டிக்- டாக் தடை: இந்தியாவுக்கு பாதிப்பு இல்லை... சீனாவுக்கு?

முன்னதாக, நேரடி அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையில்(FDI) இந்திய அரசு திருத்தம் செய்தது

Anil Sasi , P Vaidyanathan Iyer

லடாக் எல்லைப் பகுதியில் பதட்டங்கள் நிலவி வரும் சூழலில், சீனாவுக்கு அழுத்தம் கொடுக்கும் ராஜதந்திர  நடவடிக்கையாக, குறைந்த மதிப்பிலான தாக்கங்களை ஏற்படுத்தும் மொபைல் செயலிகளை இந்திய அரசு கையில் எடுத்துள்ளது.

சீனாவோடு தொடர்புடைய 59 மொபைல் செயலிகளை தடை செய்வதன் மூலம் வலுவான கூற்றை இந்தியா முன்வைத்துள்ளது. இந்த செயலிகளுக்கு மாற்று ஏற்பாடு கண்டறியும் பட்சத்தில் இந்தியாவுக்கு இது பெரிய பாதிப்பாக அமையாது. ஆனால், இந்தியாவில்  வளர்ந்து வரும் மொபைல் செயலிக்கான சந்தை மதிப்புமிக்க ஒன்றாக சீனா கருதுகிறது. ஏனெனில், இந்தியாவில் இணைய செலவுகள் உலகிலேயே மிகக் குறைவான ஒன்றாகும். 800 மில்லியனுக்கும் அதிகமான நுகர்வோர்களை கொண்ட நாடு இந்தியா. ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானோர் கிட்டத்தட்ட 25 வயதுக்கும் குறைவானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவைப் பொறுத்த வரையில், சீனாவை வணிக ரீதியாக தாக்கும் முதல் பெரிய நடவடிக்கை இதுவாக இருக்கலாம். முன்னதாக, கோவிட்-19 பெருந்தொற்று காலகட்டத்தில் இந்திய கம்பெனிகளை சந்தர்ப்பவசத்தால் வாங்குதல் / கையகப்படுத்துதலை தடுப்பதற்காக நடைமுறையில் உள்ள நேரடி அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையில்(FDI) இந்திய அரசு திருத்தம் செய்தது. அதன் படி, தடை செய்யப்பட்டுள்ள பிரிவுகள் / செயல்பாடுகள் தவிர ஏனையவற்றில், இந்தியாவுடன் எல்லையைப் பகிர்ந்து கொண்டிருக்கும் நாட்டில் உள்ள ஒருவர் அல்லது இந்தியாவில் முதலீடு செய்வதால் பலன் அடையும் உரிமையாளர் அத்தகைய ஏதாவது ஒரு நாட்டின் குடிமகனாக இருந்தால் அல்லது அங்கிருந்தால், இந்திய அரசின் அனுமதி பெற்ற பின்பு தன முதலீடு செய்ய முடியும் என்று தெரிவித்தது.

சரக்கு பொருட்களை தடை செய்யும் முடிவை இந்தியா எடுத்திருக்குமாயின், உலக வர்த்தக அமைப்பிடம் இந்த விவகாரத்தை சீனா கொண்டு சென்றிருக்கும். எனவே,  தொழில்நுட்பத் துறையில் மேற்கொள்ளப்பட்ட இந்த முடிவு புதுதில்லியின் பார்வையில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

மேலும், சரக்குப் பொருட்கள் மீதான தடை, இந்தியாவின் பொருளாதாரத்திலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். சீனாவின் பொருளாதாரத்தில் இதுபோன்ற முடிவு ஒரு சின்ன அழுத்தத்தைக் கூட ஏற்படுத்தாது.

நேரடி அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டதன் விளைவாக, டென்சென்ட், அலிபாபா போன்ற சீன தொழில்நுட்ப நிறுவனங்கள், இந்திய ஐடி ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்வது மிகக் கடினம் என்று சீன முதலீடுகளை கண்காணிக்கும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

2015-19 ஆம் ஆண்டில், அலிபாபா, டென்சென்ட், டிஆர் கேபிடல், ஹில்ஹவுஸ் கேபிடல் உள்ளிட்ட சீன முதலீட்டாளர்கள் இந்திய ஸ்டார்ட்-அப்களில் 5.5 பில்லியன் டாலருக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளனர் என்று இந்தியாவில் தனியார் பங்கு, துணிகர மூலதனம், எம் அண்ட் ஏ பரிவர்த்தனைகள் மற்றும் மதிப்பீடுகளை கண்காணிக்கும் வென்ச்சர் இன்டலிஜென்ஸ் நிறுவனம் தெரிவித்தது.

உண்மையில், தற்போதுள்ள 29 ஸ்டார்ட்- அப் யூனிகார்ன்களில் (அதாவது,1 பில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள்) குறைந்தது 16 நிறுவனங்கள் ஒரு சீன முதலீட்டாளரைக் கொண்டுள்ளது என்று வென்ச்சர் இன்டலிஜென்ஸின் தரவுகள் தெரிவிக்கின்றன.

உலகளாவிய வர்த்தகத்தின் ஒரு பகுதியாக இந்தியா செயல்படுவதால், உண்மையில் சீனாவை மையமாகக் கொண்ட எந்தவொரு கொள்கையையும் இந்தியா உருவாக்கவில்லை என்று முன்னாள் வர்த்தக செயலாளர் ஒருவர் தெரிவித்தார். ஆன்டி –டம்பிங்க் ( இயல்பான விலையை விடக் குறைந்த விலைக்கு ஏற்றுமதி செய்யும் போது விதிக்கப்படுவது) வர்த்தக தடைகள் போன்றவைகள் இந்தியாவின் அதிகபட்ச நடவடிக்கைகளாக இருந்து வந்தன. இருப்பினும், தற்போது மொபைல் உற்பத்தி, செயல்மிகு மருத்துவ பொருட்கள் மற்றும் மருத்துவ சாதனங்கள் போன்ற ஒரு சில குறிப்பிட்ட துறைகளை அரசாங்கம் பார்க்கத் தொடங்கியுள்ளது,” என்று தெரிவித்தார்.

120 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட டிக்டாக் தற்போது இந்தியாவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட மொபைல் செயலியாக உள்ளது. மேலும், கிராமப்புற பகுதிகளில் வாழும் இளைஞர் மத்தியில் ஒரு புதிய கலாசாரத்தை வடிவமைப்பதாகவும் இந்த செயலி  கருதப்படுகிறது,

டிக்டாக் செயலியின் வருவாய் மற்றும் இலாபங்களில் சீனா மற்றும் அமெரிக்கா சந்தையோடு ஒப்பிடுகையில், இந்தியாவின் பங்கு மிகக் குறைவு என்றாலும், செயலியின் 30 சதவீத பதிவிறக்கம் இந்தியாவில் இருந்து செய்யப்படுகிறது.

2012- 2018 ஆம் ஆண்டுக்கு காலகட்டத்தில், ஒரு இந்தியர் ஒரு நாளைக்கு ஆன்லைன் வீடியோக்களைப் பார்க்கும் நேரம் 2 நிமிடங்களில் இருந்து 50 நிமிடங்களுக்கு மேல் சராசரியாக அதிகரித்தது என்று ஜெனித் எனும் ஊடக நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.

டிக்டாக்கை விட  கூகுளுக்கு சொந்தமான யூடியூப் செயலி இந்தியாவில் அதிகமான பயனர்களைக் கொண்டிருந்தாலும், ஒட்டுமொத்த செல்வாக்கின் அடிப்படையில் டிக்டாக் செயலி அதிக திறன் படைத்ததாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவின் கிராமப்புறங்களிலும் தன்னை விரிவுபடுத்தி கொள்ளும் நோக்கில், டிக்டாக் செயலி 15க்கும் மேற்பட்ட பிராந்திய மொழிகளை ஆதரிக்கிறது. இதன்மூலம், உள்ளூர் மட்டத்தில் தனித்தன்மையோடு இருக்கும் திறமைசாலிகளை இந்த செயலி கண்டறிய முடிந்தது.

டிக்டாக் செயலி குழந்தைகள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விடுகிறது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததால், இரண்டு வாரங்களுக்கு டிக்டாக் செயலியின் பதிவிறக்கங்களை இந்திய அரசாங்கம் தடை செய்தது. இதனை எதிர்த்து டிக்டாக் நிறுவனம் மேல்முறையீடு செய்த காரணத்தால், நீதிமன்றம் தனது  தீர்ப்பை மாற்றியமைத்தது.

ஆனால், இந்த முறை டிக்டாக் மீதான தடை நீட்டிக்கவே வாய்ப்புள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close