ஷ்யாம்லால் யாதவ்
திருமணம் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவை இடம் பெயர்வுக்கு முக்கிய காரணங்கள் என்று மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகள் தெரிவிக்கின்றன. இதில் இடம் பெயர்வு நிகழ்வு பெரும்பாலும் ஒரு மாநிலத்திற்குள்ளேயே நடைபெறுகின்றன என்றும் தெரியவந்துள்ளது.
கடந்த வாரம் வெளியிடப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரம், மகாராஷ்டிராவில் பீகாரிலிருந்து இடம் பெயர்ந்து குடியேறியவர்களைவிட மத்தியப் பிரதேசத்திலிருந்து குடியேறியவர்கள் அதிகம் என்று தெரிவிக்கின்றன. அதே போல, குஜராத்தில் பீகாரில் இருந்து இடம் பெயர்ந்து குடியேறியவர்களைவிட ராஜஸ்தானில் இருந்து இடம் பெயர்ந்து குடியேறியவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரண்டு மடங்காக உள்ளது.
டெல்லியில் 2,321 பேர்கள் மட்டுமே தாங்கள் கடைசியாக வங்கதேசத்தில் வசித்ததாக தெரிவித்துள்ளதாக அந்த தரவுகள் தெரிவிக்கின்றன. 1.17 லட்சத்திற்கும் அதிகமானோர் கடைசியாக தாங்கள் பாகிஸ்தானில் வசித்ததாக தெரிவித்துள்ளது . பிரிவினை வரலாறு காரணமாக இந்த எண்ணிக்கை ஆச்சரியமளிக்கவில்லை.
உலகெங்கிலும் இடம் பெயர்வு ஒரு முக்கிய நிகழ்வாக இருக்கும் நேரத்தில் இந்த தரவுகள் வெளிவந்துள்ளன. மேலும், சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேச மக்கள் பற்றிய பிரச்னை ஒரு முக்கிய அரசியல் பிரச்னையாகவும் உள்ளது. இந்த தரவுகள் மிகவும் தாமதமாக வெளியாகிருக்கிறது ஏனென்றால் இது கிட்டத்தட்ட 2021 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான நேரம். அதனால், அது தற்போதைய நிலையை பிரதிபலிக்காது.
2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 45.58 கோடிக்கும் மேலான இந்தியர்கள் பல்வேறு காரணங்களுக்காக இடம்பெயர்ந்திருக்கிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய 2001 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பில் இடம்பெயர்ந்து குடியேறியவர்களின் எண்ணிக்கை 31.45 கோடி என்று பதிவாகியுள்ளது. இது 2011 ஆம் ஆண்டைவிட 30 சதவீதத்துக்கும் குறைவு..
இந்தியாவின் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர் மற்றும் தலைமை பதிவாளரின் இணையதளத்தின் புள்ளிவிவரப்படி, “ஒரு நபர் தனது பிறந்த இடத்தை தவிர வேறு இடத்தில் அவர் மக்கள்தொகை கணக்கெடுப்பில் கணக்கிடப்படும்போது அவன்/அவள் ஒரு இடம்பெயர்ந்தவர் அல்லது குடியேறியவர்கள் என்று கருதப்படுகிறார்கள். இந்த இடம்பெயர்வு புள்ளிவிவரம் 1872 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு முதல் தொடங்கியது. ஆனால், அது 1961 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு வரை விவரமாக இல்லை. மக்கள்தொகை கணக்கெடுப்பில் அறிமுகப்படுத்தப்பட்ட மாற்றங்கள் 2001 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு வரைக்கும் தொடர்ந்தன. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் இடம்பெயர்ந்தவர்கள் தொடர்பான தகவல்களை சேகரிப்பதற்கு ஒரு விரிவான முறை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
திருமணம் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவை இடம் பெயர்வுக்கு முக்கிய காரணங்கள் என்று மக்கள்தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இடம்பெயர்வின் பெரும்பகுதி தனிப்பட்ட மாநிலங்களுக்குள் நடைபெறுகின்றன. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் " இடம்பெயர்ந்தவர்கள் அல்லது குடியேறியவர்கள்" என்று பதிவுசெய்யப்பட்ட மொத்த நபர்களில், 11.91% (5.43 கோடி பேர்கள்) மட்டுமே ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்கு குடியேறியுள்ளனர். அதே நேரத்தில், கிட்டத்தட்ட 39.57 கோடி பேர் அவர்களின் மாநிலங்களுக்குள்ளேயே இடம்பெயர்ந்துள்ளனர்.
சில முக்கிய மாநிலங்களுக்கான இடம்பெயர்வு தரவுகளையும் அதன் முக்கிய சிறப்பம்சங்களையும் கீழே காணலாம்.
மகாராஷ்டிராவில் குடியேறிவர்களில் 5.74 கோடி பேர்களில் 27.55 லட்சம் பேர் தாங்கள் உத்தரப் பிரதேசத்திலிருந்து குடியேறியதாக தெரிவித்துள்ளனர். 5.68 லட்சம் பேர் பீகாரிலிருந்து குடியேறியதாக தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிராவில் மாநிலத்துக்குள்ளேயே இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 4.79 கோடி பேர்கள் என பெரும்பகுதியைக் கொண்டுள்ளது.
உத்தரப்பிரதேசம் இந்தியா முழுவதும் வேலை தேடி பயணம் செய்தவர்களுக்கு பெரிய அளவில் தஞ்சம் அளித்துள்ளது. அந்த மாநிலம் 5.65 கோடி குடியேறியவர்களைக் கொண்டுள்ளது. அதில், 5.20 கோடி பேர்கள் அந்த மாநிலத்துக்குள்ளேயே குடியேறிவர்கள். மேலும், அதில், 40.62 லட்சம் பேர் இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இருந்து குடியேறியவர்கள். பீகாரிலிருந்து 10.73 லட்சம் பேர்கள் குடியேறியவர்களைக் கொண்டுள்ளது.
மற்ற மாநிலங்களில் இருந்து பஞ்சாப்பில் குடியேறியவர்களின் எண்ணிக்கை 24.88 லட்சம் பேர்கள் ஆகும். இது அந்த மாநிலத்தின் மொத்த இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கையான 1.37 கோடி பேர்களில் ஒப்பீட்டளவில் பெரிய சதவீதம் ஆகும். இவர்களில் 6.50 லட்சம் பேர்கள் தங்களுடைய பூர்வீகம் உத்தரப்பிரதேசம் என தெரிவித்துள்ளனர். பீகாரைச் சேர்ந்தவர்கள் என 3.53 லட்சம் பேர்கள் தெரிவித்துள்ளனர்.
குஜராத்தில் மொத்த இடம்பெயர்ந்தவகளின் எண்ணிக்கையான 2.69 கோடி பேர்களில் 42 சதவீதத்துக்கும் அதிகமானோர் அதாவது 39.16 லட்சம் பேர்கள் பிற மாநிலங்களில் இருந்து குடியேறியவர்கள் ஆவர். இதில் உத்தரப்பிரதேசத்திலிருந்து குடியேறியவர்கள் 9.29 லட்சம் பேர்கள் என்றும் ராஜஸ்தானிலிருந்து குடியேறியவர்கள் 7.47 லட்சம் பேர்கள் என்று இந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
அஸ்ஸாமில் நீண்ட காலமாக பங்களாதேஷில் இருந்து சட்டவிரோதமாக குடியேறுவது ஒரு பிரச்சினையாக இருந்து வருகிறது. 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 64,117 பேர்கள் அண்டை நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து வந்திருப்பதாக தெரிவித்துள்ளதாக பதிவாகியுள்ளது. இது இந்தியாவுக்கு வெளியே இருந்து புலம்பெயர்ந்து வந்திருப்பவர்களின் மொத்த எண்ணிக்கையான 1,10,314 என்பதில் பாதிக்கும் சற்று அதிகம். அஸ்ஸாமில் இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்து குடியேறிய 4.96 லட்சம் பேர்களில் பீகாரில் இருந்து குடியேறியவர்கள் எண்ணிக்கை 1.47 லட்சம் பேர்கள் என கிட்டத்தட்ட 30 சதவீதமாக பெரும்பகுதியைக் கொண்டுள்ளது.
மேற்குவங்கத்தில் பிற மாநிலங்களில் இருந்து குடியேறியவர்களின் மொத்த எண்ணிக்கையான 23.81 லட்சம் பேர்களில் 11.04 லட்சம் பேர்கள் பீகாரில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள். மேலும், அம்மாநிலத்தில் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் தாங்கள் இந்தியாவுக்கு வெளியே இருந்து புலம்பெயர்ந்து வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அவர்களில் கிட்டத்தட்ட 19 லட்சம் பேர்கள் பங்ளாதேஷை சேர்ந்தவர்கள் என்று தெரிவித்துள்ளனர்.
கேரளாவில் பீகாரிலிருந்து இடம்பெயர்ந்து வந்தவர்கள் சமீபத்தில் செய்தியாக வெளியானது. 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 9,904 பேர்கள் மட்டுமே பீகாரிலிருந்து குடியேறியுள்ளதாக பதிவாகியுள்ளது. மேலும், கேரளாவில் 1.53 லட்சம் பேர்கள் தங்களுடைய முந்தைய இருப்பிடம் இந்தியாவுக்கு வெளியே இருந்ததாக தெரிவித்துள்ளனர்.
இந்த கோப்பு தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் இந்திய தலைமைப் பதிவாளரிடம் இருந்து பெற்ற தற்காலிக இடம்பெயர்வு புள்ளிவிவரங்கள் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு முன்பு “சில அமைச்சகங்கள் மற்றும் சிஇஏ (தலைமை பொருளாதார ஆலோசகர்) ஆகியோரின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு வெளியிடப்பட்டது. நாடு முழுவதும் உள்ள அதிகார வரம்பு மாற்றங்கள் குறித்த விவரங்களை சேகரிக்கத் தொடங்கியபோது, டிசம்பர் 2017 இல் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021 ஆம் ஆண்டுக்கான தயாரிப்புகளை இந்திய தலைமைப் பதிவாளர் தொடங்கியுள்ளார் என்பதும் அதன் உண்மையான கணக்கெடுப்பு 2021 பிப்ரவரி 9 முதல் 28 வரை மேற்கொள்ளப்பட உள்ளது தெரியவந்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.