11 சதவீதமாக உள்ள நிலையில், கேரளாவின் பாதிப்பு வளர்ச்சி 3.19 சதவீதமாக உள்ளது. இந்த, விகிதம் மேலும் உயரக்கூடும் என்று கணிக்கப்படுகிறது.
இருப்பினும், கேரளாவில் இறப்பு எண்ணிக்கை இறப்பு விகிதம் ஒப்பீட்டளவில் குறைந்து காணப்படுகிறது . இதுவரை, மாநிலத்தில் கோவிட்-19 தொடர்பான இறப்புகள் 410 என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும், கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்ட 33 பேரின் இறப்புகளை பிற காரணங்கள் என்று தெரிவிக்கப்பட்டன. எவ்வாறாயினும் , கொரோனா காரணமாக உயிரிழப்போரின் எண்ணிக்கை கேரளாவில் தொடர்ந்து குறைவாகவே இருந்து வருகிறது. உயிரிழப்போரின் விகிதம் இந்தியாவில் 1.7 சதவீதமாக இருக்கும் நிலையில், கேரளாவில் இது 0.43 சதவீதமக உள்ளது.
இதற்கிடையே, கொரோனா நோய்த் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை மகாராஷ்டிராவில் ஒரு மில்லியன் (10 லட்சம்) ஐத் தாண்டியது. நேற்று, மட்டும் அங்கு 25,000க்கும் மேற்பட்ட புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டன . அதிக எண்ணிக்கையிலான கொரோனா இறப்புகள் பதிவு செய்யும் மாநிலாமாகவும் மகாராஷ்டிரா திகழ்கிறது. நாட்டின், கொரோனா உயிரிழப்புகளில் 40 சதவீதம் அம்மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
உத்தரபிரதேசம், நேற்று ஒரே நாளில் அதிகபட்ச அளவாக 7,000 க்கும் மேற்பட்ட புதிய பாதிப்புகளை கண்டறிந்தது. அம்மாநிலத்தின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்த்தை நெருங்குகின்றன.
நேற்று, நாடு முழுவதும் 97,500 க்கும் மேற்பட்ட புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டன. இந்தியாவின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 46.59 லட்சமாக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 81,533 கொரோனா நோயாளிகள் குணமடைந்தனர். மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மற்றும் உத்திரப் பிரதேசம் ஆகிய 5 மாநிலங்கள், நாட்டின் 60 சதவீத குணமடைதல்களுக்கு காரணமாக உள்ளன. இதன் மூலம் இந்தியாவில் மொத்த குணமடைந்தோரின் எண்ணிக்கை 36 லட்சத்தை கடந்து 36,24,196ஐ தொட்டுள்ளது. குணமடைந்தோரின் விகிதம் 77.77 சதவீதமாக உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.