கொரோனாவுக்கு எதிரான போரில் தடுப்பூசி முக்கிய ஆயுதமாக பார்க்கப்படுகிறது. இன்னும் ஒரிரு நாள்களில், இந்தியாவில் தடுப்பூசி செலுத்திய எண்ணிக்கை 100 கோடியை தாண்டவுள்ளது.
சீனாவை தவிர, உலகில் எந்தவொரு நாடும் இந்தியா அளவிற்கு அதிகளவிலான தடுப்பூசியைச் செலுத்தியதில்லை. பில்லியன் கணக்கான மக்கள் வசிப்பது வெறும் இரண்டு நாடுகளில் தான்.
ஆரம்பக் காலத்தில் மிகப்பெரிய விநியோக தடையை எதிர்கொண்ட நாடு, தற்போது 100 கோடி தடுப்பூசியை எட்டுவது சிறிய சாதனை அல்ல. குறிப்பிட்ட குறைந்த வெப்பநிலையில் தடுப்பூசிகளின் போக்குவரத்து, விநியோகம் மற்றும் சேமிப்பு ஆகியவை எதிர்கொள்வது கூடுதல் தடைகளாக அமைந்தன. குறிப்பாக 3 மாதங்கள், உலகளவில் மிகப்பெரிய கடுமையான சூழ்நிலையை இந்தியா சந்தித்தது. தடுப்பூசியின் அவசியத்தை மக்கள் உணர்ந்து காலகட்டமும் அதுதான்.
சுமார் 275 நாட்களில் 100 கோடி மைல்கல் சாதனையை இந்தியா எட்டியுள்ளது. முதல் தடுப்பூசி ஜனவரி 16 ஆம் தேதி செலுத்தப்பட்டது. இதை வைத்து கணக்கிட்டால், 10 மாத காலத்தில் தினந்தோறும் சராசரியாக 27 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. ஆனால், தினசரி தடுப்பூசி செலுத்துவதில் வேறுபாடுகள் இருந்தன. ஆறு நாள்களில் 1 கோடி தடுப்பூசியை செலுத்திய இந்தியா, செப்டம்பர் 17 அன்று 2.18 கோடி தடுப்பூசியைச் செலுத்தியது. அதே சமயம், ஆரம்பக்காலத்தின் சூழ்நிலை எதிர்மறையாக இருந்தன. ஜனவரி, பிப்ரவரி பாதி வரை கணக்கிட்டால், மொத்தமாகவே 50 ஆயிரம் தடுப்பூசிகள் மட்டுமே செலுத்தப்பட்டிருந்தன.
அக்டோபர் 16 நிலவரப்படி, மொத்தமாக 97.65 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் 69.47 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. 28 கோடிக்கும் மேலான மக்கள் முழுமையாக இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். எனவே, முதல் டோஸ் தடுப்பூசியை 74 விழுக்காடு மக்களும், இரண்டு டோஸ் தடுப்பூசியை 30 விழுக்காடு மக்களும் செலுத்தியுள்ளனர்.
குறைந்த மக்கள் தொகையில் தடுப்பூசி பணி சிறப்பு
மக்கள் தொகை குறைவாக உள்ள மாநிலங்களில், தடுப்பூசி செலுத்தும் பணி சிறப்பாக உள்ளது. சிக்கிம், இமாச்சலப் பிரதேசம், கோவா மற்றும் யூனியன் பிரதேசங்களான ஜம்மு காஷ்மீர், லடாக், சண்டிகர் மற்றும் லட்சத்தீவுகள் போன்ற மாநிலங்களில், 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு நபரும் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
ஆனால், மக்கள் தொகை அதிகமுள்ள குஜராத், கேரளா, டெல்லி, மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களில் 18 வயதுக்கு மேற்பட்டோர் 90 விழுக்காடு நபர்கள் மட்டுமே முதல் டோஸ் செலுத்தியுள்ளனர். அந்த வகையில், அதிக மக்கள் தொகை கொண்ட பீகார், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், தமிழ்நாடு ஆகியவற்றில் முதல் டோஸ் 70% க்கும் குறைவான மக்களே பெற்றுள்ளனர். இரண்டு டோஸ் தடுப்பூசி 17 முதல் 25 விழுக்காடு மக்கள் செலுத்தியுள்ளனர். ஒரு சில வடகிழக்கு மாநிலங்களில் தான் தடுப்பூசி பணி மந்தமாக உள்ளது.
நகர்ப்புற-கிராமப்புற பாகுபாடு இல்லை
பெரு நகரங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி சிறப்பாக உள்ளது. ஆரம்பத்தில் தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், வேலைக்கு செல்ல தடுப்பூசி கட்டாயம், வெளியூர் பயணிக்க தடுப்பூசி கட்டாயம் போன்ற காரணிகளால் அதிகப்படியானோர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
ஆனால், கிராமப்புறங்களில் தடுப்பூசி எண்ணிக்கையில் மாறுபாடு உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், தடுப்பூசி செலுத்துவதில் கிராமப்புறம் பின்தங்கி இருப்பதாக கூறி, எவ்வித தரவும் இல்லை.
இந்த 243 (Backward Region Grant Fund) மாவட்டங்களில் சராசரியாக, 80% க்கும் அதிகமான மக்கள் (மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011) குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியை பெற்றுள்ளன. இது தேசிய சராசரியை விட அதிகமாகும். இரண்டாவது டோஸ் 30% ஆகும். எனவே, தடுப்பூசி செலுத்துவதில் நகர்ப்புற-கிராமப்புற வேறுபாடு இருப்பதாகத் தெரியவில்லை. தற்போது, மக்கள் தொகை அதிகரித்தால், புள்ளிவிவரங்கள் சிறிய மாறுபாடு இருக்கலாம்.
வேகமெடுக்கும் தடுப்பூசி
கடந்த இரண்டு மாதங்களாக, தடுப்பூசி செலுத்தும் பணி வெகமேடுத்துள்ளது. இந்தாண்டு இறுதிக்குள், அனைவருக்கும் முழுமையாகத் தடுப்பூசி செலுத்தும் இலக்குடன் இந்திய அரசு செயல்படுகிறது. இதைப் பாரத்தால், இன்று முதல் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் 90 கோடி தடுப்பூசிகள் கூடுதலாக செலுத்தவேண்டும்.
செப்டம்பர் மாதத்தில் மட்டும் 23.5 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இது மற்ற எல்ல மாதங்களையும் காட்டிலும் அதிகமாகும். ஆனால், செப்டம்பருடன் ஒப்பிட்டால் அக்டோபரில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் வேகம் குறைந்துள்ளது. அக்டோபர் பாதியைத் தாண்டியுள்ள நிலையில், வெறும் 8.21 கோடி தடுப்பூசிகள் தான் செலுத்தப்பட்டுள்ளன. ஆனால், இதில் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை தான் அதிகமாகும். கடந்த நான்கு நாள்களில், முதல் டோஸ் விட இரண்டாம் டோஸ் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது.
தடுப்பூசியின் பலனாக தொற்று பரவல் வேகம் குறைந்துள்ளது. இந்தியாவின் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் 45 நாட்களுக்குள் 4 லட்சத்திலிருந்து 50 ஆயிரமாகக் குறைந்தது. அடுத்த மூன்று மாதங்களில், கொரோனா பாதிப்பு 25 ஆயிரமாக மாறியது. தற்போது, கொரோனா 20 ஆயிரத்திற்கும் குறைவாக தான் உள்ளது.
நிபுணர்கள் கூற்று ஒன்று தான், தொற்றுக்கு எதிராக தடுப்பூசி முழுமையாக பாதுகாக்காது ஆனால் வீரியத்தையும், பாதிக்கும் வாய்ப்பையும் குறைக்கிறது. எவ்வாறாயினும், தடுப்பூசி தொற்று எதிரான போரில் சிறந்த ஆயுதம் தான்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.