Advertisment

இந்தியா- இலங்கை படகு சேவை 40 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொடக்கம்: வாய்ப்புகளும் சவால்களும்

நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு படகு போக்குவரத்து மீண்டும் தொடக்கம்; இரு தரப்பிலும் மதச் சுற்றுலா, வணிகம் மேம்பாட வாய்ப்பு; டிக்கெட் கட்டணம் முக்கிய சவால்

author-image
WebDesk
New Update
ferry service

இந்தியாவின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறை இடையே படகு சேவையை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். (ட்விட்டர்/ @MEAindia)

Arun Janardhanan 

Advertisment

தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் இருந்து யாழ்ப்பாணத்தில் உள்ள காங்கேசன்துறை வரையிலான பயணிகள் படகு சேவையின் தொடக்கத்தின் மூலம் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பழமையான கடல் பாதை புத்துயிர் பெற்றது.

ஆங்கிலத்தில் படிக்க: India-Sri Lanka ferry service restarted after 40 yrs: Opportunities, challenges

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துதல், சுற்றுலாத்துறையை மேம்படுத்துதல் மற்றும் மக்களுக்கு இடையிலான உறவுகளை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டது இந்த முயற்சி. இது இரு கரைகளிலும் உள்ள உள்ளூர் வியாபாரிகளுக்கு பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய படகு சேவை

படகு சேவை சனிக்கிழமை தொடங்கப்பட்டது. அதிவேக கிராஃப்ட் என்ற கப்பலின் பெயர் செரியபாணி’.

ஒரு வழி டிக்கெட்டுக்கு தோராயமாக ரூ.7,670 செலவாகும், ஒரு பயணி 40 கிலோ வரை பொருட்களை எடுத்துச் செல்லலாம். காலை 7 மணிக்கு நாகப்பட்டினத்தில் இருந்து புறப்படும் பயணம், 11 மணிக்கு காங்கேசன்துறையை அடையும், மதியம் 1.30 மணிக்குத் திரும்பும் பயணம், மாலை 5.30 மணிக்கு நாகப்பட்டினத்தை வந்தடைகிறது.

முந்தைய பாதை

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடல்சார் தொடர்பு புதிதல்ல. இந்தோ-சிலோன் எக்ஸ்பிரஸ் அல்லது போட் மெயில் 1900களின் தொடக்கத்தில் இருந்து 1982 வரை தூத்துக்குடி துறைமுகம் வழியாக சென்னைக்கும் கொழும்புக்கும் இடையே இயங்கியது. இருப்பினும், இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின் விளைவாக இந்த சேவைகள் நிறுத்தப்பட்டன.

உள்நாட்டுப் போர் வெடிப்பதற்கு முன், தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னார் செல்லும் பாதை மிகவும் பிரபலமானது. சென்னையிலிருந்து வரும் பயணிகள், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து போட் மெயில் எக்ஸ்பிரஸ் என்ற ரயிலில் ஏறி, பின்னர் தனுஷ்கோடியில் உள்ள நிலக்கரியில் இயங்கும் நீராவி படகுக்கு மாற்றப்பட்டு, சுமார் இரண்டு மணி நேரத்தில் தலைமன்னாருக்குச் சென்றடைவார்கள்.

மீண்டும் தொடங்கும் முயற்சிகள்

குறிப்பாக 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர், படகுச் சேவைகளை மீண்டும் தொடங்குவது சில காலமாக கேள்விக்குறியாகவே உள்ளது. கடல் வழியாகப் பயணிகளை ஏற்றிச் செல்வது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) 2011 இல் கையொப்பமிடப்பட்டு, இதேபோன்ற சேவை தொடங்கப்பட்டது. ஆனால், போதிய வரவேற்பு இல்லாததால் ஆறு மாதங்களுக்கு மேல் நீடிக்கவில்லை.

ராமேஸ்வரத்தில் இருந்து தலைமன்னார் மற்றும் காரைக்காலில் இருந்து காங்கேசன்துறைக்கு சேவைகளை ஏற்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பல்வேறு சவால்கள் இந்த முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்தவிடாமல் தடுத்தன.

புதிய சேவையின் சாத்தியமான தாக்கம்

படகு போக்குவரத்து விருப்பத்தை வழங்குவதன் மூலம், இரு நாடுகளின் கடலோரப் பகுதிகளில் மதச் சுற்றுலாவைப் பெருக்க முடியும். இந்தியாவில் இருந்து, பயணிகள் கொழும்பு மற்றும் இலங்கையின் தெற்குப் பகுதிகளில் உள்ள குறிப்பிடத்தக்க மதத் தளங்களை அணுகலாம். இந்திய யாத்திரை மையங்களான நாகப்பட்டினம், நாகூர், வேளாங்கண்ணி, திருநள்ளாறு மற்றும் கோயில் நகரங்களான தஞ்சாவூர், மதுரை மற்றும் திருச்சி போன்ற இடங்களுக்கு இலங்கை சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத சுற்றுலாவிற்கு அப்பால், படகு சேவைகள் பிராந்திய வணிகம் மற்றும் வர்த்தகத்தை அதிகரிக்கும்.

உள்கட்டமைப்பு மற்றும் திட்டமிடல்

பயணிகளின் வருகையை எதிர்பார்த்து தமிழக அரசு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறது. பயணிகளுக்கு சுமூகமான அனுபவத்தை உறுதி செய்வதற்காக சுங்கம், வெளிவிவகாரம், கப்பல் போக்குவரத்து மற்றும் குடிவரவு போன்ற மத்திய அரசின் பல துறைகளுடன் தமிழக அரசு தொடர்பில் இருப்பதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் கீழ் உள்ள நாகப்பட்டினம் துறைமுகம், 8 கோடி ரூபாய் மதிப்பிலான மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் நிதியுதவியுடன் சமீபத்தில் மேம்படுத்தப்பட்டது.

அக்டோபர் 14 ஆம் தேதி இந்தச் சேவையைத் தொடங்கிவைத்த பிரதமர் நரேந்திர மோடி, இணைப்பு என்பது இரண்டு நகரங்களை நெருக்கமாகக் கொண்டுவருவது மட்டுமல்ல, “நமது நாடுகளையும், நமது மக்களையும், நம் இதயங்களையும் நெருக்கமாக்குகிறதுஎன்று கூறினார்.

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனது காணொலிச் செய்தியில், படகு சேவையின் புத்துயிர்ப்பு இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான தொடர்பை வலுப்படுத்துவதற்கான ஒரு முக்கியமான படியாகும் என்று கூறினார்.

ஆரம்ப சவால்கள்

புதிய முயற்சியின் வெற்றிக்கு அது எவ்வாறு இயக்கப்படுகிறது என்பதுதான் முக்கியம். ஏற்கனவே, படகு திறப்பு விழா கொண்டாடப்பட்ட நிலையில், ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (SCI) இன் ஆரம்பத் திட்டமான, தொடர்ந்து 10 நாட்களுக்கு தினசரி சேவைகளை இயக்கும் திட்டம், வாரத்திற்கு மூன்று முறை செயல்படும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்குவதும் ஒரு காரணம் என்று கூறப்பட்டாலும், நாகப்பட்டினம் துறைமுக வட்டாரங்கள் டிக்கெட் கட்டணம், தோராயமாக ரூ. 7,670, மற்றும் மோசமான டிக்கெட் வழங்கும் நடைமுறைகளும் சவாலாக உள்ளன என்று கூறின. நாங்கள் ஒரு கப்பலை இயக்கத் திட்டமிட்டோம், ஆனால் பயணிகளை எப்படிப் பெறுவது என்று யோசிக்கவில்லை. யோசனைகள் தெளிவற்றவை, மேலும் வேறு இடத்தில் தீர்மானிக்கப்படுகின்றன. இந்தச் சேவை வெற்றிபெற வேண்டுமானால், டிக்கெட் கட்டணங்களைக் குறைத்து, பிரபலமான பயணத் தளங்களில் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட வேண்டும்என்று துறைமுக உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

India Sri Lanka
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment