Advertisment

கபாவில் இந்தியா ஒரு டிராவை வெற்றியாக மாற்றியது எப்படி?

India vs Australia Brisbane Test : கபாவில் (பிரிஸ்பேன்) டிராவாகும் என கணிக்கப்பபட்ட போட்டியை இந்தியா எப்படி வெற்றியாக மாற்றியது என்பது குறித்து ஒரு பார்வை

author-image
WebDesk
New Update
கபாவில் இந்தியா ஒரு டிராவை வெற்றியாக மாற்றியது எப்படி?

India vs Australia Brisbane Test : இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றது. நேற்று முடிவடைந்த இந்த போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. 4 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவும், 2-வது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்ற நிலையில், 3-வது போட்டி டிராவில் முடிந்தது.

Advertisment

இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கடந்த 15-ந் தேதி பிரிஸ்பேனில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 369 ரன்கள் குவித்தது. அடுத்து களமிறங்கிய இந்திய அணி 186 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தாலும், ஆல்ரவுண்டர் வாஷிங்டன் – வேகப்பந்துவீச்சளார் ஷர்துல் தாகூர் இவரும் அரைசதம் அடித்து கை கொடுக்க இந்திய அணி 336 ரன்கள் குவித்து 33 ரன்கள் பின்தங்கியது. இதில் இரண்டு முறை ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது.

தொடர்ந்து 33 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா அணி 294 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணிக்கு 328 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணையிக்கப்பட்டது. இதனையடுத்து பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி 4-வது நாளில் 4 ரன்கள் எடுத்திருந்தபோது மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது. இதனால் இந்திய அணிக்கு 5-வது நாளில் இந்தியாவின் வெற்றிக்கு 324 ரன்கள் தேவைப்பட்டது.

ஆனால் பிரிஸ்பேனில் வானிலை மோசமாக இருக்கும் எனவும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இதனால் கடைசி நாளில் இந்திய அணியின் வெற்றிக்கு சாத்தியம் இல்லை எனவும், இந்த போட்டியில் இந்திய அணிக்கு தோல்வி அல்லது ஆட்டம் டிரா ஆகும் என கணிக்கப்பட்டது. ஆனால் கபாவில் (பிரிஸ்பேன்) நடந்த கடைசி நாள் ஆட்டத்தில், இந்திய அணி 98 ஓவர்களில் 324 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டி ரோலர்-கோஸ்டர் நாளில் ஒரு அபாரமான வெற்றியை பெற்றுள்ளது.

இந்தியாவின் இந்த வெற்றி போராட்டத்திற்கு சாதனமான தருணங்கள் :

அடித்தளம் அமைத்த சுப்மான் கில் :

324 ரன்கள் வெற்றி இலக்குடன் 5-வது நாளில் களமிறங்கிய இந்திய அணியில், ரோஹித் சர்மா 7 ரன்களுக்கு வெளியேறினார். ஆனால் அதன்பிறகு களமிறங்கிய புஜாரா, சுப்மான் கில்லுடன் சேர்ந்து ரன்கணக்கை உயர்த்தினார். இதனால், இந்திய அணி மதிய உணவு இடைவேளைக்கு முன்பு 83/1 என்ற நிலையில் இருந்தது. உணவு இடைவேளைக்கு பின் 30 நிமிடங்கள் கழித்து, ஆஸ்திரேலியாவின் வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் கில்லுக்கு ஷாட்பால் வீசும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் ஸ்டார்க்கின் ஷாட் பந்துகளை சரியாக கணித்து விளையாடிய கில், சிக்சர் அடித்து அவரின் ஒரு ஓவரில், 20 ரன்கள் குவித்து அசத்தினார். ஆனாலும் சதத்தை நெருங்கிய கில் 91 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அணியை மீட்டெடுத்த ரிஷப் பன்ட் :

கேப்டன் அஜிங்க்யா ரஹானே ஆட்டமிழந்த பிறகு, மாயங்க் அகர்வாலுக்கு முன்னதாக 5-வது விக்கெட்டுக்கு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பன்ட் 5 வது இடத்தில் களமிறங்கினார். ஏற்கனவே 3-வது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பந்த் 99 ரன்கள் குவித்ததால், இந்த போட்டியில், அவர் மீது ரசிகர்களிடையே நம்பிக்கை துளிர்விட்டது. அதற்கு ஏற்றார் போல் ரிஷப் பந்த் அதிரடியாக விளையாடினார். ஆனாலும் பந்த் 40 பந்துகளில் 16 ரன்களுக்கு எடுத்திருந்தபோது, ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயின் ஒரு ஸ்டம்பிங் தவறவிட்டார்.

பன்ட்-புஜாரா கூட்டணி அசத்தல் :

தொடர்ந்து ஆஃப்-ஸ்பின்னர் நாதன் லியோன் பந்தில் இமாலய சிக்சர் விளாசிய  பன்ட் இந்திய அணியை வெற்றி பாதைக்கு திருப்பினார். அடுத்த ஓவரில், மீச்செல் ஸ்டார்க் ஓவரில், அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதற்கிடையே டெஸ்ட் வீரர் புஜாரா ஒரு பவுண்டரி அடித்து தனது அரைசதத்தை கடந்தார். ஆனால் அடுத்த சில நிமிடங்களில் 211 பந்துகளில் 56 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

தனது பங்கை சரியாக செய்த வாஷிங்டன் சுந்தர் :

இந்தியாவுக்கு 42 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அடுத்து களமிறங்கிய தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கம்மின்ஸ் ஓவரில் இமால சிக்சர் அடித்த அவர், 29 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 22 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மறுமுனையில், பன்ட், வியோன் பந்துவீச்சில் தொடர்ச்சியாக பவுண்டரி அடித்து ரன்கள் சேர்த்தார்.

அசத்தலான வெற்றி :

பன்ட் 80 ரன்களில் இருந்தபோது இந்திய அணிக்கு 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 97 வது ஓவரில் முதல் மற்றும் இறுதி பந்தில் பவுண்டரி அடித்த பன்ட் இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார். கடைசி வரை களத்தில் இருந்த பன்ட் 89 ரன்கள் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
India Vs Australia Brisbane Test
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment